ஆரோக்கியம்புதியவை

உடல் எடையை குறைக்க நடைப்பயிற்சி மட்டும் போதுமா?

உடல் எடையை குறைக்க நடைப்பயிற்சி மட்டும் போதுமா?

உடல் எடை குறைக்க உடற்பயிற்சி மிகவும் முக்கியம். உடல் பருமன் உடையவர்கள் முதலில் மருத்துவர்களிடம் சென்று சர்க்கரை பரிசோதனை,ரத்த அழுத்தப் பரிசோதனை மற்றும் இதயப் பரிசோதனை ஆகியவற்றைச் செய்துகொள்ள வேண்டும். ஒவ்வொருவரின் பி.எம்.ஐ அளவைப் பொறுத்தும் அவர்களது உடல்நிலையைப் பொருத்தும் உடற்பயிற்சிகள் மாறும். அனைவருக்கும் நடைப்பயிற்சி ஏற்றது.

உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள், முதலில் வாக்கிங் செல்ல ஆரம்பிக்கவேண்டும். ஆரம்பத்திலேயே அதிக தூரம் நடக்கக் கூடாது. இரண்டாவது வாரம், நடைப்பயிற்சி செய்யும் தூரத்தை அதிகரிக்க வேண்டும். ஒவ்வொரு வாரமும் படிப்படியாக அதிகரித்து, ஆறு மாதத்திற்குள், ஒரு மணி நேரத்தில் ஐந்து கிலோ மீட்டர் நடக்கப் பழகிக்கொள்ள வேண்டும்.

நடைப்பயிற்சி செய்தால் ஆரம்பத்தில் எடை குறையும். ஆனால், குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு, எடை குறையாது. ஆனால், எடை கட்டுக்குள் இருக்க, நடைப்பயிற்சி செய்யும் வேகத்தை அதிகரிக்க வேண்டும். டிரெட்மில்லில் நடப்பவர்கள், அந்தக் கருவியில்  உள்ள ஒவ்வோர்  இலக்கையும் படிப்படியாக முடிக்க முயற்சிக்க வேண்டும்.

உடல் எடையைக் குறைக்க நடைப்பயிற்சி தூண்டுகோல் மட்டுமே. நடைப்பயிற்சியுடன் தசைகளை வலுவாக்கும் பயிற்சிகளையும் சேர்த்துச் செய்தால் மட்டுமே, உடல் எடை நன்றாகக் குறையும்.

கார்டியோ பயிற்சிகள் (நடைப்பயிற்சி, ஜாகிங், சைக்கிளிங் ) 60 சதவிகிதமும் தசைகளை வலுவாக்கும் பயிற்சிகள் (புஷ் அப், ஸ்குவாட், பளு தூக்கும் பயிற்சிகள்) 40 சதவிகிதமும் செய்தால் உடல் எடை குறையும்.

அதிக அளவு உடற்பயிற்சி செய்தால், சீக்கிரமே உடல் எடை குறையும். ஆனால், சீக்கிரமாக உடல் எடையைக் குறைக்கும் முறை உடலுக்கு ஏற்றது அல்ல. வாழ்நாள் முழுவதும் அதிக அளவு உடற்பயிற்சி செய்ய முடியாது. எனவே, தினமும் 300 -500 கலோரிகளை எரிக்கும் அளவு உடற்பயிற்சி செய்தால் போதுமானது.

வெறும் செருப்பு போட்டுக்கொண்டு நடைப்பயிற்சி செய்யக் கூடாது. டிராக் ஸூட் , ஷூ அணிந்துதான் நடைப்பயிற்சி, ஜாகிங் செல்ல வேண்டும்.

எந்த நேரத்திலும் உடற்பயிற்சி செய்யலாம். எனினும் காலை வேளையில் உடற்பயிற்சி செய்வது உற்சாகம் தரும். உடற்பயிற்சி செய்யும்போது எண்டார்பின் என்னும் அமிலம் சுரக்கும். இது மகிழ்வான உணர்வைத் தரும். எனவே, அன்றைய தினம் வேலைகளைச் சுறுசுறுப்பாக செய்ய முடியும்.

ஒரு நாளைக்கு 40 நிமிடங்கள் முதல் அதிகபட்சம் 90 நிமிடங்கள் வரை உடற்பயிற்சி மேற்கொண்டால் போதுமானது. குடும்பத்தினருடன் ஒன்றாக நடைப்பயிற்சி, உடற்பயிற்சி செய்வது ஊக்கம் அளிக்கும்.

ஜிம்மில் உடற்பயிற்சி மேற்கொள்ளத் திட்டமிடுபவர்கள், ஆர்வக்கோளாறாக எல்லா கருவிகளையும் பயன்படுத்தக் கூடாது. முதல் 10 நாட்கள் வெறும் நடைப்பயிற்சி மட்டுமே செய்ய வேண்டும். உடற்பயிற்சியாளர் அனுமதியுடன் மட்டுமே, பளு தூக்கும் பயிற்சிகளில் ஈடுபட வேண்டும்.

வீட்டில் எடை பார்க்கும் இயந்திரம் ஒன்று வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். தினமும் காலை வெறும் வயிற்றில் எடை பார்த்துக் குறித்துக்கொள்ளுங்கள். ஒரு கிலோ அல்லது அதற்கு மேல் ஒரே நாளில் அதிகரித்து இருந்தால், அன்றைய தினம் உணவில் சிக்கனத்தையும் உடற்பயிற்சியில் கூடுதல் அக்கறையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

நடைப்பயிற்சி முடிந்த உடனே காபி,டீ குடிக்கக் கூடாது. 20 நிமிடங்கள் கழித்து தேவையான அளவு தண்ணீர் அருந்தலாம். நடைப்பயிற்சி, உடற்பயிற்சி செய்த பின்னர், நன்றாகக் குளித்த பின்னர், உணவு அருந்தலாம்.

சாப்பிட்ட உடன் உடற்பயிற்சி செய்யக் கூடாது. இரண்டு மணி நேரம் கழித்துத்தான் உடற்பயிற்சி செய்யவேண்டும். உடற்பயிற்சி செய்யும்போது, திடீர் தாகம் எடுத்தால் 20-30 மி.லி அளவுக்கு மட்டும் தண்ணீர் குடித்தால் போதுமானது. உடற்பயிற்சி செய்யும்போது, அதிக அளவு தண்ணீர் குடிக்கக் கூடாது.

டி.வியில் வரும் விளம்பரங்களை நம்பி வயிற்றில் அதிர்வுகளை ஏற்படுத்தும் கருவிகள், இடுப்புத் தசைகளைக் குறைக்கும் கருவிகள் போன்றவற்றை  வீட்டில் வாங்கி வைத்து பயிற்சிகளை மேற்கொள்ளக் கூடாது.செயற்கை முறையில் குறுக்கு வழியில் எடை குறைப்பது பக்கவிளைவுகளையே ஏற்படுத்தும்.இயற்கையான முறையில், திட்டமிடல்களோடு தீர்மானமாக செயல்பட்டால் உடல் எடை குறைவதோடு, நீண்ட ஆரோக்கியமான வாழ்வும் வசமாகும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker