ஆரோக்கியம்

திபெத்திய தியானம் செய்முறை

திபெத்திய தியானம் மட்டுமல்ல, எந்த தியானத்திலும் தேர்ச்சி பெற்று அதை ஒழுங்காகத் தொடர்ந்து செய்து வருபவர்கள் இளமையாகவும், அமைதியாகவும் இருப்பார்கள். இனி திபெத்திய தியான முறையைப் பார்ப்போம்.

திபெத்திய தியானம் செய்முறை

திபெத்திய லாமாக்களும் தியான முறைகளில் நல்ல தேர்ச்சி பெற்றிருந்தார்கள். அவர்களைப் பொறுத்த வரை தியானம் என்பது மனிதன் தன் உண்மையான தன்மையைக் கண்டுணர்வது தான். புத்த மதத்தின் வஜ்ராயனா பிரிவைப் பின்பற்றி வந்த அவர்கள் மனிதன் தன் உண்மையான தன்மையை அறிய அமைதியையும், தெளிந்த அறிவையும் பெற்றிருத்தல் அவசியம் என்று கருதினார்கள்.

எண்ணங்கள் பெரும்பாலும் அந்த இரண்டையும் இருட்டடிப்பு செய்து விடுவதால் தியானம் மூலம் எண்ணங்களை நீக்கி அமைதியையும், அறிவுத் தெளிவையும் பெற்று உண்மையை அறிய வலியுறுத்தினார்கள். அப்படி மனிதன் தன் உண்மைத் தன்மையை அறிந்து கொண்டால் பின் அவன் எல்லையற்ற ஆனந்தத்தையும் நன்மையையும் தன் இயல்பென உணர்ந்து மெய்ஞானம் பெறுவான் என்று நம்பினார்கள்.

தியானத்தில் நல்ல தேர்ச்சி பெற்ற திபெத்திய லாமாக்கள் தோற்றத்தில் இளமையாக இருப்பதையும், சுபாவத்தில் மாறாத அமைதியுடன் இருப்பதையும், பல சக்திகளைப் பெற்றிருந்ததையும் அங்கு சென்று அவர்களைக் கண்ட வெளிநாட்டினர் பலரும் கண்டு அதிசயித்திருக்கிறார்கள். திபெத்திய தியானம் மட்டுமல்ல, எந்த தியானத்திலும் தேர்ச்சி பெற்று அதை ஒழுங்காகத் தொடர்ந்து செய்து வருபவர்கள் யாராக இருந்தாலும் அப்படி ஆவது இயல்பே. இனி திபெத்திய தியான முறையைப் பார்ப்போம்.

தியானம் செய்யப் பொதுவாக அதிகாலை நேரம் சிறந்ததாக திபெத்திய லாமாக்கள் கருதுகிறார்கள். அல்லது எழுச்சியூட்டும் மனநிலையுள்ள சமயங்களும், ஆர்வமுள்ள நேரங்களும் தியானத்திற்கு உகந்தது என்கிறார்கள். கவலையோ, வேறு பிரச்னைகளோ உள்ள சமயங்களில் தியானம் கைகூடாது என்பதால் அதை சரி செய்து விட்டு அல்லது அது குறித்து ஒரு தீர்மானத்திற்கு வந்து விட்டு தியானத்தில் அமரச் சொல்கிறார்கள்.

1) தரையில் சம்மணமிட்டோ, அல்லது நாற்காலியிலோ சௌகரியமாக நிமிர்ந்து அமர்ந்து கொள்ளுங்கள். கைகளைத் திறந்த நிலையில் இடது கையின் மேலே வலது கை இருக்குமாறு அடிவயிற்றருகே (தொப்புளுக்கு இரண்டு அங்குலம் கீழே) வைத்துக் கொள்ளுங்கள். இரு கைகளின் கட்டைவிரல்கள் நுனிகளும் ஒன்றை ஒன்று தொட்டு ஒரு முக்கோணத்தை உண்டாக்கும்படி முத்திரையை உருவாக்குங்கள்.

2) கழுத்தை லேசாகக் கீழே சாய்க்கவும். உங்கள் நுனி நாக்கு வாயினுள் மேல் பற்களின் வேர் பாகத்தைத் தொட்டபடி இருக்கட்டும். கண்களை தாழ்த்தி உங்களுக்கு முன்னால் உள்ள தரையைப் பார்த்தபடி பார்வையை நிறுத்துங்கள். (கிட்டத்தட்ட பாதி கண்கள் மூடியது போல் இருக்கும்). இயல்பாக மூச்சு விடுங்கள். உங்கள் கவனம் மூச்சில் இருக்கட்டும்.

3) ஓரளவு மனம் அமைதியடைந்தவுடன் உங்கள் மனதைக் குவிக்க ஏதாவது ஒரு பொருளைத் தேர்ந்தெடுத்து மனத்திரையில் பாருங்கள். அது ஒரு புனிதப் பொருளாகவோ, உங்களுக்கு உயர்ந்ததாகத் தோன்றும் பொருளாகவோ இருப்பது நல்லது. திபெத்தியர்கள் பெரும்பாலும் புத்தர் சிலையைத் தேர்ந்தெடுக்கிறார்கள். அது சிலுவையாகவோ, அழகான ஒரு பூவாகவோ, உங்கள் குருவின் உருவமாகவோ, உங்கள் தெய்வச்சிலையாகவோ, ஒரு அழகான விளக்கின் தீப ஒளியாகவோ கூட இருக்கலாம்.

4) இனி உங்கள் முழுக் கவனத்தையும் மூச்சிலிருந்து நீங்கள் தேர்ந்தெடுத்த பொருளிற்கு மாற்றுங்கள். அந்தப் பொருளை மனக்கண்ணில் இடைவிடாது பார்ப்பதும், மிகத் தெளிவாகப் பார்ப்பதும் தான் உங்கள் நோக்கம்.

5) மனத்திரையில் அப்படித் தெளிவாகப் பார்ப்பது கண்களைப் பாதி திறந்த நிலையில் உள்ள போது கஷ்டமாகத் தெரிந்தால் கண்களை மூடிக்கொள்ளலாம். ஆனால் மனக்கண்ணில் தெளிவாகவும், இடைவிடாதும் காண்பது முடியாமல் போய் உறங்கி விடவும் வாய்ப்புண்டு. அதைத் தவிர்க்க வேண்டும்.

6) கண்களை மூடிய பிறகு நீங்கள் தேர்ந்தெடுத்த பொருளையே முழுமையாகப் பார்க்க வேண்டும். அதற்குப் பதிலாக சிவப்போ, கருப்போ நிறங்களை நீங்கள் கண்டால் கண்களை மூடியும் கவனம் புறக்கண்ணிலேயே இன்னமும் இருக்கிறது என்று அர்த்தம். நீங்கள் உங்கள் கவனத்தை மேலும் கூர்மையாக்கி, நூறு சதவீத கவனத்துடன் நீங்கள் தேர்ந்தெடுத்த பொருள் மீது கொண்டு வாருங்கள்.

7) மனம் வேறு எண்ணங்களில் சஞ்சரிக்க ஆரம்பித்தால் அதை உணர்ந்தவுடன் மீண்டும் அதை நீங்கள் தியானத்திற்காக தேர்ந்தெடுத்த பொருள் மீதே கொண்டு வாருங்கள். அதைக் கூடுமான அளவு முழுக் கவனத்துடன் பாருங்கள். அதன் சிறப்பு அம்சங்களை உன்னிப்பாகக் கவனியுங்கள். உதாரணத்திற்கு நீங்கள் தேர்ந்தெடுத்தது புத்தர் சிலை என்றால் அந்தப் புத்தர் முகத்தில் தவழும் அந்த பேரமைதியைக் கவனியுங்கள். அவரது புன்னகையைக் கவனியுங்கள். அவர் அமர்ந்துள்ள நிலையைக் கவனியுங்கள்.

அவர் விரல்களின் முத்திரையைக் கவனியுங்கள். இப்படி அந்த சிலையைப் புதுப்புது கண்ணோட்டத்துடன் பாருங்கள். பார்ப்பதை சுவாரசியமாக்குங்கள். ஆனந்தமாக்குங்கள். ஒரு நிலையில் புத்தரே உங்கள் முழுக்கவனத்தையும் ஆட்கொள்வார். உங்களையே கூட நீங்கள் மறந்து புத்தரே எல்லாமாகும் போது தியானம் முழுமையாகிறது. அது சில வினாடிகளே நீடிக்கலாம். மறுபடி மனம் தியான நிலையை இழக்கலாம். ஆனால் அந்த வினாடிகள் தியானம் என்ன என்பதை உங்களுக்கு உணர்த்தி இருக்கும். ஒரு மிகப்பெரிய அனுபவத்தின் முதல் கணத்தை நீங்கள் அனுபவித்திருப்பீர்கள்.

தியானத்தில் மேற்கொண்டு பயணிக்க பயணிக்க அந்த சில வினாடிகள், பல வினாடிகளாகும். நிமிடங்களாகும். உங்கள் கவனம் கூர்மையடையும். தெள்ளத் தெளிவடையும். மனம் அமைதியடையும். சக்தி அடையும். மிக உயர்ந்த சாதனையாளர்கள் அந்த தியான நிலையை தினசரி வாழ்க்கைக்கே கொண்டு வர முடியும். சாதாரண தினசரி செயல்களைக் கூட தியானம் போல் செய்ய முடியும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker