`பாக்கெட் பால் குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு உதவுகிறதா, மாற்று உண்டா?’ – மருத்துவர்கள் விளக்கம்
புரதம், கொழுப்புச் சத்துக்கள் நிறைந்த பாக்கெட் பால்களுடன் ஒப்பிடுகையில் பசும்பால் ஆரோக்கியமானது.
பால், தயிர், நெய் எனப் பாலின் பங்கு நம் அன்றாட வாழ்வில் அவசியமான ஒன்றாகி இருக்கிறது. அப்படியிருக்க… பாலின் விலை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருப்பதால், சராசரி மக்கள் பாலுக்கு மாற்று என்ன என்பதை யோசிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். பாலின் விலை ஏற்றம் ஒரு புறம் இருக்க,குழந்தைகளின் ஆரோக்கியமான எலும்பு வளர்ச்சிக்குப் பால் அவசியமான ஒன்று என்று நினைக்கிறார்கள் பெற்றோர்கள், பாலுக்கு மாற்றாக வேறு எந்த உணவு குழந்தைகளின் வளர்ச்சிக்கு ஈடு கொடுக்கும் எனத் தாய்மார்களிடையே எழும் கேள்விகளுக்கு விடை காண சென்னையைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர் பிரேம் குமாரைத் தொடர்பு கொண்டு பேசினோம்.
பாலில் கால்சியம் சத்து அதிகமாக உள்ளது என்பது உண்மைதான். ஆனால், அதற்காக வளரும் குழந்தைகளுக்குப் பாலை மட்டுமே உணவாகக் கொடுக்கக் கூடாது. பாலை அதிகமாகக் குடிக்கும் குழந்தைகள் மற்ற உணவுகளைச் சாப்பிட மறுப்பார்கள். இதனால் குழந்தைகளுக்கு மற்ற உணவுகளின் மூலம் கிடைக்கும் புரதம் மற்றும் இரும்புச்சத்து கிடைக்காமல் போகும். இதனால் அடிக்கடி சோர்வு, எதிர்ப்பு சக்தியின்மை, எதிலும் ஆர்வம் இன்றி இருத்தல் போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். எனவே, தினமும் குழந்தைகளுக்குக் காலை 100 மில்லி, மாலை 100 மில்லி என்ற அளவில் பால் கொடுத்தால் போதுமானது.
குழந்தைகளின் உடல் வளர்ச்சி அதிகரிக்க, உயரத்தை அதிகரிக்க எனக் கடைகளில் கிடைக்கும் புரதச்சத்து மாவுகளை வாங்கி பாலுடன் கலந்து குழந்தைகளுக்குக் கொடுப்பதை அவசியம் தவிர்க்க வேண்டும்.
பாக்கெட் பால்களில் உள்ள கொழுப்புச்சத்து காரணமாகக் குழந்தைகளுக்கு அசீரண கோளாறுகள் ஏற்படக் கூடும் என்பதால் கூடுமானவரை குழந்தைகளுக்கு பாக்கெட் பாலினை வாங்கிப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது.
பாலில் தண்ணீர் கலப்பதன் மூலம் பாலில் உள்ள சத்துகள் குழந்தைகளை முழுமையாகச் சென்றடையாது என்பதால் குழந்தைகளுக்கு காய்ச்சும் பாலில் தண்ணீர் கலக்கக் கூடாது.
காய்ச்சாத பாலைக் குழந்தைகளுக்கு ஒருபோதும் குடிக்கக் கொடுக்காதீர்கள்.
காலை உணவுக்குப் பதிலாக ஒரு டம்ளர் பாலைக் குடித்துவிட்டு பள்ளிக்குச் செல்லும் வழக்கத்தைக் குழந்தைகளிடம் ஊக்குவிக்காதீர்கள். இது அவர்களை எளிதில் சோர்வடையச் செய்யும்.
அடிக்கடி பால் குடிக்கும் குழந்தைகளுக்கு மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படும். பாலின் சுவையை மறக்க முடியாமல் அடிக்கடி பால் கேட்டு அழுகும் குழந்தைகளுக்கு பாலுக்குப் பதிலாக உங்கள் வீட்டில் உறையூட்டப்பட்ட தயிரைச் சிறிது பருகக்கொடுக்கலாம்.
சில குழந்தைகளுக்கு பால் ஒவ்வாமையை ஏற்படுத்தும். அவர்களுக்குக் கேழ்வரகு பால், நெல்லிக்காய் சாறு, நெய், பாதாம் போன்றவற்றை பாலுக்கு மாற்றாக கொடுத்து குழந்தைகளின் எலும்பு வளர்ச்சியை மேம்படுத்தலாம்.
பால் தொடர்பாக ஆயுர்வேத மருத்துவத்தில் சொல்லப்பட்டு இருக்கும் தகவல்
ஆயுர்வேதத்தைப் பொறுத்தவரை பால் ஒரு முக்கியமான மருந்தாகும். ஆனால், அது குழந்தைகளின் வளர்ச்சிக்கு அத்தியாவசிய தேவை என்று சொல்ல முடியாது. பாலில் இருக்கும் கால்சியம் சத்துகள் மற்ற உணவுகளிலும் இருக்கிறது. அவற்றைச் சரியான அளவில் எடுத்துக்கொள்வதன் மூலமும் எலும்புகள் வளர்ச்சியைச் சீராக்க முடியும்.
பால் அவசியம் என்று எண்ணும் தாய்மார்கள் குழந்தைகளின் ஜீரண சக்தியைப் பொறுத்து தினமும் 100 மில்லி முதல் 200 மில்லி வரையிலான அளவில் பாலை குழந்தைகளுக்குப் பருகக்கொடுக்கலாம்.
குழந்தைகள் காலை எழுந்த உடன் பாலை பருகக்கொடுக்கக் கூடாது. இது (சளி, மந்தம், செரிமான பிரச்னை, முகத்தில் எண்ணெய் வடிதல்) கபத்தை அதிகரிக்கும். மாலை 4 மணிக்கு மேல்தான் குழந்தைகளுக்குப் பாலை பருக்கக் கொடுக்க வேண்டும் அல்லது இரவு தூங்கும்போது கொடுக்கலாம்.
பால் குடித்த ஒரு மணி நேரத்துக்கு வேறு எந்த உணவையும் கொடுக்கக் கூடாது. இதனால் செரிமான பிரச்னைகளைத் தவிர்க்க முடியும்.
மீன் சாப்பிட்ட அன்று குழந்தைகளுக்குப் பால் கொடுக்கக் கூடாது.
குழந்தைகளுக்குச் செரிமான பிரச்னை உள்ளது எனில், பாலுடன் சிறிது சுக்கு, பனைவெல்லம் கலந்து குடிக்கக் கொடுக்கலாம்.
பால் கொடுத்த பின் திராட்சை, சாத்துக்குடி, ஆரஞ்சு போன்ற புளிப்பு சுவை மிகுந்த உணவுகளைச் சாப்பிடக் கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது.
பால் காய்ச்சும் முறை
பால் காய்ச்சும் சட்டி சுத்தமாக இருப்பது அவசியம். முன்பே கழுவி அடுக்கிவைத்த பாத்திரமாக இருந்தாலும் மீண்டும் ஒரு முறை கழுவி சுத்தம் செய்துகொள்ளுங்கள் .
பசும்பால் வாங்குகிறீர்கள் எனில், தண்ணீர் சேர்க்காமல் பாலை காய்ச்ச வேண்டும். பால் பொங்கியதும் இறக்கிவிடாமல் மிதமான சூட்டில் ஐந்து முதல் ஆறு நிமிடங்கள் கரண்டியால் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். பாலின் வாசனை வீடு முழுவதும் பரவி, பாலின் நிறம் பழுப்பு நிறமாக மாறும் சமயத்தில் இறக்கி ஆறியதும் பருகலாம்.
பாக்கெட் பால் வாங்குகிறீர்கள் எனில், உங்கள் பாலில் இருக்கும் கொழுப்புச் சத்துக்கு ஏற்ப பாலில் தண்ணீர் கலந்து ஏடுகள் படிய பாலைக் காய்ச்சி ஆறவைத்துப் பருகுவது நல்லது.
பாலை இரு முறைக்கு மேல் சுட வைப்பதை அவசியம் தவிர்க்க வேண்டும். அடிக்கடி சூடு செய்வதால் பாலில் உள்ள சத்துகள் ஆவியாக வாய்ப்புகள் உள்ளது.
காய்ச்சிய பாலை ஃப்ரிட்ஜில் வைக்கிறீர்கள் எனில், பயன்படுத்துவதற்கு முன் அறையின் வெப்பத்துக்கு வந்ததும் மீண்டும் காய்ச்ச வேண்டும்.
மீதம் இருக்கும் பாலை உறை ஊற்றி தயிர் ஆக்குகிறீர்கள் எனில், மண் பாத்திரங்களைப் பயன்படுத்தலாம். பானையில் உள்ள துகள்களில் தயிர் அடைத்துக்கொள்ள வாய்ப்பு இருப்பதால் தேங்காய் நார் கொண்டு பானையைச் சுத்தம் செய்து வெயிலில் வைத்து மீண்டும் பயன்படுத்துங்கள்.