ஆரோக்கியம்புதியவை

உடல் பருமனுக்கும் புற்றுநோய்க்கும் உள்ள தொடர்பு

உடல் பருமனுக்கும் புற்றுநோய்க்கும் உள்ள தொடர்பு

உடல் பருமனுக்கும் புற்றுநோய்க்கும் தொடர்பு இருப்பதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

உடல் பருமன் அதிகமுடையவர்களுக்கு புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதற்கான காரணத்தை விளக்கும் ஆய்வை முடித்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

உடலில் உருவாகும் புற்றுநோய் திசுக்களை எதிர்த்துச் சண்டையிட்டு முறியடிக்கும் ஒருவித செல்கள், உடல் பருமன் அதிகமுள்ளவர்களின் உடல், கொழுப்புகளால் அடைக்கப்படுவதால், அவற்றின் செயல்பாடு நின்று புற்றுநோய் ஏற்படுவதாக அயர்லாந்தின் டிரினிட்டி கல்லூரியைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இங்கிலாந்தில் புற்றுநோயை உண்டாக்கும், அதேவேளையில் தடுக்கும் வாய்ப்புள்ள புற்றுநோய்க்கான காரணிகளில் புகைப்பழக்கத்தை அடுத்து உடல்பருமன் இரண்டாவது இடத்தை வகிப்பதாக அந்நாட்டின் புற்றுநோய் ஆய்வு அமைப்பைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இங்கிலாந்தில் புற்றுநோய் தாக்கும் 20 பேரில் ஒருவர் அல்லது ஓராண்டுக்கு 22 ஆயிரத்து 800 பேருக்கு புற்றுநோய் ஏற்படுவதற்குக் காரணமாக அதிகப்படியான உடல் பருமன் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

உடலில் பெரும்பகுதியை கொழுப்பு அடைத்துக்கொண்ட பிறகு அது உடலில் உள்ள செல்களுக்கு சமிக்ஞைகளை அனுப்பி, புற்றுநோயை உண்டாக்குகிறதா, புற்றுநோய் அணுக்களை அதிகரிக்கிறதா என்று ஆய்வாளர்கள் ஏற்கனவே சந்தேகித்திருந்தனர்.

இந்நிலையில், உடல்பருமன் அதிகமுள்ளவர்களின் கொழுப்பு எவ்வாறு புற்றுநோய் எதிர்ப்பு அணுக்களின் செயல்பாட்டைப் பாதிக்கிறது என்பதை டிரினிட்டி கல்லூரி விஞ்ஞானிகள் ‘நேச்சர் இம்யூனாலஜி’ இதழில் விளக்கியுள்ளனர்.

ஒவ்வொருவரின் உடலிலும் இயற்கையாக அமைந்துள்ள புற்றுநோய் எதிர்ப்பு அணுக்களை அவற்றைப் பாதிக்கும் கொழுப்புகளிடம் இருந்து காப்பாற்றி அவற்றை மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டுவரும் மருந்துகளை உருவாக்க முடியும் என்று ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.
‘‘இயற்கையான புற்றுநோய் எதிர்ப்பு அணுக்களைச் சூழ்ந்திருக்கும் கொழுப்பை நீக்கும் சேர்மத்தைப் பரிசோதித்துப் பார்த்தோம். நாங்கள் நினைத்தவாறே அதை முற்றிலும் அழிக்க முடிந்தது’’ என்று பேராசிரியர் லிடியா லிஞ்ச் கூறுகிறார்.

‘‘புற்றுநோய் அணுக்களைச் சூழ்ந்திருக்கும் கொழுப்பை நீக்குவதற்கு மருந்துகளைப் பயன்படுத்துவதைவிட உடல் எடையைக் குறைப்பது மற்ற பிரச்சினைகளில் சிக்காமல் இருப்பதற்கு உதவும் சிறந்த வழி’’ என்றும் அவர் கூறுகிறார்.

‘‘13 வகையான புற்றுநோய் ஏற்பட உடல் பருமனே காரணமாக உள்ளது என்று நமக்குத் தெரிந்தாலும், உடல் பருமனுக்கும், புற்றுநோய்க்கும் இடையிலான தொடர்பு குறித்து இதுவரை தெளிவான பதில்கள் கிடைத்திருக்கவில்லை’’ என்று இங்கிலாந்தின் புற்றுநோய் ஆய்வு அமைப்பைச் சேர்ந்த மருத்துவர் லியோ கார்லின் கூறுகிறார்.

‘‘கொழுப்பு மூலக்கூறுகள் எவ்வாறு நோய் எதிர்ப்பு அணுக்களை தனது புற்றுநோய் தடுப்புச் செயல்பாட்டை மேற்கொள்ளவிடாமல் தடைசெய்கிறது என்பதையும், அந்தப் பிரச்சினையைச் சமாளிப்பதற்கான புதிய வழிவகைகளையும் இந்த ஆராய்ச்சி வழங்குகிறது’’ என்று அவர் மேலும் கூறுகிறார்.

உலகில் ஏற்படும் உயிரிழப்புகளில் ஆறில் ஒன்றுக்குக் காரணம் புற்றுநோய் என்று கூறுகிறது உலக சுகாதார நிறுவனம்.

புற்றுநோய் உண்டாவதற்கு புகையிலைப் பொருட்களை உட்கொள்வது, மது அருந்தும் பழக்கம், அதிக உடல் எடையுடன் இருப்பது, குறைந்த அளவில் பழங்களையும் காய்கறிகளையும் உட்கொள்வது, உடல் உழைப்பு இல்லாமை ஆகிய ஐந்து காரணிகளே காரணம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

அதிலும் அதிகம் பேருக்கு புற்றுநோய் வரக் காரணமாக இருப்பது புகையிலைப் பழக்கம்தான். உலக அளவில் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களில் 22 சதவீதம் பேரின் பாதிப்புக்குக் காரணமாக இருப்பது புகையிலை மட்டுமே. அது புகைபிடித்தல் மட்டுமல்ல. வேறு எந்த வகையில் புகையிலைப் பொருட்களை உட்கொண்டாலும் புற்றுநோய் வர வாய்ப்பு உண்டு.

உலகில் ஆறு நொடிக்கு ஒரு நபரின் மரணத்துக்குக் காரணமாக இருப்பது புகையிலையால் உண்டாகும் நோய்கள்தான் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது.

புற்றுநோய் பல உறுப்புகளில் ஏற்பட்டாலும், நுரையீரல், கல்லீரல், பெருங்குடல், வயிறு மற்றும் மார்பகம் ஆகிய உறுப்புகளிலேயே பெரும்பாலும் இந்நோய் உண்டாகிறது.
Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker