பெற்றோர் ஆரம்பத்தில் இருந்தே இரண்டு குழந்தைகளிடமும், எது சரி, எது தவறு… தவறு செய்தால் என்ன தண்டனை என்பதைப் பற்றியெல்லாம் தெளிவாகச் சொல்லிவிட வேண்டும். குழந்தைகள் அதை மீறும் பட்சத்தில், அவர்களுக்கு ஏற்கெனவே குறிப்பிட்டவாறு என்ன தண்டனையோ அதைச் சரியாக, உடனே வழங்கவேண்டும். உதாரணமாக, சண்டையின் போது தவறான வார்த்தைகளைப் பிரயோகிக்கும் குழந்தைக்கு, மூன்று நாள்கள் வீட்டில் ரிமோட்டின் மீதான உரிமையைத் தடை செய்யலாம்.
சண்டை குறித்த பஞ்சாயத்து பெற்றோரிடம் வரும்போது, யார் விட்டுக் கொடுக்கிறார்களோ அவர்களுக்குப் பரிசு கொடுக்கலாம். அதேபோல, நல்ல செயல்பாடுகளில் ஒற்றுமையாக அவர்கள் ஈடுபடும்போதும் இருவருக்கும் பரிசு கொடுக்கலாம், அவர்களைப் பிறர் முன்னிலையில் பாராட்டலாம்.
இரண்டு குழந்தைகளையும் நிச்சயமாக ஒப்பிடக் கூடாது. முதல் குழந்தையிடம், ‘உன் தங்கையைப் பார்த்துக் கத்துக்கோ’ என்பது, ‘உன் வயசில் அக்கா அழகா ரைம்ஸ் சொல்லுவா’ என்பது… இதுபோன்ற உரையாடல்களைப் பெற்றோரும் மற்றவர்களும் அறவே கைவிட வேண்டும். ஏனெனில், இரண்டு குழந்தைகளிடம் இடைவெளியும் வெறுப்பும் அதிகரிக்க இதுவும் முக்கியக் காரணம்.
குழந்தைகள் எல்லாப் பொருள்களையும் தங்களுக்கு இடையில் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதில்லை. அவர்கள் இருவருமே தங்களுக்கு மட்டுமேயான பிரத்யேக பொருள், பொம்மையை வைத்துக்கொள்ளும் உரிமையைப் பெற்றோர் கொடுக்க வேண்டும். அதை ஷோ் செய்யச் சொல்லி வற்புறுத்தக் கூடாது. பதிலாக, ‘அது அவனுடையது, தரமாட்டான். உனக்கு இது இருக்கு’ என்று அவர்களைப் பழக்கப்படுத்த வேண்டும்.
இரு குழந்தைகள் இருக்கும்போது, எப்போதும் ஒரு குழந்தையை மட்டுமே முன்னிறுத்திப் பாராட்டுவது நல்லதல்ல. ‘அவன் அம்மா செல்லம், இவ அப்பா செல்லம்’ எனச் சொல்வதும் சரியான அணுகுமுறை அல்ல.
ஒரு பொருளுக்காக இரண்டு குழந்தைகளும் கத்தி ஆர்ப்பாட்டம் செய்யும்போது, அவா்களுக்கு வார்த்தைகளால் தங்கள் தேவைகளைப் பேசக் கற்றுக்கொடுப்பது மிகவும் அவசியம். பெற்றோர் அவர்களின் பிரச்னையில் குறுக்கிடும்போது, யார் பக்கமும் சாயாமல், இருவர் மீதும் கோபம் கொள்ளாமல், அவா்களுக்கு என்ன வேண்டும், மற்றும் அது ஏன் வேண்டும் என்பதை, இருவரையும் சரியான வார்த்தைகளால் சொல்லச் சொல்லிக் கேட்க வேண்டும். பின்னர் இருவருக்கும் நஷ்டமில்லாத முடிவை அவா்களையே யோசிக்கச் சொல்லும் முறையால், அவா்களின் சிந்தனைத்திறன் அதிகரிக்கும்.
கோபத்தைக் கையாளும் முறையைக் குழந்தைகள் பெரும்பாலும் பெற்றோரிடம் தான் கற்றுக் கொள்கின்றனா். எனவே, கோபமாக இருக்கும்போது பெற்றோர், தவறான வார்த்தைகளைப் பிரயோகிப்பது, கதவை அடித்துச் சாத்துவது, பொருளை வீசுவது, சுவரில் முட்டிக் கொள்வது போன்ற விஷயத்தில் ஈடுபடாமல், தெளிவாகப் பேசித் தீா்த்துக் கொண்டால் குழந்தைகளும் அப்படியே செய்வார்கள்.
வாரம் ஒருமுறை பெற்றோர் இரண்டு குழந்தைகளையும் அழைத்து, அவர்களுக்கு ஏதேனும் மனக்கசப்பு, கோபம், வெறுப்பு இருப்பின் அதைப் பேசச் செய்து, அந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண்பது, அவா்களுக்குப் பெற்றோர் மீதான நம்பிக்கையைப் பலப்படுத்தும்.
உடன் பிறந்தோர் உறவு என்பது நட்பும் ரத்த பந்தமும் இரண்டறக் கலந்தது. பிற்காலத்தில் இருவரும் ஒருவரிடம் ஒருவர் எப்படி நடந்துகொள்வார்கள் என்பதற்கான அடிப்படை, அவர்களின் குழந்தைப் பருவத்தில் இருந்துதான் ஆரம்பிக்கிறது. அந்த உறவைப் பலப்படுத்த வேண்டியது, பெற்றோரின் பொறுப்பு!