அயோடின் குறைபாட்டின் அறிகுறிகள்
அயோடின் என்பது ஒரு வகையான சத்துப்பொருள்.தைராக்ஸின் ஹார்மோன் சுரப்பதில் பாதிப்பு ஏற்படுவதால் தைராய்டு குறைபாட்டை உருவாக்குவது அயோடின் பற்றாக்குறைதான்.
மனித உடலுக்கு தினசரி மிகக் குறைவான அளவே ‘150 மைக்ரோ கிராம்’ அயோடின் தேவைப்படுகிறது. குறைவாகத்தானே தேவைப்படுகிறது. இது இல்லாவிட்டால் என்ன? மற்றச் சத்துகள்தான் நிறையவே இருக்கிறது என்று அலட்சியமாக இருந்தால் அவதி தான். முதலில் அயோடின் என்றால் என்ன என்று கேட்டால் பலரும் அது ஒரு வகையான உப்பு என நினைப்பதுண்டு. ஆனால், அது தவறானது. அயோடின் என்பது ஒரு வகையான சத்துப்பொருள்.
ஆறு, நதி, ஏரி போன்ற நீர்நிலைகளை ஒட்டியுள்ள பகுதிகளில் இயற்கையாகவே அயோடின் அதிகமாக காணப்படும். குறிப்பாக, நீர்நிலைகளின் மணற்பரப்பி லும் அயோடின் ஏராளமாக இருக்கும். இந்த அயோடின்தான் கடல்நீரிலும் மிகுந்து காணப்படுகிறது. உப்பில் அயோடின் ஒளிந்திருக்கும் ரகசியம் இதுதான். பச்சைத் தாவரங்களிலும் அயோடின் உள்ளது.
இயற்கையான நீர் நிலைகளின் மூலமாக மனிதர்களுக்குக் கிடைக்க வேண்டிய அயோடின் சத்து பல நேரங்களில் கிடைக்காமல் போய்விடுகிறது. இதனால் அயோடின் சத்து குறைபாடு அதிகம் ஏற்படுகிறது. இதனால் பலவிதமான பாதிப்புகள் உருவாகின்றன. முக்கியமாக தைராக்ஸின் ஹார்மோன் சுரப்பதில் பாதிப்பு ஏற்படுவதால் தைராய்டு குறைபாட்டை உருவாக்குவது அயோடின் பற்றாக்குறைதான்.
சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் மனிதர்களின் உடல் உயரம் மற்றும் பருமனை நிர்ணயிப்பது இது தான். சிலர் உயரமாகவும், சிலர் குள்ளமாகவும், சிலர் பருமனாகவும் இருப்பதற்கு இந்த அயோடினே காரணம். மேலும் அயோடின் பற்றாக்குறை குழந்தைகளில் உடல் வளர்ச்சி மற்றும் மூளை செயல்பாட்டை மந்தமாக்குகிறது. இதனால், பள்ளிப் படிப்பில் செயல்திறன் குறைந்துவிடுகிறது.
மனித உடல் வளர்ச்சியில் வேறுபாடுகளை உருவாக்குவது, உடலிலுள்ள தைராய்டு சுரப்பிகளின் வேலை. இந்த தைராய்டு சுரப்பிகள் கழுத்தில் முன்பக்கமாக குரல் வளைக்கு கீழ் அமைந்துள்ளன. பக்கத்துக்கு ஒன்றாக இரு சுரப்பிகள் இருக்கின்றன. சுமார் 25 கிராம் எடையுள்ள இவை ஒரு திசு மூலம் ஒன்றோடு ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன. இவைகளில் இருந்து தைராக்ஸின் என்ற ஹார்மோன் சுரக்கிறது. இது உடலில் வளர்சிதை மாற்றத்தை கட்டுப்படுத்துகிறது. உடலில் உள்ள அயோடினில் பெரும்பகுதி தைரோகுளோபின் என்ற பொருளாக இருக்கிறது.
காரணம் இல்லாமல் உடல் எடை அதிகரிப்பது அல்லது குறைவது, மலட்டுத் தன்மை, முடி உதிர்வு, சருமத்தில் வறட்சி, குளிர், வெப்பத்தை தாங்க முடியாமை, களைப்பு, மனச் சோர்வு, அதிக வியர்வை, படபடப்பு, எப்போதும் தூக்க கலக்கம், மலச்சிக்கல், வயிற்றுப் போக்கு, கழுத்தில் வீக்கம் போன்றவை அயோடின் குறைபாட்டுக்கான அறிகுறிகளாக இருக்கின்றன. ஆண்களுடன் ஒப்பிடும் போது பெண்களுக்கு தைராய்டு ஏற்படும் அபாயம் 5 மடங்கு அதிகம்.
அயோடின் சத்து உடலில் குறைந்தால் பல்வேறு நோய்கள் உருவாவதை தடுக்க முடியாது. இதில், ஹைபோ தைராய்டிசன் நோய் அபாயகரமானது. இந்நோய் ஏற்பட்டால் கழுத்தில் உள்ள தைராய்டு சுரப்பி வீக்கமடைந்து கழுத்தின் முன் பக்கம் பெரிய கட்டிப் போல் பெருத்துவிடும்.அப்போது தைராய்டு சுரப்பி குறைந்த அளவில் வேலை செய்யும். அதன் விளைவு எடை அதிகரிப்பு, பசியின்மை, குறைவான இதயத் துடிப்பு, குறைந்த வளர்சிதை மாற்றம், மனவளர்ச்சி பாதிப்பு போன்றவை ஏற்படும்.