எடிட்டர் சாய்ஸ்

ஆப்ஸை மட்டுமல்ல… அருகிலிருக்கும் மனிதர்களையும் நம்புங்கள்! #FeelGoodStory

வாழ்க்கையைப் போலத்தான் பயணமும், ஏற்கெனவே அந்தவழி கடந்துபோனவனை விடச் சிறந்த வழிகாட்டியில்லை. ஆனால், மனிதர்கள் மீதான ஒவ்வாமை அதிகரித்துள்ள இந்தக் காலகட்டத்தில் நாம் அந்த வழிகாட்டியைப் பொருட்படுத்தாது செயலிகள் கூட வாழக் கற்கிறோம்.

மனித நடமாட்டமற்ற அந்தப் பிரதேசத்தில் `பளீர்’ எனப் பரவிக்கிடந்தது, வெயில். நண்பன், அலைபேசியையே பார்த்துக்கொண்டிருந்தான். இருசக்கர வாகனத்திலிருந்து இறங்கி நான்கு திசைகள் நோக்கியும் திரும்பி நின்றான். அதன்பிறகும் அவன் முகத்தில் நம்பிக்கைக்கான அறிகுறி சுத்தமாக இல்லை. இவ்வளவு நேரம் வழிநடத்திய அலைபேசி, தற்போது, சிக்னல் இல்லாமல் தன் கடமையிலிருந்து தவறிவிட்டது.

“சுத்தமாக சிக்னல் இல்லை. பாதை, வலதுபுறம் திரும்பியது போலப் பார்த்த ஞாபகம். ஆனால் இந்த இடத்துல எந்தத் திருப்பமும் இல்லை. இப்படியே எவ்வளவு தூரம் போறது? ஏற்கெனவே 10 கி.மீ மேல வந்தாச்சு.”

என் கருத்தைக் கேட்கிறானா அல்லது புலம்புகிறானா என்று குழப்பமாக இருந்தது. நெடுஞ்சாலையிலிருந்து உள்பக்கமாகத் திரும்பும்போது அங்கு சில கடைகள் இருந்தன. சில வயசாளிகள் கூட நின்றிருந்தார்கள். அங்கேயே யாரிடமாவது விசாரிக்கலாம் என்றபோது நண்பன், அலைபேசியில் `மேப் நேவிகேட்டர்’ போட்டிருப்பதாகவும், யாரிடமும் விசாரிக்கத் தேவையில்லை என்றும் சொன்னான்.

எப்பொழுதோ ஒருமுறை, நண்பன் யாரிடமோ வழி விசாரித்திருக்கிறான். அந்த நபர் தவறாக வழிநடத்த கொஞ்சம் சுற்றியலைய நேரிட்டிருக்கிறது. அன்றிலிருந்து யாரையும் விசாரிக்கவே அவர் அஞ்சத் தொடங்கிவிட்டார். மனிதர்களைவிட அலைபேசி சொல்லும் வழியில் அவருக்கு அசாத்திய நம்பிக்கை.

பொதுவாகவே, இப்போதெல்லாம் நாம் மனிதர்களை விட இயந்திரங்களை நம்பப் பழகிக் கொண்டோம். இயந்திரங்களையும், மொபைல் ஆப்ஸை நம்புவதில் தவறில்லை. ஆனால், மனிதர்களை முழுவதுமாகத் தவிர்த்துவிட்டு, செயலிகளின் அடிமைகளாவதுதாம் சிக்கல்.

வழிகாட்டுவதற்கு என்று இல்லை, பேசுவதற்கு, பழகுவதற்கு, அன்பு செய்வதற்கு, எல்லாமே இப்போது செயலிகளோடுதான்.
செயலிகள் சூழ் உலகில் இன்று புதிதுபுதிதாய்ச் சிக்கல்கள். சமூக ஊடகத்தில் நண்பர் என்று அறிமுகமானவர்கள் அனைவரும் நண்பர்களாக இருக்கிறார்களா என்ன? இன்றைக்குச் செய்திகளில் இடம்பெறும் பெரும்பான்மையான குற்றங்களில் இந்தச் செயலிகளின் பங்கு கணிசமானவையாக இருக்கிறது. ஒருவிதத்தில் இந்தச் செயலிகள், அருகிலே இருக்கும் மனிதர்களிடமிருந்து நம்மை விலக்கி வைக்கிறது. ஆனாலும் மனிதர்கள், அதோடு அப்படி ஒரு அன்னியோன்னியம் காட்டுகிறார்கள்.

app

குழந்தைகளுக்கான கார்ட்டூன் ஒன்றில் சிறுமி ஒருத்தி பயணித்துக்கொண்டேயிருப்பாள். அவள் பையில் ஒரு மேப் இருக்கும். பேசும் திறன்படைத்த மேப். அது, அந்தச் சிறுமியை செல்லவேண்டிய இடத்துக்கு வழிநடத்தும். வெறும்வழியை மட்டும் சொல்வதில்லை. செல்லும் வழியில் இருக்கும் சிரமங்களையும், தடைகளையும் அது பட்டியலிடும்.

திசைக்காட்டிகள், செல்லவேண்டிய திசையை மட்டுமே காட்டும். ஆனால், அதனருகே நிற்கும் மனிதன், அந்த வழியைப் பற்றி அறிந்தவனாக இருந்தால், வெறுமனே கைகாட்டுவதோடு நின்றுவிடுவதில்லை. பயணப்படும் ஓர் அனுபவம்போல அதைச் சொல்லிக்காட்டுவான். அவன் விவரிக்கும் பாதை, இடையில் ஏற்படக்கூடிய குழப்பங்கள், கவனம் கொள்ளவேண்டிய விசயங்கள் என்று இருக்கும். சில கிராமங்களில் கூடவே வந்து வழிகாட்டுவதை அனுபவித்ததில்லையா என்ன?

வாழ்க்கையைப் போலத்தான் பயணமும், ஏற்கெனவே அந்தவழி கடந்துபோனவனை விடச் சிறந்த வழிகாட்டியில்லை. ஆனால், மனிதர்கள் மீதான ஒவ்வாமை அதிகரித்துள்ள இந்தக் காலகட்டத்தில் நாம் அந்த வழிகாட்டியைப் பொருட்படுத்தாது செயலிகள் கூட வாழக் கற்கிறோம்.

ஒரே இடத்துக்கு நான்கு பாதைகளையும், அவற்றின் தொலைவுகளையும், எந்த வழி சீக்கிரம் கொண்டு செல்லும் என்றும் சொல்லும் செயலியை எப்படித் தவிர்க்கமுடியும். அதேவேளையில் அந்தச் செயலி நீங்கள் செல்லும் பாதைகளை எல்லாம் பதிவெடுத்துப் பாதுகாத்து வைத்துக் கொள்கிறது. ஒரு நிறுவனம் நீங்கள் செல்லும் வழிகளில் எல்லாம் கண்காணிக்கிறது. உணவகத்தில் நுழைந்ததும், நீங்கள் இங்கு இருக்கிறீர்கள், இதைப் பற்றிச் சொல்லுங்கள் என்று கேட்கிறது. மேலோட்டமாகப் பார்த்தால், அவை எல்லோருக்கும் உதவுவதுபோலத் தோன்றினாலும், தனிமனிதச் செயல்பாடுகளைக் கண்காணித்து அவனது அந்தரங்கத்தைப் பதிவுசெய்கிறது. இதுகுறித்த விழிப்புணர்வு தற்போது ஏற்பட்டிருக்கிறது. உலகெங்கும் மக்கள், நிறுவனங்கள் தங்கள் நடவடிக்கையைப் பதிவு செய்வதை எதிர்க்கிறார்கள். இன்று அவற்றைத் தடுக்கும் வசதியும் வந்துவிட்டது.

apps

செயலிகளைப் பயன்படுத்துவது தவறில்லை. ஆனால், அளவுக்கு அதிகமான பயன்பாடுதான் பிரச்னை. எங்கெல்லாம் அருகிருக்கும் மனிதர்களோடு பேச, பழக, அன்புகாட்ட முடிகிறதோ அங்கெல்லாம் செயலிகளால் சிக்கல்கள் எழுவதில்லை.

நண்பனால் வெயிலில் நிற்கமுடியவில்லை. அங்கிருந்த சின்ன மரத்தின் நிழலுக்குப் போய் நின்றுகொண்டான். நான், யாராவது வழிகாட்ட வருவார்களா என்று பார்த்துக் கொண்டிருந்தேன். தொலைவில் ஒரு பெரியவர் இரண்டு மாடுகளை ஓட்டிக்கொண்டு அந்த வழிவந்தார். உடனே நண்பன் உற்சாகமானான்.

இருவரும் அவர் வரும்வரை சாலையின் நடுவில் நின்றோம்.

“யாரு தம்பி, எங்க போணும்?” அவரே விசாரித்தார். சொன்னோம்.

“அடடா, ரொம்ப தொலைவு வந்துட்டீங்களே, இப்படியே ஒரு அஞ்சு நிமிசம் வண்டிலையே போங்க. போற வழில ஒரு பெரிய மரம் ஒண்ணு நிக்கும். அதுக்குப் பக்கத்திலையே சரளைக் கல்லுல ரோடு ஒண்ணு போகும். அதுல போனா…”

ஆப்ஸ்

அவர் விவரமாக வழியைச் சொன்னார். நன்றி சொல்லிவிட்டு வண்டியைத் திருப்பி, சொன்ன வழியிலேயே சென்றோம். சில நிமிடங்களில் நாங்கள் சென்று சேர வேண்டிய ஊர் வந்துவிட்டது. ஊருக்குள் போகவேண்டிய வீட்டினைக் கண்டுபிடிப்பது சிரமமாக இல்லை.

நண்பன் மகிழ்ச்சியடைந்தவனாக, “கடவுள்மாதிரி வந்தாருப்பா அந்தப் பெரியவரு ” என்றான். அப்போது அவன் கையில் இருந்த அலைபேசி, “யுவர் டெஸ்டினேஷன் இஸ் ஆன் தி ரைட்” என்றது.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker