தீ விபத்தில் சிக்கியவர்களுக்கு முதலுதவி அளிப்பது எப்படி?
விபத்துகளின் மூலமாக ஏற்படும் காயத்திற்கும், தீக்காயத்திற்கும் நிறைய வேறுபாடுகள் இருப்பதால் இரண்டுக்கும் ஒரே மாதிரியான சிகிச்சையை நாமாகவே எடுத்துக்கொள்ளக் கூடாது.
தீப்புண்ணில் கிருமிகள் தொற்று ஏற்படும் ஆபத்து அதிகம். எனவே அசுத்தம் மற்றும் கிருமிகள் புண்ணில் படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். கடுமையான தீக்காயங்களுக்கு அதன்மீது காற்றுப்படாமல் மூடி பாதுகாக்க வேண்டும். இது வலியை குறைக்கும்.
தீ விபத்தில் உடலின் மீது துணி ஒட்டிக் கொண்டிருந்தால் அவசரப்பட்டு அந்த துணியை அகற்றக் கூடாது. தீக்காயங்கள் அதிகம் ஏற்பட்டிருந்தால் பாதிக்கப்பட்டவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும். மண்எண்ணெய், பெட்ரோல் உள்ளிட்ட எண்ணெய் பொருட்களால் தீ விபத்து நிகழ்ந்தால் அங்கே தண்ணீர் ஊற்றக் கூடாது. மீறி ஊற்றினால் அது எரிகின்ற எண்ணெயை மேலும் பரவச் செய்துவிடும்.
ஒருவரின் ஆடையில் தீப்பற்றி விட்டால் உடனே தண்ணீரை அவர் மேல் ஊற்றி தீயைப் பரவவிடாமல் அணைக்கலாம். அல்லது கம்பளி, ஜமுக்காளம் போன்ற தடிமனான துணியைக் பாதிக்கப்பட்டவர் மீது போர்த்தி அவர்களை தரையில் உருளச் செய்தாலும் தீ அணைந்து விடும். வீடுகளில் சமைக்கும்போது கொதிக்கும் வெந்நீர் அல்லது எண்ணெய் கைதவறி உடம்பில்பட வாய்ப்பு உண்டு. இதனால் தோல் வெந்து கடும் எரிச்சல் ஏற்படும். இம்மாதிரியான சமயங்களில் பாதிக்கப்பட்ட இடத்தில் ரசாயன கலவையான பேனா மை, காபித்தூள் போன்றவைகளை பூசக் கூடாது. இது மேலும் புண்களில் நோய்த் தொற்றுக்கு வழிவகுக்கும். தீக்காயத்தால் ஏற்பட்ட கொப்பளங்களை கூரிய பொருட்களால் குத்தி உடைப்பது தவறானது. இதுவும் நோய்த்தொற்றுக்கு வழிவகுக்கும்.
தீக்காயத்தை மூன்று வகையாக பிரிக்கலாம். மேல்தோல் மட்டும் சிவந்துவிடுதல் முதல் நிலை பாதிப்பு, தோலின்மேல் கொப்புளங்கள் உண்டாவது இரண்டாம் நிலை, மேல்தோல், கீழ்தோல், அதற்கு அடியில் உள்ள திசுக்கள் வரையிலும் ஆழமாகத் தீயால் கருகிவிடுவதை மூன்றாம் நிலை என்கிறார்கள். தீப்பிடித்தவர் பதற்றத்தில் அங்கும் இங்குமாக ஓடினால் தீயின் வேகம் கூடி பாதிப்பு அதிகரிக்கும். ஆகவே பதற்றப்படாமல் கவனமாக அவரை காப்பாற்ற முயற்சிக்க வேண்டும்.
பாதிக்கப்பட்டவரின் உடம்பில் சுத்தமான காற்றுபடுமாறு பார்த்துக் கொள்வது நல்லது. ஒரு போதும் தீக்காயத்தின் மீது சோப்பு உபயோகித்து கழுவக்கூடாது. எண்ணெய் மற்றும் அமிலத்தால் ஏற்பட்ட தீ விபத்துகளுக்கு மணலை உபயோகித்து நெருப்பை அணைக்க முயலுங்கள். மற்ற தீவிபத்துகளை நீரூற்றி அணைக்க முயற்சி செய்யுங்கள். தீ விபத்துகளின்போது அதில் சிக்கியவர்களை மீட்பது குறித்தும், காயம் அடைந்தவர்களுக்கு முதலுதவி அளிப்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.