அழகு..அழகு..புதியவை

கூந்தல் பிரச்சனைக்கு தீர்வு தரும் கருஞ்சீரகம்

தலைமுடி உதிர்தல், இளநரை, புழுவெட்டு, பேன், பொடுகுத் தொல்லை போன்றவற்றுக்கு கருஞ்சீரகத்தின் பயன்கள், உபயோகிக்கும் முறைகள்:

கருஞ்சீரகம், கரிசலாங்கண்ணி, நெல்லி, வல்லாரை, செம்பருத்தி, ஆவாரம்பூ, வெந்தயம், வலம்புரி, இடம்புரி, தேவதாரு, சந்தனம், வெட்டிவேர், கார்போக அரிசி, ரோஸ் மேரி இலை, போன்ற மூலிகைகளை இயற்கையான தேங்காய் எண்ணெய் அல்லது நல்ல எண்ணெயுடன் கலந்து காய்ச்சியோ கண்ணாடி குப்பியில் நிறைத்து நல்ல வெயிலில் வைத்து நிறம் நன்றாக மாறிய பிறகு தலைக்கு தேய்த்து வந்தால் தலைமுடி மிகவும் நேர்த்தியாக வளரவும் உதிராமலும் இருப்பதை அனுபவ பூர்வமாக உணரலாம்.
இந்த எண்ணெயுடன் திருநீற்று பச்சிலை, தைலமர எண்ணெய், இஞ்சி, பூண்டு எண்ணெய்களை சிறிது கலந்து தேய்த்தால் பேன், பொடுகு, புழுவெட்டு தொல்லைகள் சரியாகிவிடும். இளநரையை தடுக்க இத்துடன் பாதாம், ஆப்ரிகாட், முருங்கை எண்ணெய்களை கலந்து பயன்படுத்தினால் முழுமையான பலன் கிடைக்கும்.

அக சுரப்பிகளின் குறைகளால் முடியில் ஏற்படும் பிரச்சினைகளை சரிசெய்ய: கருஞ்சீரகம், திரிகடுகம், கரிசலாங்கண்ணி, வல்லாரை, முருங்கை, கருவேப்பிலை, வெந்தயம் இவைகளை கலந்து கசாயம் செய்து அல்லது இத்துடன் தேங்காய், பேரிச்சை, திராட்சை கலந்து சாறு செய்து சாப்பிட்டால் இரும்புச்சத்து, சுண்ணாம்பு சத்து கிடைப்பதுடன், முடி நன்றாகும். மூளை நன்றாக வேளை செய்யும், மனம் அமைதியுறும். செரிமான உறுப்புகள் மிகச்சரியாக இயங்கும்.
கருஞ்சீரக எண்ணெயுடன் சிவனார் வேம்பு, கிரந்தி நாயகம் சுத்தமான மஞ்சள் கலந்து உடல்முழுவதும் பூசி குளித்தால் தோல் சுத்தமாக மினுமினுப்புடன் தோற்றமளிக்கும். தோல் அரிப்பு, கொப்புளங்கள் முற்றிலும் குணமாகும். கருஞ்சீரக எண்ணெயுடன் சிறிதளவு பாதாம் எண்ணெய் அல்லது பரங்கி விதை எண்ணெய் கலந்து தோல்மீது குறைவாக பூசினால் தோல் வறட்சி சரியாகும்.

கருஞ்சீரக எண்ணெய் (அ) பொடியில் சுத்தமான மஞ்சள், சந்தனம், கார்போக அரிசி, வெந்தயம், தேன் இவைகளை சேர்த்து சுத்தமான பன்னீரில் கலந்து முகப்பூச்சாக பயன்படுத்தி பாருங்கள், ஆச்சரியப்படுவீர்கள் உங்கள் முகப்பொலிவை பார்த்து. இந்த கலவையுடன் குப்பைமேனி, கோரைக் கிழங்கு பொடிகளை சிறிது சேர்த்து பயன்படுத்தினால் முகத்திலும் மற்ற இடங்களிலும் உள்ள தேவையற்ற முடிகளை நீக்கவும் மீண்டும் வளராமலும் இருக்க பெரிதும் பயன்படுவதை உணரலாம்.
Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker