ஆரோக்கியம்உறவுகள்புதியவை

திருமணத்திற்கு முன் கர்ப்பம்.. அதன் பின்பு குழப்பம்..

திருமணத்திற்கு முன்பே பெண் கர்ப்பம் அடைவது என்பது நமது கலாசாரத்தில் இன்னும் ஏற்றுக்கொள்ளப்படாத விஷயம். காலம் மாறிவிட்டது என்று நாம் வாய்வலிக்க பேசினாலும், இது போன்ற கலாசாரம் சார்ந்த நடைமுறையில் நாம் எந்த மாற்றத்தையும் அனுமதிக்கமாட்டோம். திருமணத்திற்கு முன் கர்ப்பம் என்பதை சமூக சீர்கேடாகவும், அவமானத்திற்குரியதாகவும்தான் கருதுகிறோம்.

இது பற்றி பெண்களிடம் போதிய விழிப்புணர்வு இ்ல்லை. நகரத்து பெண்களைவிட கிராமத்து பெண்களே, திருமணத்திற்கு முந்தைய கர்ப்பத்தால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். இது தொடர்பான ஆய்வு ஒன்று சமீபத்தில் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அஜ்மீர் பகுதியில் 4500 இளம் பெண்களிடம் ஆய்வு நடத்தியுள்ளார்கள். 8 கிராமங்களிலும், 8 நகரங்களிலும் ஆய்வு நடந்துள்ளது.

ஆய்வு முடிவில், ‘படிக்கச் செல்லும் பெண்களைவிட வீட்டில் இருக்கும் பெண்கள்தான் அதிகமாக, திருமணத்திற்கு முன்பே கர்ப்பம் அடைகிறார்கள். முறையற்ற கர்ப்பத்திற்கு பின்னால் எடுக்கப்படும் சில பிரச்சினைக்குரிய நடவடிக்கைகளால் அவர்கள் பலியாகவும் செய்கிறார்கள். குறிப்பிட்ட பகுதிகளில் கிராமப் பெண்கள் 60 சதவீதம் பேர் திருமணத்திற்கு முன் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். நகரத்து பெண்களில் இது 40 சதவீதமாக இருக்கிறது’ என்று கூறப்பட்டிருக்கிறது.

குடும்ப நல அமைச்சகம் இது பற்றிய விவரங்களை சேகரித்து, குறிப்பிட்ட பகுதிகளில் ஊர் ஊராகச் சென்று ஆய்வு நடத்தியது. பின்பு அவர்கள் ‘கிராமத்து பெண்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லை. மேலும் கிராமங்களில் தனிமைக்கான இடங்கள் அதிகமாக இருப்பதால் இது போன்ற தவறுகள் அதிகம் நடைபெறுகிறது. பின்விளைவுகளைப் பற்றி சிறிதும் சிந்திக்காமல் கிராமத்துப் பெண்கள் இதற்கு அப்பாவித்தனமாக பலியா கிறார்கள்’ என்று கூறி நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

நகரத்துப் பெண்கள் ஓரளவு விஷயம் தெரிந்து தங்களை பாதுகாத்துக் கொள்கிறார்கள். திருமணத்திற்கு முன் ஏற்படும் வேண்டாத கர்ப்பத்தை சிதைத்துவிடும் வழிமுறைகளும் அவர்களுக்கு தெரிந்திருக்கிறது. மாட்டிக்கொள்ளும் பெரும்பாலான கிராமத்து பெண் களுக்கு கர்ப்பத்தை மறைக்கத் தெரிவதில்லை. அந்த சிக்கலிலிருந்து விடுபட முடியாமல் சமூகத்திற்கு பயந்து தற்கொலை முயற்சியிலும் ஈடுபடுகிறார்கள்.

இந்த ஆபத்தான நிலையை மாற்ற, குடும்பநல அமைச்சகம் இதற்கென பணியாளர்களை நியமித்து கிராமம் கிராமமாகச் சென்று அங்கு வசிக்கும் திருமணமாகாத பெண்களை சந்தித்து இது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. இது அவர்களுடைய எதிர்காலத்தை காப்பாற்றும் முயற்சியாக வரவேற்கப்படுகிறது.

16 வயதிற்கும் குறைவான பெண்கள், திருமணத்திற்கு முந்தைய கர்ப்பத்தால் அதிகம் பாதிக்கப்படுவதாக இன்னொரு ஆய்வு குறிப்பிடுகிறது. அவர்களில் பெரும்பாலான பெண்கள் என்னவென்றே புரியாத வயதில் தங்களிடம் கட்டாய உறவுகொண்டதாக கூறியிருக்கிறார்கள். விளைவுகளை எதிர்கொள்ளும்போதுதான் அதன் தீவிரம் அவர் களுக்கு புரிகிறது.

தாங்கள் ஏமாற்றப்பட்டுவிட்டோம் என்பதை உணரும்போது வாழ்க்கையில் விரக்தியடைகிறார்கள். இதில் மிகவும் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், பாதிக்கப்பட்ட பெண்கள் தங்கள் பெற்றோர்களாலேயே வெறுக்கப்படுகிறார்கள். சமூகம் தங்களை மட்டுமல்லாமல் குடும்பத்தாரையும் இழிவாக பேசுவதால் மிகுந்த மனஉளைச்சலுக்குள்ளாகிறோம் என்று பாதிக்கப்பட்ட பெண்கள் பரிதாபமாக வாக்குமூலம் கொடுத்துள்ளனர். இந்த அறியாப் பெண்களை பெற்றோர்களும் கைவிடுவது ஆபத்தின் உச்சம்.

பெரும்பாலான வெளிநாடுகளில் திருமணத்திற்கு முந்தைய கர்ப்பம் ஒரு இயல்பான விஷயமாகவே கருதப்படுகிறது. அதனால் அந்நாட்டு பெண்கள் அதனை அவமானகரமானதாக கருதுவதில்லை. எந்த மன உளைச்சலுக்கும் அவர்கள் உள்ளாவதில்லை. ஒருவேளை மனஉளைச்சலுக்கு உள்ளாகினாலும், பெற்றோர்களும், மனநல அமைப்புகளும், அரசாங்கமும் அவர்களுக்கு ஆதரவாக இருந்து, அந்த தாக்கத்தில் இருந்து அவர்களை மீட்டெடுத்துவிடுகிறது.

இங்கு அத்தகைய நெருக்கடி ஏற்பட்டுவிட்டால், பாதிக்கப்பட்ட பெண் அதனை தனது பெற்றோரிடம் சொல்லவே பயப்படுகிறாள். மகள் அதை சொன்னாலும், உடனே பெற்றோர் மனஅழுத்தத்திற்கு உள்ளாகி பிரளயத்தை உருவாக்கிவிடுகிறார்கள். நெருக்கமானவர்களிடம் ஆலோசனை கேட்டாலும் தவறான வழியைக்காட்டி அவர்களை பெரும் சிக்கலுக்குள்ளாக்கிவிடுகிறார்கள். பாதிக்கப்பட்ட சில பெண்கள், அதற்கு காரணமான குற்றவாளிகளுக்கே திருமணம் செய்து வைக்கப்படுகிறார்கள். சிலருக்கு சொந்தத்தில் உடனடியாக மாப்பிள்ளை தேடிப்பிடித்து அவசர திருமணம் செய்து வைத்துவிடுகிறார்கள்.

விடுதிகளில் தங்கிப்படிக்கும் பெண்கள், வேலைக்குப்போகும் பெண்கள், பெற்றோரைப் பிரிந்து உறவினர்களிடத்தில் வசிக்கும் பெண்கள் போன்றோரே திருமணத்திற்கு முன்பு அதிக அளவில் கர்ப்பமடைவதாக இன்னொரு ஆய்வு குறிப்பிடுகிறது. காதல் என்ற பெயரில் கற்பை பறிகொடுக்கும் பெண்கள் அதிகரித்துக்கொண்டிருப்பதாகவும் அந்த ஆய்வு குறிப்பிடுகிறது.

ஜெய்ப்பூரில் உள்ள அஸ்ரா என்ற பெண்கள் பாதுகாப்பு மையத்தின் தலைவியான யாமினி ஸ்ரீவாஸ்தவ் இது பற்றி கூறுகையில், “சிறு வயதிலே பெண்களுக்கு சமூகத்தில் நிலவும் நெருடலான விஷயங்களை பற்றி சொல்லிக்கொடுக்க வேண்டும். பள்ளிகளில் பாலியல் கல்வியை கற்றுக்கொடுக்க வேண்டும். விஞ்ஞானரீதியான விளக்கங்களை அவர்கள் பெறும்போது, அவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். பாதுகாப்பு சூழலையும் உணர்வார்கள். காதல் என்ற பெயரில் வீட்டை விட்டு ஓடிவந்த பெண்கள்தான் திருமணத்திற்கு முந்தைய கர்ப்பத்தால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

காதலிப்பது தவறல்ல. பெற்றோருக்கு தெரியாமல் வீட்டைவிட்டு ஓடிப்போவது தவறு. இந்தியாவில் 1000 பெண்களில் 86 பேர் திருமணத்திற்கு முன் கர்ப்பமாகிறார்கள் என்று புள்ளிவிவரம் கூறுகிறது. அதனால் பெண்கள் அனைவரும் இதில் விழிப்புடன் இருக்கவேண்டும். திருமணத்திற்கு முன்பு கர்ப்பம் அடைவதை தடுக்க கல்வி நிலையங்களும், சமூக அமைப்புகளும் முழு முயற்சி எடுக்கவேண்டும்” என்கிறார்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker