சபலக்காரர்களிடம் இருந்து பெண் ஊழியர்கள் தப்புவது எப்படி?
பணி இடத்தில் அனைவரும் பெண்களிடம் கண்ணியமாக நடந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. சில சபலபுத்தி கொண்டவர்களும் இருக்கத்தான் செய்வார்கள். அவர்களிடம் இருந்து தப்பிக்கும் கலையை பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்கிறார்கள், உளவியலாளர்கள்.
சக ஆண் ஊழியர்கள் தொடக்கத்தில் நல்ல மாதிரி பட்டால்கூட அளவுக்கு அதிகமாக அவர்களிடம் பேச வேண்டாம். யாரை பற்றியுமே சரியான முடிவுக்குவர சிறிது காலம் தேவை. அதுவரை பொறுத்திருந்து, பிறகு நட்பு பாராட்டுவது நல்லது. பெண்களுக்கு அவர்கள் வேலை மிகவும் தேவையானதாக இருக்கலாம்.
அந்த வருமானத்தை நம்பித்தான் அவர்களின் குடும்பமும், வருங்காலமும் இருக்கிறது என்கிற நிலைகூட இருக்கலாம். ஆனால் இதை எல்லாம் உங்கள் உயர் அதிகாரியிடம் சொல்லாதீர்கள். சொந்த சோகங்களை அதிகமாக வெளிப்படுத்தினால் “நான் இருக்கிறேன் உனக்கு, கவலைப்படாதே“ என்கிற போர்வையில் எல்லைமீறப் பார்க்கலாம்.
பலரும் காரில் செல்லும்போது ஒன்றை மறந்து விடுவார்கள். டிரைவர் ஒருவர் இருக்கிறார் என்பதை மறந்துவிட்டு வீட்டின் அந்தரங்கங்களை எல்லாம் பேசிக் கொள்வார்கள். இதேபோல பணி இடத்திலும் ஒரு தவறு நடக்கலாம். தொலைபேசியில் அந்தரங்க விஷயங்களைப் பேசும்போது பிறர் கேட்க வாய்ப்பு உண்டு என்பதை மறக்க வேண்டாம்.
எந்த நியாயமான காரணமும் இல்லாமல் மேல் அதிகாரி உங்களுக்கு தனி சலுகை எதையாவது அளித்தால், அதை உறுதியுடன் மறுத்து விடுங்கள். ‘எனக்குப் பிறந்த நாள்‘ என்று சுவீட் பாக்சை நீட்டினால், மறுப்பது நாகரிகமாக இருக்காது என்கிறீர்களா? வாங்கிக் கொள்ளுங்கள். உடனடியாக உங்கள் துறையிலிருக்கும் பிறரையும் கூப்பிட்டு, அந்த மேல் அதிகாரி முன்பாகவே, பகிர்ந்து கொள்ளுங்கள்.
சக ஆண் ஊழியர்கள் ஜோக்குகள் என்ற பெயரில் இரட்டை அர்த்தத்துடன் பேசினால், உடனே உங்கள் எதிர்ப்பை பதிவு செய்துவிடுங்கள். அதைவிட முக்கியம் நீங்களும் அதுபோன்ற ஜோக்குகளை பகிர்ந்துகொள்ளாமல் இருப்பது. சக பெண் ஊழியர்களிடம் நட்பை வளர்த்துக் கொள்ளுங்கள். சபல ஆண் பணியாளர்களை எதிர்க்க இது உதவும்.
உங்கள் முழு நம்பிக்கையைப் பெற்ற சக ஊழியர்களும் உங்களுக்கு உதவ முன்வருவர். தனித்தீவாக இருக்காதீர்கள். உங்கள் வேலையில் நீங்கள் மிகச் சிறப்பானவராக இருந்துவிட்டால், எந்த மேல் அதிகாரியும் உங்களை அலட்சியப்படுத்திவிடவோ, தவறான கண்ணோட்டத்தில் அணுகவோ முயற்சிக்க மாட்டார்கள். எனவே பணியில் திறமைசாலிகளாக விளங்க முயற்சியுங்கள்.