நீங்கள் ஹெட்போன் உபயோகப்படுத்துபவரா? உங்களுக்கான எச்சரிக்கைதான் இது
வளர்ந்து வரும் தொழில்நுட்பம் என்பது நமக்கு வரமா? அல்லது சாபமா? என்பது பதில் கூறமுடியாத கேள்வியாகவே இருக்கிறது. ஏனெனில் தொழில்நுட்பத்தால் நமது வாழ்க்கைமுறை எவ்வளவு முன்னேறியிருக்கிறதோ அதே அளவு நமது ஆரோக்கியமும் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பது மறுக்கமுடியாத உண்மை. நமது சோம்பேறித்தனத்திற்கும், சுகபோக வாழ்க்கைக்கும் நாம் கொடுத்துள்ள மிகப்பெரிய விலை விலைமதிபில்லாத நமது ஆரோக்கியத்தை என்பதை மறந்துவிடாதீர்கள்.
இன்று நமது சமூகத்தில் குழந்தைகள். இளைஞர்கள் ஏன் பெரியவர்கள் கூட அதிகம் பயன்படுத்தும் ஒரு பொருளாக ஹெட்போன்கள் மாறிவிட்டது. பயணம் என்றாலே முதலில் எடுத்து வைக்க வேண்டியது ஹெட்போனைத்தான் என்னும் மனநிலைக்கு இளைஞர்கள் வந்துவிட்டனர். இது உங்கள் பயணத்தை வேண்டுமானால் சுவாரஸ்யமாக்கலாம் ஆனால் ஆரோக்கியத்தையும், வாழ்கையையும் பாதிக்கும் என்பதே நிதர்சனம். இந்த பதிவில் ஹெட்போன்களின் உபயோகித்தால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.
கேட்கும் திறன் இழப்பு
கிட்டதட்ட அனைத்து ஹெட்போன்களுமே உங்கள் காதுகளில் உயர் அழுத்தமுள்ள ஒலி அலைகளை உண்டாக்குகிறது. இதனால் உங்கள் காதுகளில் பல மோசமான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. 90 டெசிபலுக்கு மேல் உள்ள ஹெட்போன்களை உபயோகப்படுத்துவது உங்கள் காதுக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் இதனால் நிரந்தரமாக கேட்கும் திறன் இழக்ககூட வாய்ப்புள்ளது. பாடல்கள் கேட்கும்போது இடைவெளிகள் விடுவதிலும், ஒலியை மிதமாக வைத்திருப்பதிலும் உறுதியாக இருங்கள்.
குறைவான காற்று
இப்போதிருக்கும் அனைத்து ஹெட்போன்களுமே உங்கள் காதுகளுக்கு மிக அருகில் இருக்கும்படியே வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் உங்கள் காது சவ்வுகளுக்கு மிகவும் நெருக்கமானது. இது உங்களுக்கு மிகச்சிறந்த பாடல் கேட்கும் அனுபவத்தை கொடுக்கலாம். ஆனல் இதனை நீண்ட நேரம் உபயோகிக்கும் போது உங்கள் காதுகளுக்கு செல்ல வேண்டிய காற்றை நீங்கள் தடுக்கிறீர்கள். இதனால் பல தொற்றுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
தொற்று நோய்கள்
ஹெட்போன்களை உபயோகிக்கும் முன் நீங்கள் உறுதிசெய்துகொள்ள வேண்டிய மற்றொன்று உங்கள் ஹெட்போனை எப்பொழுதும் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளக்கூடாது. ஹெட்போன்களை பகிர்ந்துகொள்வது தேவையில்லாத பல நோய்களை உண்டாக்கும். ஒருவேளை அப்படி பகிர்ந்துகொள்ள நேர்ந்தால் மீண்டும் உபயோகிக்கும் முன் நன்கு சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
காது உணர்வின்மை
நீண்ட நேரம் ஹெட்போன் உபயோகிப்பது உங்கள் காதுகளில் உணர்வின்மையை ஏற்படுத்தலாம். உணர்வின்மை மட்டுமின்றி இதனால் தற்காலிக கேட்கும் திறன் இழப்பு கூட ஏற்படலாம். இந்த எச்சரிக்கைகளை கருத்தில் கொள்ளாமல் தொடர்ந்து இதனை செய்தால் நிரந்தர கேட்கும்திறன் இழப்பு கூட ஏற்படலாம்.
காது வலி
நீண்ட நேரம் ஹெட்போன் உபயோகிப்பதோ அல்லது அதிக ஒலியில் பாடல்கள் கேட்பதோ உங்கள் காதுகளில் கடுமையான வலியை உண்டாக்கும். காதுகளில் மட்டுமின்றி அதனை சுற்றியுள்ள உறுப்புகளுக்கும் இந்த வலி பரவும்.
மூளையின் எதிற்மறை விளைவு
நீண்ட நேர ஹெட்போன் உபயோகத்தினால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து உங்கள் மூளை தப்பிக்க இயலாது. உங்கள் ஹெட்போன்களில் இருந்து உருவாகும் மின்காந்த அலைகள் உங்கள் மூளையின் மீது மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம். காதுகளின் உள்பகுதி மூளையுடன் தொடர்பு கொண்டவை, இதில் ஏற்படும் பாதிப்புகள் உங்கள் மூளையின் மீது நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும்.
பயணத்தின் பொது உபயோகிப்பது
பயணத்தின் போது ஹெட்போன்கள் உபயோகிப்பது உங்களுக்கு பயணத்தை எளிதாக்க இருக்கும் ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கலாம். ஆனால் உண்மை அதுவல்ல. மற்ற நேரங்களை காட்டிலும் பயணத்தின் போது ஹெட்போன் உபயோகிப்பது இருமடங்கு பாதிப்புகளை ஏற்படுத்தும். சத்தம் நிறைந்த பஸ்ஸிலோ அல்லது இரயிலோ ஹெட்போன் உபயோகிப்பது உங்கள் காதுக்கு எட்டும் ஒலியின் டெசிபலின் அளவை அதிகரிக்கும். இதனால் பல பக்கவிளைவுகள் ஏற்படலாம்.
புற்றுநோய்
ஹெட்போன்கள் மூளையின் மீது கதிர்வீச்சு ஏற்படுத்தும் என்பதை நாம் அறிவோம். இதனால் புற்றுநோய் அல்லது மூளைக்கட்டிகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். மூளையின் மீது கதிர்வீச்சுகள் அதிகரிக்கும்போது அது இயற்கையாகவே எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும். இதனை ஆதாரப்பூர்வமாக இன்னும் நிரூபிக்கப்படவில்லை என்றாலும் இதன் மீதான ஆராய்ச்சிகள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.
வெளிப்புற அச்சுறுத்தல்கள்
அதிகமாக ஹெட்போன் உபயோகிப்பது உங்கள் வாழ்க்கைக்கே அச்சுறுத்தல்களை உருவாக்கலாம். நீங்கள் ஹெட்போனின் துணையுடன் செல்போனில் மூழ்கும்போது வெளிப்புற உலகிலிருந்து துண்டிக்கப்படுகிறீர்கள் இதனால் மோசமான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும். இதனால் சிறியது முதல் பெரிய பாதிப்புகள் வரை ஏற்படலாம். சமீப காலங்களில் நடக்கும் நிறைய விபத்துகளுக்கு ஹெட்போனில் மூழ்கியிருப்பது முக்கிய காரணமென ஆய்வுகள் தெரிவிக்கிறது.