ஆனாபானசதி தியானம்
ஆனாபானசதி தியானத்தின் தியான நிமித்தம் உள்மூச்சு வெளிமூச்சு எனும் சுவாசத்தின் மீது கவனம் செலுத்துதலாகும். இந்த தியானம் குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
ஆனாபானசதி தியானம்
ஆனாபானசதி தியானத்தின்போது அமைதியான ஆள் அரவமற்ற ஒரு இடத்திலே முதுகெலும்பை நேராக வைத்து அமர்ந்து சுவாசத்தின் மீது முழுக்கவனத்தினை செலுத்தியவாறு தியானம் செய்ய வேண்டும், என்பதனையும் நீங்கள் இப்போது அறிவீர்கள். ஆனாபானசதி தியானத்தின் தியான நிமித்தம் உள்மூச்சு வெளிமூச்சு எனும் சுவாசத்தின் மீது கவனம் செலுத்துதலாகும்.
நிமித்தம் எனக்கூறுவது தியானத்தின்போது முழுக்கவனத்தினையும் செலுத்த வேண்டிய விடயமாகும். அதாவது இந்த தியானத்தின்படி உள்மூச்சு மற்றும் வெளிமூச்சு என்பனவாகும்;. இப்போது நீங்கள் உள்மூச்சு மற்றும் வெளிமூச்சு என்பனவற்றின் மீதே உங்கள் முழுக்கவனத்தினையும் செலுத்த வேண்டும். எனவேதான் அது தியான நிமித்தம் எனப்படுகிறது. இதனை தவிர்த்த வேறெந்த நிமித்தத்தினையும் நீங்கள் இந்த தியானத்தினுள் தேட வேண்டாம்.
ஆனாபானசதியினுள்ளேயே அதாவது உள்மூச்சு மற்றும் வெளிமூச்சு என்பவற்றினுள்ளேயே முழுக்கவனத்தினையும் குவிக்க பழக்கப்படுத்திக்கொள்ளும் போது சமாதியை எவ்வாறு விருத்தி செய்ய வேண்டும் என்பதனை நீங்கள் முன்னர் கற்றுக்கொண்டீர்கள்.
சதிபட்டான சூத்திரத்தினை தவிர கிரிமானந்த சூத்திரம், சம்யுக்த நிகாயத்தின் ஐந்தாம் பாகத்திற்குரிய சதிபட்டான சங்யுக்தம், மற்றும் ஆனாபானசதி சங்யுக்தம் என்பனவற்றிலும் இந்த ஆனாபானசதி எனும் மகத்தான தியானம் தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றை நீங்கள் கற்பதனூடாக மென்மேலும் இந்த தியானம் தொடர்பாக அறிந்துகொள்ள முடியும். இவை யாரோ ஒருவரது தனிப்பட்ட கருத்துக்கள் அல்ல. மாறாக அனைத்தையும் உய்த்துணர்ந்து கிலேசங்களை வேரறுத்த நிர்மலமான உள்ளம் கொண்ட புத்த பகவான் ஒருவரது அகத்தில் தோன்றிய உன்னத கருத்துக்களாகும்.
ஆனாபானசதி எனும் தியானத்தினுள் இருப்பது அநித்தியமான மனசிகாரமாகும். உள்மூச்சு மற்றும் வெளிமூச்சு என்பனவையும் அநித்தியமானவையா கும். அதேபோல் இந்த சுவாசம் இயங்கும் உருவம் அநித்தியமானதாகும். நாம் சுக துக்கம் மற்றும் சுகமோ துக்கமோ அற்ற நடுநிலை எனும் அனுபவிப்புக்களை அனுபவிக்கிறோம். உள்மூச்சு மற்றும் வெளிமூச்சு எனும் இரண்டினுள் எண்ணங்களைக்கொண்டு சங்ஸ்காரங்களை தோற்றுவிக்கிறோம்.
இதுவும் அநித்தியம். இந்த உள்மூச்சு மற்றும் வெளிமூச்சு என்பனவற்றினை விஞ்ஞானம் எனும் நுண்னுணர்வினாலேயே அறிந்துகொள்கிறோம். இதுவும் அநித்தியமாகும். நீங்கள் இவ்வாறாக அநித்தியத்தினை சிந்திக்கும்போது அறிவினால் ஆராயும் போது அநித்தியமானதை அநித்தியமானதாகவே காணும் திறன் உருவாகும்.