எடிட்டர் சாய்ஸ்

‘வெற்றிக்குத் தேவை உழைப்பு மட்டுமல்ல… பொறுமையும்தான்’ – அனுபவம் சொல்லும் கதை! #MotivationStory

நடுத்தர வயதில் இருக்கும் ஒருவனுக்கு மூன்று ஆண்டுகள் என்பது மிக முக்கியமான காலம். அதில் விளையும் தோல்விகளும் வெற்றிகளும் அவன் வாழ்வின் போக்கைத் தீர்மானிப்பவை. வெற்றிகளைப் பெறுகிறபோது பிரச்னைகள் ஏதுமில்லை. ஆனால் தோல்விகள், தடுமாற்றத்துக்கு உள்ளாக்குகின்றன.

டுத்தவர்களின் பிரச்னைகளுக்கு ஆயிரம் யோசனைகள் வழங்குபவர்கள்கூட தங்களின் பிரச்னைகளில் முடிவெடுக்கத் தடுமாறுவார்கள். தங்களின் நம்பிக்கைக்குரிய ஒருவரிடம் சென்று அதுகுறித்து விவாதிப்பார்கள். அப்படித்தான் ரமேஷ், இன்று சித்தார்த்தைத் தேடி வந்துள்ளான்.

சித்தார்த் அவனுடைய பால்யகால சிநேகிதன். கல்லூரிப் படிப்பை முடித்ததுமே நகரத்தின் ஆரவாரங்களில் இருந்து தன்னை அப்புறப்படுத்திக்கொண்டு மலை கிராமம் ஒன்றில் குடியேறிவிட்டவன். சிறு பண்ணை ஒன்றை விலைக்கு வாங்கி அதோடு தன் வாழ்வை இணைத்துக் கொண்டவன். எப்போதும் நிதானம் இழக்காத சிந்தனையாளன்.

கதை

“சொல் ரமேஷ், கடந்த முறை பார்த்ததைவிட ஒரு சுற்று இழைத்துவிட்டாய். உன் கன்னங்களில் வளரும் தாடியில் நரை வந்துவிட்டது. கண்களைச் சுற்றிக் கருவளையம். இவையெல்லாம் வயதாவதன் அறிகுறி என்று நான் நினைக்கவில்லை. என்னதான் உன் பிரச்னை..?” என்று கேட்ட சித்தார்த்தை நிமிர்ந்து பார்த்தான் ரமேஷ்.

கதை

எங்கிருந்து தொடங்குவது என்று சொற்களைத் தேடிக்கொண்டிருந்தான் ரமேஷ். படிக்கும் காலத்திலேயே தொழில் செய்து முன்னுக்கு வர வேண்டும் என்பதுதான் அவன் லட்சியம். அதற்காகப் பல திட்டங்களை முயன்று உருவாக்கினான். அதில் அவன் மனதுக்குப் பிடித்த ஒரு திட்டத்தைத் தேர்ந்தெடுத்து ஆய்வு மேற்கொண்டான்.

ஒரு தொழில் என்பது, எதிர்காலத்தின் தேவையாய் இருக்க வேண்டும் என்பது அவன் தீர்மானம். அவன் வகுத்திருக்கும் திட்டமும் அப்படியானதுதான் என்று உறுதியாக நம்பினான். மாறிக்கொண்டிருக்கும் உலகில் அது நிச்சயம் நல்ல வாய்ப்புகளை உருவாக்கும் என்றே அவன் ஆய்வு முடிவு சொன்னது. நண்பர்களும் உறவினர்களும் அதில் இருக்கும் ஆபத்துகளை எடுத்துச் சொன்னார்கள். அப்போதும், சித்தார்த் மட்டும்தான் ‘உனக்கு நம்பிக்கை இருந்தால் இதை நீ செய்’ என்றான்.

ரமேஷ் தொழில் தொடங்கி மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், அவன் தயாரிக்கும் பொருள்களுக்கான சந்தை இன்னும் பெரிய அளவில் உருவானதுபோலவே தெரியவில்லை. முதல் ஆண்டில் தயாரித்த பொருள்களே விற்றுத் தீரவில்லை. அடுத்த இரண்டாண்டுகளும் அதை விற்கவே ரமேஷ் படாத பாடுபட்டான். ஒரு வழியாக, இப்போது அனைத்தும் விற்றுத் தீர்ந்துவிட்டன.

நடுத்தர வயதில் இருக்கும் ஒருவனுக்கு மூன்று ஆண்டுகள் என்பது மிக முக்கியமான காலம். அதில் விளையும் தோல்விகளும் வெற்றிகளும் அவன் வாழ்வின் போக்கைத் தீர்மானிப்பவை. வெற்றிகளைப் பெறுகிறபோது பிரச்னைகள் ஏதுமில்லை. ஆனால் தோல்விகள், தடுமாற்றத்துக்கு உள்ளாக்குகின்றன. ரமேஷ் அப்படித்தான் தடுமாறிப்போயிருக்கிறான். லட்சியம் என்பதெல்லாம் மாயை என்பதாகச் சில நண்பர்கள் உபதேசிக்கத் தொடங்கியிருக்கிறார்கள் அவனுக்குள்ளாகவும் நிறைய கேள்விகள்.

கதை

‘தோல்வியை ஒப்புக்கொள்ளத் தயங்குகிறேனோ’ என்று அடிக்கடித் தன் மனதோடு கேட்டுக்கொள்வான். ஆனால், அது உண்மையில்லை என்கிற சமாதானமும் உண்டாகிவிடும்.

அவன் திட்டத்தின் மீது இன்னும் நம்பிக்கை இருக்கிறது. இதே போன்ற பல பொருள்கள், தயாரித்த காலத்தில் வரவேற்பைப் பெறாமல் பிற்காலத்தில் பெருவெற்றியைப் பெற்ற சரித்திரங்களும் உலகில் உண்டு. அப்படித்தான் ‘தனது படைப்பும் ஒருநாள் வெல்லும்’ என்ற நம்பிக்கையும் அவனுள் இருந்தது.

தொடக்கத்தில் இதை ஆதரித்தவன் சித்தார்த் மட்டுமே. ஒருவேளை அவனும் இதன் மீதான நம்பிக்கையை இழந்திருந்தால் தன் முயற்சியைக் கைவிடுவதைத் தவிர ரமேஷுக்கு வேறு வழியில்லை.

அமைதியாக இருந்த ரமேஷிடம், “சொல் நண்பா, என்னதான் உன் பிரச்னை?” என்றான் சித்தார்த்.

ரமேஷ் தன் பிரச்னைகளை விளக்கினான். பொறுமையாகக் கேட்டுக்கொண்டான் சித்தார்த்.

“சரி, ரமேஷ். கொஞ்சம் உன் கவலைகளை மற. என்னோடு வா, ஒரு நடை போகலாம். என் பண்ணையையும் நீ சுற்றிப் பார்த்தாற்போல இருக்கும்.”

ரமேஷ் பதில் பேசாமல் எழுந்து நடந்தான். அறையைவிடத் தோட்டம் குளுமையாக இருந்தது. விதவிதமான மரங்களும் செடிகளும் வளர்ந்திருந்தன. சித்தார்த்தின் கடந்த எட்டாண்டு உழைப்பின் அடையாளமாக அவை பெருமிதத்தோடு நின்றன.

மூங்கில்

ஒவ்வொரு மரத்தையும் ஆசையோடு தொட்டுத் தடவிப் பார்த்துக்கொண்டே நடந்தான் சித்தார்த். கொஞ்சதூரம் போனதும் ஓரிடத்தின் மூலையில் மூங்கில்கள் வளர்ந்திருந்தன. அங்கே போய் நின்று கொண்டான் சித்தார்த். காற்று, அந்த மூங்கில்களுக்கு இடையில் வீசி ஒரு விநோத சத்தத்தோடு வெளியேறிக்கொண்டிருந்தது.

“ரமேஷ், இந்தப் பண்ணையில் நான் முதன்முதலில் விதைத்தது இந்த மூங்கில்களைத்தான். அதன்பின் அதைச் சுற்றிப் பிற மரங்களையும் செடிகளையும் வைத்தேன். சில செடிகள், வைத்த ஒரு வாரத்திலேயே வளர்ந்துவிட்டன. ஒரு சில, ஓரிரண்டு மாதங்களில். சில மரங்கள் ஓரிரு ஆண்டுகளில் வளர்ந்தன.

ஆனால் இந்த மூங்கில், விதைத்ததிலிருந்து 5 வருடம் ஆனது தளிர்விட. இதோடு சேர்த்து விதைத்த செடிகளும் கொடிகளும், ஏன் சில மரங்கள்கூட பூத்துக் காய்த்துப் பின் விழுந்துவிட்டன. ஆனா, இது ஐந்து வருடம் கழித்துதான் தன் தளிர்முகத்தையே காட்டியது. என்னடா, நட்ட விதை வளர வில்லையே என்று நான் வருத்தப்படவேயில்லை. காரணம் எனக்குத் தெரியும். மூங்கில் வளர இத்தனை ஆண்டுகள் எடுக்கும் என்று.

தளிர் விடதான் 5 வருடங்களானது… அதன்பிறகு விறுவிறுவென்று ஓங்கி வளர்ந்துவிட்டது. ஏன் சில நாள்களில் ஒரு மீட்டருக்கும்மேலே வளர்ந்தது. இப்போது இருக்கிற மொத்த உயரமும் ஒரே மாதத்தில் வளர்ந்ததென்றால் நீ நம்புவாயா…” சித்தார்த்தையே பார்த்துக்கொண்டிருந்தான் ரமேஷ்.

“ரமேஷ் உன் தொழில் மட்டுமில்லை. எல்லாத் தொழில்களுக்கும், இந்த விதி பொருந்தும். சில உடனே பலன்தரும். சில கொஞ்ச நாள்களில். சில வருடங்கள்கூட எடுக்கும், இந்த மூங்கில்போல. உனக்குத் தெரியும் உன் தொழில் ஒரு நல்ல விதை என்று. அது முளைப்பதற்கான காலம் வர வேண்டும், அதுதான் பாக்கி. உனக்கு உன் மேலும் உன் விதைமேலும் நம்பிக்கை இல்லையென்றால் நீ தாராளமா இதை விட்டுட்டு வேறு வேலைக்குப் போகலாம்.”

நம்பிக்கை

ரமேஷுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. வளர்ந்து நின்ற அந்த மூங்கில் மரத்தையே பார்த்துக்கொண்டிருந்தான்.

“ரமேஷ், சில தொழில்கள் வெல்வதற்கு நீண்டகாலம் எடுக்கும். அப்படி வெல்கிற தொழில்கள் காலத்துக்கும் நிலைத்திருக்கும். உனக்குத் தெரியுமே, வாரன் பஃபெட் பற்றி. இன்றைக்கு அவர் ஒரு கோடீஸ்வரர். ஆனால், இது உடனே நிகழ்ந்த மாயாஜாலம் இல்லை. முதலீட்டில் அவர் 25 வயதில் இறங்கினார். கொஞ்சம் கொஞ்சமாகப் பங்குகளில் முதலீடு செய்தார். அவர் முதலீடு செய்த பங்குகள் பத்து இருபது வருடங்கள் தூங்கின. ஆனால், 1980-களுக்குப் பிறகு அவரது 50 வது வயதுக்கு மேல்தான் அவையெல்லாம் வேகம் பிடித்தன. அதை அப்படியே தொடர்ந்தார். கோடீஸ்வரர் ஆகிவிட்டார். தொழில் செய்வதில் உழைப்பைப்போலவே பொறுமையும் மிகவும் அவசியம் நண்பா!”

ரமேஷுக்கு எல்லாம் தெளிவாகிவிட்டதைப் போன்று இருந்தது. அதை அவன் முகத்தில் தெரிந்த புன்னகையில் இருந்து சித்தார்த் அறிந்துகொண்டான். ஒரு நிமிடம் அங்கேயே நிற்கச் சொல்லிவிட்டுப் போய் தேநீர் தயாரித்து எடுத்துவந்து நீட்டினான்.

“ரமேஷ், இதோ இந்த இடத்தில் நேற்று ஒரு மர விதையை விதைத்திருக்கிறேன். அது வளர்ந்து கனி தர இன்னும் இரண்டு வருடமாகும். அடுத்த முறை நீ யாளனாகத் திரும்ப வரும்போது அதன் கனியை நீ சுவைக்கலாம்” என்றான்.

ரமேஷுக்கு அப்போதே வெற்றி பெற்றுவிட்ட உணர்வு மேலிட்டது. தேநீரை வாங்கி உறிஞ்சிக்கொண்டே, “நிச்சயமாக நண்பா” என்றான்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker