ஆரோக்கியம் தரும் அமுதம்
பால், குழந்தைகளுக்கும், சிறுவர்களுக்கும், பெரியவர்களுக்கும் மட்டுமின்றி முதியவர்களுக்கும் உகந்தது. பாலில் இருந்து தயாரிக்கப்படும் மோர், தயிர் ஆகியவையும் ஆரோக்கியத்திற்கு தேவையானவை.
இன்று (ஜூன் 1-ந்தேதி) உலக பால் தினம்.
பால் ஓர் ஆரோக்கியமான சீரான உணவு என்பதில் ஐயம் இல்லை. பாலூட்டி இனம் பூமியில் தோன்றி சுமார் 200 மில்லியன் வருடங்கள் ஆகிவிட்டது என்று கருதப்படுகிறது. பாலூட்டி இனங்கள் தோன்றிய நாளில் இருந்து மறக்காமல் தங்களது குட்டிகளுக்கு பாலூட்டி வருகின்றன.
மகாத்மா காந்தி பசும் பாலைத் தவிர்த்துவிட்டு ஆட்டுப்பாலையே பருகினார் என்பது வரலாறு. பிறந்த குழந்தைக்கு முதல் உணவாக தாய்ப் பால் தான் கொடுக்கப்படுகிறது. முதல் சில தினங்கள் சுரக்கும் சீமப்பால் சத்துகளுடன், குழந்தைகளின் எதிர்ப்பாற்றலுக்கும் உதவுகிறது. இதற்காகத்தான் ஆகஸ்டு மாதத்தில், வருடந்தோறும் தாய்ப்பால் வாரம் அனுசரிக்கப்பட்டு, தாய்ப்பால் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. பிறந்த குழந்தைகளுக்கு, தாய்ப்பாலை தொடர்ந்து ஒரு வருடம் வரை கொடுக்க வேண்டும். முதல் மூன்று மாதத்தில் பசுவின் பாலைத் தவிர்க்க வேண்டும். சிலர் இதை கேட்காமல் கொடுப்பதால், குழந்தைகளுக்கு பல்வேறு தொற்றுகளும் வர வாய்ப்பு ஏற்படுவதுடன், நீரிழிவு நோயும் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. ரத்த வங்கிகள் போல, தாய்ப்பால் வங்கிகள் கூட இங்கு வந்துவிட்டன. தாய்மார்கள் இதனையும் பயன்படுத்திக்கொள்ள கற்றுக்கொள்ள வேண்டும்.
தஞ்சாவூர், திருச்சி, தேனி, மதுரை மருத்துவக்கல்லூரிகளில் இருப்பதைப் போல மொத்தம் 15 தாய்ப்பால் வங்கிகளை தமிழக அரசு அமைக்க இருக்கிறது. தாய்ப்பால் சுரப்பு இல்லாதவர்கள் அல்லது கொடுக்க முடியாதவர்கள் இங்கு வந்து பெற்றுக்கொள்ளலாம்.
நாம் ஆடு, பசு, எருமை, குதிரை, கழுதை, ஒட்டகம் என பல விலங்குகளின் பாலை நீண்ட காலமாக பயன்படுத்தி வருகிறோம்.மேலும் சோயா, தேங்காய், கோதுமை பால், பப்பாளி பால், பாதாம் பால் என பல்வேறு பாலையும் பயன்படுத்துகிறோம். தாய்ப்பாலில் பசுவின் பாலை விட இரும்புச் சத்து அதிகமாக இருக்கும். எருமைப் பாலில் பசுவின் பாலை விட கொழுப்புச் சத்து அதிகம். அதே போன்றே செம்மறி ஆட்டின் பாலில் வெள்ளாட்டின் பாலை விட கொழுப்புச்சத்து அதிகம் உள்ளது.
விலங்குகளில், குதிரைப்பாலில் தான் கொழுப்பு சத்து மிகக் குறைவு. பாலில் கால்சியம், வைட்டமின்கள், தாது உப்புகள், புரதம், லாக்டோஸ், கொழுப்பு ஆகியவை மிகுந்துள்ளன. உடல் ஆரோக்கியம் தரும் அமுதமாக பால் இருக்கிறது.உலக அளவில், பால் உற்பத்தியில், அமெரிக்கா முதலிடம் வகிக்கிறது. நமது நாடு, இரண்டாம் இடத்தில் இருக்கிறது. இந்தியாவில், 1 லட்சத்து 30 ஆயிரம் பால் கூட்டுறவு சங்கங்கள் செயல்படுகின்றன. அரசாங்கத்தின் ஒத்துழைப்பினால் உருவாக்கப்பட்ட ‘தேசிய பால் வளர்ச்சி அமைப்பின்’ மூலம் கிராமப்புற விவசாயிகளிடம் இருந்து பால் பெறப்பட்டு, நிலைப்படுத்தப்பட்டு, பின் கொழுப்பு சத்து செரிவூட்டப்பட்டு பாலாக விற்பனை செய்யும் முறை வந்தது.
தமிழகத்தில், தினந்தோறும் மொத்தம் 1.5 கோடி லிட்டர் பால் விற்பனை செய்யப்படுகிறது. இதில், தனியார் பால் நிறுவனங்களின் பங்கு நாளொன்றுக்கு, 1.25 கோடி லிட்டர் ஆகும். எஞ்சியுள்ள அளவைத்தான் ஆவின் விற்பனை செய்கிறது. புல்கிரீம் பாலாகவும், சமன்படுத்தப்பட்ட பாலாகவும் தற்சமயம் பால் கடைகளில் விற்பனைக்கு கிடைக்கிறது. இவ்வாறு ஒழுங்குபடுத்தப்பட்ட பால் உற்பத்தி, மொத்தமாக கொள்முதல் செய்தல், பதப்படுத்துதல், விற்பனை செய்தல் என்ற நடைமுறை சிறப்பாக நமது நாட்டில் உருவாக காரணமாக இருந்தவர் டாக்டர் வர்க்கீஸ் குரியன் ஆவார்.
இதனால் தான் இந்தியாவில் ஏற்பட்ட பால் உற்பத்தியை, ‘வெண்மை புரட்சி’ என்கிறார்கள். இதற்காக அவருக்கு உலக உணவு பரிசு 1989-ம் ஆண்டு வழங்கப்பட்டது. பாலில் கலப்படம் செய்வது காலம் காலமாய் தொடர்கிறது. பாலின் அளவை அதிகரிக்க அதிக அளவு தண்ணீர் சேர்த்து விற்பார்கள். இதனைக் கண்டுபிடிக்க பால்மானி உள்ளது. அதிக நுரை ஏற்பட சில ரசாயன பொருட்களும் சேர்க்கப்படுகிறது. இதனையும் ஆய்வுக்கூடப் பரிசோதனையில் கண்டுபிடிக்கலாம். வீட்டில் கறந்து வந்து பாத்திரத்தில் பால் கொடுக்கும் காலம் எல்லாம் போய்விட்டது. தற்சமயம் மக்கள் பெரும்பாலும் ஆவின் பாலையே பயன்படுத்துகின்றனர்.
நாம் அனைவரும் பருகும் ஆவின் பாலில், மாவுச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச்சத்து ஆகியவற்றுடன் கால்சியம், பொட்டாஷியம், சோடியம், மெக்னிஷியம், பாஸ்பேட், சிட்ரேட், குளோரைடு, பை கார்பனேட், சல்பேட், வைட்டமின் ஏ ஆகிய சத்துகளும் இருக்கும். இதில் கொழுப்புச்சத்து 3 கிராம் தான் இருக்கும். இது பதப்படுத்தப்பட்ட, பாலாடை நீக்கப்பட்ட பாலாகும்.
பால், குழந்தைகளுக்கும், சிறுவர்களுக்கும், பெரியவர்களுக்கும் மட்டுமின்றி முதியவர்களுக்கும் உகந்தது. குழந்தைகளுக்கும், சிறுவர்களுக்கும் உடல் வளர்ச்சி, எலும்பு, பற்களின் பாதுகாப்பு, எதிர்ப்பாற்றல் ஆகியவற்றிற்கு பயன்படுவது போல, பெரியவர்களுக்கு எலும்பு தேய்மானம், மூட்டு அழற்சியை குறைக்க பயன்படுவதுடன் உணவு போதுமான அளவு உண்ண முடியாதபோது, சிறந்த உணவாகவும் பயன்படுகிறது.
பாலில் இருந்து தயாரிக்கப்படும் மோர், தயிர் ஆகியவையும் ஆரோக்கியத்திற்கு தேவையானவை. கொழுப்புச்சத்து நீக்கப்பட்ட பாலாடை கட்டிகளையும் பயன்படுத்தலாம். பாலில் கொழுப்புச்சத்து உள்ளதால் பெரியவர்கள் பலரும், இது இதய நோயை ஏற்படுத்தும் என்று நினைத்து பாலை தவிர்க்கிறார்கள். கொழுப்புச்சத்து மிகுந்த பால், பாலாடை கட்டிகள், வெண்ணெய், நெய் ஆகியவை தவிர்க்கப்பட வேண்டும். பலருக்கும் பயன்படும் பால் சிலருக்கு சில பிரச்சினைகளை உண்டாக்கலாம். பால் ஒத்துக்கொள்ளாமை அபூர்வமாக சில குழந்தைகளுக்கு ஏற்படும்.
பாலில் உள்ள லாக்டோஸ் என்ற சர்க்கரை சத்தை ஜீரணிக்க முடியாததால் இந்த பாதிப்பு ஏற்படலாம். வயிற்று பொருமல், பேதி ஆகிய தொந்தரவுகள் ஏற்படும். இவர்களுக்கு இந்த சத்து இல்லாத பிற ஊட்ட பானங்களை கொடுக்க வேண்டும். அதாவது, லாக்டோஸ் நீக்கப்பட்ட பாலை கொடுக்க வேண்டும். அரசாங்கம் தயாரிக்கும், ஆவின் பால் தரமானது. இதனை பெரும்பாலான மக்கள் வாங்கி பயன்படுத்துகிறார்கள். பாலினால் சிலருக்கு ஒவ்வாமை ஏற்படலாம். இதன் காரணமாக, இவர்கள் பால் உணவை தவிர்க்க வேண்டிய நிலை ஏற்படும்.