மாணவர்கள் கவனச்சிதறலை தவிர்ப்போம், சிகரங்களை அடைவோம்…
படிக்கும் படிப்பு எதுவாக இருந்தாலும் திரைப்படங்களில் காட்டப்படுகின்ற மாதிரியான ஒரு கல்லூரி வாழ்க்கை அமைய வேண்டும் என்பதே பல மாணவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
நம் ஒவ்வொருவருக்கும் பள்ளியில் படிக்கும் போதே கல்லூரி வாழ்க்கையை பற்றிய பல கனவுகள் இருந்திருக்கும். முக்கியமாக கிராமப்புற பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் பெரும்பாலானோர் நகர்ப்புறங்களில் உள்ள கல்லூரிகளில் படிக்கவே ஆர்வம் காட்டுகின்றனர். படிக்கும் படிப்பு எதுவாக இருந்தாலும் திரைப்படங்களில் காட்டப்படுகின்ற மாதிரியான ஒரு கல்லூரி வாழ்க்கை அமைய வேண்டும் என்பதே பல மாணவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் திரைப்படங்களின் தாக்கம் மட்டுமே கல்லூரி மாணவர்களிடம் அதிகமாக இருந்து வந்தது. ஆனால் தற்போதைய காலகட்டத்தில் செல்போன் பயன்பாடு கல்லூரி மாணவர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. சராசரியாக ஒரு நாளைக்கு சுமார் முன்னூறு முறைக்கும் மேல் செல்போனால் கல்லூரி மாணவனின் கவனம் சிதறுகிறது.
அதேபோல செல்போனால் சராசரியாக நானூறு முறைக்கு மேல் மாணவிகளின் கவனம் சிதறுவதாகவும் ஆய்வுகள் கூறுகிறது. ஒரு கசப்பான உண்மை என்னவென்றால் இதுவரை இல்லாத அளவிற்கு கல்லூரி மாணவர்களிடம் கவனச்சிதறல் பெருமளவு அதிகரித்துள்ளது. இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியால் பல்வேறு வேலைகளை ஒரே நேரத்தில் செய்யும் கட்டாயம் ஏற்படுவதால் மாணவர்களின் ஒருமுகப்படுத்தும் திறனும் பாதிக்கப்படுவதாக அண்மையில் நடந்த பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
எப்போதும் தங்களை ஒருவித உற்சாக மனநிலையில் வைத்துக்கொள்ள கல்லூரி மாணவர்கள் அதிகம் கவனம் செலுத்துகின்றனர். இதனால் அதிகமாக பொழுதுபோக்கு சாதனங்களை நாடுகின்றனர். அதன் காரணமாக நேர பற்றாக்குறை ஏற்பட்டு அன்றாட வேலைகளை சரிவர செய்ய இயலாமல் பின்னடைவு ஏற்பட்டு தாழ்வுமனப்பான்மை மற்றும் குற்ற உணர்ச்சியால் தவிக்கின்றனர்.
கணினி மற்றும் செல்போன் விளையாட்டுகளை தொடர்ந்து பல மணிநேரம் ஒரே இடத்தில் அமர்ந்து விளையாடுவதனால் பல்வேறு நோய்களுடன் இதயக் கோளாறுகளும் இளம் வயதிலேயே வந்துவிடுகின்றன. எந்த நேரமும் சமூக வலைத்தளங்களில் நேரம் செலவிடுவதால் நல்ல புத்தகங்களை படிக்கும் பழக்கம் கல்லூரி மாணவர்களிடையே வெகுவாக குறைந்து வருகிறது. மேலும் பாட புத்தகங்கள் படிப்பதிலும் நாட்டமின்றி வெறும் தேர்வுக்காக மட்டுமே படிக்கும் அவர்கள் நேர்முக தேர்வுகளில் கேட்கப்படும் அடிப்படை கேள்விகளுக்கு கூட பதில் தெரியாமல் தடுமாறுகின்றனர்.
டீன்ஏஜ் என்னும் இந்த விடலை பருவத்தில் தொடங்கும் கல்லூரி வாழ்க்கை பேராசிரியர்கள் சொல்லித்தரும் பாடங்களை தாண்டி பல அனுபவ பாடங்களையும், படிப்பினைகளையும் சேர்த்தே சொல்லி தருகின்றன. கல்லூரி பருவமும், மாணவப்பருவம் தான் என்பதை சரிவர உணராமல் வயதிற்கு மீறிய செயல்களான படிப்பின் போதே திருமணம், போதை மருந்து பழக்கம், பகைமை உணர்வு போன்றவற்றால் உடல்நலத்துடன் உள்ளநலத்தையும் வீணாக்கி கல்லூரி படிப்பில் பலர் தோல்வி அடைகின்றனர். இத்தகைய நிலைக்கு திரைப்படங்களும், சமூக ஊடகங்களும் ஒரு பெரிய உந்துசக்தியாக செயல்படுகிறது என்பதை நிச்சயம் மறுக்க முடியாது.
செய்துதான் பார்க்கலாமே வீட்டுக்கா தெரியப்போகிறது யார் பார்க்க போகிறார்கள் என சில கூடா நட்பின் தவறான ஊக்கத்தினால் பல தீயப்பழக்கங்கள் கல்லூரி பருவத்திலேயே மாணவர்களிடம் வந்து சேர்ந்துகொள்கிறது. கல்லூரி வாழ்க்கையில் எந்தெந்த பழக்கங்கள் தொற்றிக்கொள்கிறதோ, அதுவே வாழ்க்கையின் அடுத்த பகுதிக்கும் பின் தொடரும். ஆகவே கவனச்சிதறலில் இருந்து நம்மை காத்துக்கொள்ள பின்வரும் முறைகளை பின்பற்றினால் உதவியாக இருக்கும்.
வகுப்பறையில் செல்போனின் இணைய சேவையை அணைத்து வைப்பது நல்லது. இதனால் “நோட்டிபிகேசனால்” உண்டாகும் கவனச்சிதறலை பெருமளவு தவிர்க்கலாம். வாரத்தில் இரண்டு நாட்கள் கட்டாயமாக இணைய பயன்பாட்டை தவிர்த்து நல்ல புத்தகங்களை படிக்க முயற்சிக்கலாம். இதை ஜப்பான் நாட்டில் தற்போது “இன்டர்நெட் பாஸ்டிங்” என்ற முறையில் பின்பற்ற தொடங்கி உள்ளனர். தேர்வுக்கு பத்து நாட்கள் முன்பிலிருந்து இணைய வசதி இல்லாத சாதாரண தொலைபேசியை உபயோகிப்பதால் தேவையற்ற கவனச்சிதறலை தவிர்த்து தேர்விற்கு முழுமையாக தயாராகலாம். வெறும் பொழுதுபோக்கிற்காக உருவாக்கப்படும் சில வாட்ஸ் அப் குழுக்களில் இருந்து வெளியே வருவதால் தேவையற்ற எண்ணங்களின் பாதிப்பிலிருந்து மனது தப்பிக்கும். அதுமட்டுமின்றி நேரடியாக அறிமுகம் இல்லாத நபர்களை சமூக வலைத்தளங்களின் நட்பு வட்டாரத்தில் சேர்ப்பதை தவிர்ப்பதால் வீண் பிரச்சினைகள் தவிர்க்கப்படும்.
நேரம் கிடைக்கும் போது குழுவாக வெளியில் சென்று விளையாடுவதினால் மன ஆரோக்கியத்துடன், உடல் ஆரோக்கியமும் மேம்படும். மேலும் கல்லூரிகளுக்கு இடையே நடக்கும் பல்வேறு போட்டிகளில் பங்கு பெறுவதின் மூலம் செயல்திறனையும் அதிகரிக்கலாம். அனைத்திற்கும் மேலாக பெற்றோர் மற்றும் சகோதரர்களை தினசரி சந்திக்க முடியாவிட்டாலும் தொலைபேசி வாயிலாக அவர்களிடம் பேசி நேரத்தை செலவழித்தால் கல்லூரி நேரத்தில் ஏற்படும் மன அழுத்தங்கள் வெகுவாக குறையும்.
கல்லூரி வாழ்க்கை மட்டுமல்ல அதையும் தாண்டி கவலையற்ற முழுமையான வாழ்க்கை வாழ புதிய தகவல்களை தெரிந்துகொள்ளும் ஆர்வமும், வாழ்க்கையில் முழுமையான ஈடுபாடும், எதையும் சவாலாக ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவமும் அவசியம் தேவை.
ஆக மொத்தத்தில் இன்றைய நவீன உலகின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கல்லூரி வாழ்க்கையில் சக மாணவர்களிடம் நட்பு பாராட்டி ஆசிரியர் மற்றும் பெற்றோர் கொடுக்கும் ஊக்கம் மற்றும் வழிகாட்டுதலை பின்பற்றினால் இன்றைய இளைய தலைமுறை கவனச்சிதறல்களை உடைத்தெறிந்து உயர்ந்த குறிக்கோள்களை சுலபமாக அடையலாம்.