மருத்துவம்

பல வகையான பிரசவ முறைகள்

ஒவ்வொரு கர்ப்பிணிப் பெண்களும், பிரசவ முறைகளைப் பற்றி அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். முடிந்த வரை உங்களுக்கு எந்த பிரசவம் அதிக நன்மைகளைத் தரும் என்பதை உணர்ந்து சரியான முறையைத் தேர்ந்தெடுப்பது நல்லது.

இன்று ஏற்பட்டுள்ள அதீத தொழில்நுட்ப வளர்ச்சியால், பல மருத்துவச் சிகிச்சைகளும், பிரசவ முறைகளும் நடைமுறைக்கு வந்துள்ளன. இவை ஒரு கர்ப்பிணிப் பெண் எந்த உடல் நிலையில் இருக்கின்றாள் மற்றும் அவள் குழந்தை எந்த நிலையில் இருக்கின்றது என்பதைப் பொறுத்து தீர்மானிக்கப் படுகின்றது.

ஒவ்வொரு கர்ப்பிணிப் பெண்களும், பிரசவ முறைகளைப் பற்றி அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக, நீங்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு பிரசவ முறையிலும் நன்மைகள் மற்றும் தீமைகள் இரண்டும் இருக்கின்றன. அதனால், முடிந்த வரை உங்களுக்கு எந்த பிரசவம் அதிக நன்மைகளைத் தரும் என்பதை உணர்ந்து சரியான முறையைத் தேர்ந்தெடுப்பது நல்லது.

வீட்டில் நடக்கும் இயற்கை பிரசவம் (Natural Birth)

இந்த முறை கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு காலமாக வழக்கத்தில் உள்ளது. இந்த முறை நிதானமாக, ஒரு சிலரின் உதவியோடு, எந்த குறுக்கீடுகள் மற்றும் கண்காணிப்பும் இல்லாமல் நடக்கும்.  இந்த முறையைத் தேர்ந்தெடுக்கும் கர்ப்பிணிப் பெண், மூத்தவர்களிடம் அல்லது மருத்துவரிடம் இதைப் பற்றிப் பல விசயங்களைத் தெரிந்து கொண்டு, எப்படி பிரசவ நேரத்தில் நடந்து கொள்ள வேண்டும் என்று தயாராக இருப்பாள். இந்த முறையில், கர்ப்பிணிப் பெண் எப்படி மூச்சுப் பயிற்சி செய்வது,எப்படி தன் மனம் மற்றும் உடலை அமைதியாக வைத்துக் கொள்வது, பல வகை பிரசவ நிலைகளைத் தானாகவே எப்படி சமாளிப்பது, எப்படி தன்னம்பிக்கையோடு இருப்பது என்று  பல விசயங்களை அறிந்து வைத்திருப்பாள். இன்றும் இந்த பிரசவ முறை பல வளர்ந்த நாடுகளில் அதிகம் வழக்கத்தில் உள்ளது. அமெரிக்காவில் சுமார் 2%க்கு மேல் மக்கள் இந்த வீட்டில் குழந்தை பெற்றுக் கொள்ளும் பிரசவத்தை தேர்ந்தெடுக்கின்றார்கள். இது ஒரு அமைதியான மற்றும் பாதுகாப்பான பிரசவம் என்று அவர்கள் கருதுகின்றார்கள்.

இதனால் சுகப் பிரசவம் ஏற்படுவதோடு, தாய் சேய், ஆகிய இருவரும் நல்ல ஆரோக்கியத்தோடு இருப்பார்கள். மேலும் இந்த முறையில் எந்த மருந்துகளும் தேவை இல்லை. இருப்பினும் இந்த முறை பிரசவம் சிறிது பாதுகாப்பு அற்றதுதான்.காரணம் எதாவது எதிர்பாராத சிக்கல் ஏற்படும் போது மருத்துவர் அருகில் இருக்க மாட்டார். ஆக மருத்துவர்கள் மருத்துவமனையில் பிரசவம் பார்ப்பதே சிறந்தது என்று எச்சரிக்கின்றனர்.

சுகப் பிரசவம் (Vaginal Delivery)

சுகப்பிரசவ முறைத் தாய் சேய் இருவரும் எந்த மருந்துகளின் உதவி இன்றி நலமுடன் இருக்க உதவும். இந்த பிரசவத்தால் குழந்தை விரைவாக இயல்பான நிலைக்குப் பிரசவத்திற்குப் பின் வந்து விடுகின்றது. சில நிமிடங்கள் என்றும் கூறலாம். இந்த முறை பிரசவத்தால் தாயும் விரைவாகக் குணமடைந்து இயல்பான நிலைக்கு ஒரு சில நாட்களிலேயே வந்து விடுகின்றாள். இதனால் தேவை இல்லாமல் வயிற்றில் அறுவைசிகிச்சை செய்ய வேண்டிய சூழல் தவிர்க்கப் படுகின்றது. இந்த சுகப் பிரசவத்தால் நோய்த் தொற்று ஏற்படும் வாய்ப்பும் பெரிய அளவு குறைக்கப்படுகின்றது.

லமேஸ் முறை (Lamaze Method)

இந்த முறையின் பெரிய குறிக்கோளே கர்ப்பிணிப் பெண்களுக்கு போதிய தன்னம்பிக்கையை வழங்குதல் மற்றும் வலி தாங்கும் பயிற்சிகளையும், நுணுக்கங்களையும் கற்றுக் கொடுப்பதே.இந்த முறை பிரசவ நேரத்தில் கர்ப்பிணிப் பெண் அதிக சௌகரியத்தோடு இருக்க உதவுகின்றது.கர்ப்பிணி பெண்கள் பிரசவ நேரத்தில் மூச்சு பயிற்சி செய்வதால் அதிகம் அமைதியான மன நிலைக்கு வருகின்றனர். இதனால் பிரசவ வலி பெரிதும் குறைகின்றது. மேலும் இந்த முறையில் மருந்துகள் ஊக்கவிக்கப் படுவதில்லை. எனினும் பெண்களுக்கு இதனைப் பற்றின தகவல்கள் மற்றும் பிரசவ நேரத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற விதி முறைகளும், மருத்துவரால் முன்பே கற்றுக் கொடுக்கப்படுகின்றது. இதன் மூலமாகப் பிரசவ சூழலுக்கு ஏற்றவாறு ஒரு கர்ப்பிணிப் பெண் பிரசவத்திற்கு தயார்ப் படுத்தப்படுகின்றாள்.

பிராட்லி முறை (Bradley Method)

இந்த முறை ஒரு கர்ப்பிணிப் பெண்ணை எப்படி பிரசவத்திற்குத் தயார்ப்படுத்துவது என்பதைப் பற்றிக் கூறும். எந்த மருந்தும் இல்லாமல், யாருடைய உதவியும் இல்லாமல் அந்த பெண் தனக்குத் தானே பிரசவம் செய்து கொள்ள சுமார் 12 வாரங்களுக்கு முன்பே கற்பிக்கப் படுகின்றாள். மேலும் இந்த முறையில் அவள் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகள் பற்றியும் பாேதிய அறிவைப் பெறுகின்றாள்.

தண்ணீர் பிரசவம் (Water Birth)

இந்த முறையில் சில அல்லது அனைத்து பிரசவ நிலைகளையும், பிரசவ நேரத்தின் போது கர்ப்பிணிப் பெண் ஒரு அகலமான சுடு தண்ணீர் இருக்கும் டப்பில் அமர வைக்கப் பட்டு எதிர்கொள்ள உட்படுத்தப்படுகிறாள். குழந்தை தண்ணீரில் பிறக்கும்.  பல பெண்கள் இந்த முறையைத் தேர்ந்தெடுப்பதற்கு ஒரு முக்கிய இது அதிக அமைதியான மனநிலையை ஏற்படுத்துவதாலும், மிகக் குறைவான வலியை தருவதாலும் தான். இந்த முறையை வீட்டிலிருந்தும் பலர் செய்கின்றனர். மேலும் பல மருத்துவமனைகளும் இந்த பிரசவ முறையை பரிந்துரைக்கின்றன.

அறுவைசிகிச்சை பிரசவம் (C-section Delivery)

பல வளர்ந்த நாடுகளில் இதனைப் பெரிதும் பரிந்துரைப்பதில்லை என்றாலும், தாய் மற்றும் சேய்க்கு ஏதாவது ஆபத்தான சூழல் இருக்கும் தருணத்தில் மட்டும் இதனைச் செய்கின்றனர். எனினும், இந்தியாவில் இன்று பெரும்பாலான பெண்கள், தங்களுக்குச் சுகப் பிரசவம் ஏற்பட அனைத்து வாய்ப்புகளும் இருக்கின்றன என்பதை அறிந்தாலும், இந்த முறையை தேர்ந்தெடுக்கின்றனர்.

இதற்கு ஒரு முக்கிய காரணம் இதில் அவர்களுக்குப் பிரசவ நேரத்தில் வலி தெரிவதில்லை என்பது தான். எனினும், தாய் சேய், இதில் யாராவது ஒருவர் ஆபத்தான சூழலில்  இருக்கும் போது, இந்த முறையே சிறந்ததாக இருக்கின்றது. இல்லை என்றால், சுகப் பிரசவம் அல்லது பிற பிரசவ முறையைத் தேர்ந்தெடுப்பதே நல்லது. ஏனென்றால் இந்த பிரசவத்திற்குப் பின் தாய் இயல்பான நிலைக்கு வர பல மாதங்கள் ஆகலாம். மேலும் அதிக ஓய்வும் தேவைப் படும். இதனால் குழந்தையோடு அதிகம் நெருக்கமாக இருக்கும் வாய்ப்பை இழக்க நேரிடலாம். மேலும் குழந்தைக்கும் நோய்த் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker