உறவுகள்புதியவை

குழந்தையின்மை பிரச்சனை உள்ளவர்களுக்கு ஏற்படும் தாம்பத்திய பிரச்சனைகள்?

குழந்தையின்மை பிரச்சனை உள்ளவர்களுக்கு ஏற்படும் தாம்பத்திய பிரச்சனைகள்?

திருமணத்துக்குப் பின் இரண்டு ஆண்டுகள் வரை குழந்தைக்காக காத்திருக்கச் சொல்லுவோம். முதலில் இருவருக்குள்ளும் ஒரு புரிதல் ஏற்பட்டு தடையற்ற தாம்பத்தியம் என்ற நிலைக்கு வர வேண்டும். தாம்பத்தியம் வைத்துக் கொள்வதை மகிழ்ச்சியாக உணர வேண்டும். குறிப்பிட்ட ஆண்டுகள் வரை காத்திருந்தும் குழந்தை உருவாகாமல் போனால் அதற்கான காரணத்தைக் கண்டுபிடிக்க வேண்டும்.
பரிசோதனை செய்யாமல் சில தம்பதியர் தள்ளிப் போடுவார்கள். இதற்கு பதிலாக கேட்பவர்கள் சொல்லும் மருந்துகளை சாப்பிடுவது, வேண்டுதல் வைப்பது என வேறு விதமான முயற்சிகளை செய்து கொண்டிருப்பார்கள். ஆரம்பத்திலேயே சிகிச்சை செய்தால் குழந்தையின்மை பிரச்சனைக்கு எளிதாகத் தீர்வு காண முடியும். தம்பதியர் மருத்துவப் பரிசோதனைகள் செய்து கொள்ளாமல் தாமதிப்பதால் பல சிக்கல்களை சந்திக்கின்றனர்.

இருவரும் மற்றவரை குறைகூறுவார்கள். குடும்பத்தினர் எப்போது குழந்தை பிறக்கும் என்று அழுத்தம் கொடுப்பார்கள். பார்ப்பவரெல்லாம் எத்தனை குழந்தைகள் எனத் தவறாமல் கேட்பார்கள். இதனால் வெளியில் செல்லவே பயமாக இருக்கும். குடும்ப விசேஷங்களில் தலைகாட்ட மறுப்பார்கள். இந்த குழந்தையின்மை மன அழுத்தத்தின் எதிரொலியாக உடலுறவு கொள்வது மகிழ்ச்சிக்காக இல்லாமல் குழந்தைக்கான முயற்சியாக மாறிப் போகும்.

மனசு முழுக்க இந்த முயற்சியில் குழந்தை உருவாகிட வேண்டும் என்ற பதற்றம் இருக்கும். உடலுறவு நேரத்தையும் டென்ஷனாக மாற்றிடும். இதனால் உடலுறவின்போது ‘நல்லாப் பண்ணணும்’, ‘விந்தணுக்கள் நிறைய வெளியாகணும்’ இப்படியான எண்ணம்தான் ஆணுக்குள் ஏற்படும். நாளடைவில் அவர்களுக்கே நம்பிக்கை குறையத் துவங்கிடும்.
ஆணுக்கு நம்பிக்கை குறையும்போது ஆணுறுப்பு விறைப்புத் தன்மையில் பாதிப்புகள் ஏற்படும். விந்தணுக்கள் முன்கூட்டியே வெளியேறுவது, ‘நம்மால் எதுவும் முடியலை’ என்ற எண்ணம் எல்லாம் சேர்த்து உடலுறவு நேரத்தையே கசப்பானதாக மாற்றிடும்.

இப்பிரச்சனை உள்ள தம்பதியர் செய்ய வேண்டியது என்ன?

எல்லா மனிதர்களுமே மனதளவில் ஓரளவுக்குத்தான் வலிமையானவர்களாக இருப்பார்கள். ஒரு கட்டத்துக்கு மேல் தாமாகவே மனதைத் தேற்றிக் கொள்வது இயலாத ஒன்று. குழந்தைக்காக முயற்சி செய்து பலமுறை தோற்று அதனால் மனம் தாங்கும் வலியில் இருந்து வெளியில் வருவது அவர்களுக்கு மிகப்பெரிய பிரச்சனையாக மாறிப்போகும். இதனால் உடலுறவின்போது அவர்களால் எதுவும் செய்ய முடியாமல் போகும். விறைப்புத் தன்மை ஏற்படாமல் போகும்.

குழந்தையின்மைப் பிரச்சனைக்கான காரணத்தை உடனடியாகக் கண்டறிந்து சிகிச்சை எடுக்க வேண்டும். காரணத்தைச் சொல்லி அதனை சரி செய்து நம்பிக்கை அளித்து குழந்தை உருவாவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கலாம்.
ஒரு வேளை அவர்களுக்கு விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பில்லாமல் போனால் அதற்கான மருந்துகள் கொடுத்து மேம்படுத்தலாம். அவர்கள் மேல் எந்தப் பிரச்சனையும் இல்லை. இது அவர்கள் உடலில் இயற்கையாக உண்டான பிரச்சனை என்பதைப் புரிய வைக்கலாம்.

இயற்கையாக நடக்க வேண்டிய விஷயங்களில் பிரச்சனை இருக்கும் போது அதற்கென உள்ள சிகிச்சைகள் மூலம் விரைவாக அவர்களை மேம்படுத்தி குழந்தை உருவாவதற்கான வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்கலாம். குழந்தை பிறந்து விட்டால் இந்த டென்ஷனில் இருந்து அவர்கள் வெளியில்  வந்து விடுவார்கள்.

குழந்தையின்மைக்காக சிகிச்சை எடுத்துக் கொள்வது தாம்பத்திய இன்பத்தை பாதிக்குமா?

குழந்தையின்மைக்காக சிகிச்சை எடுப்பது தாம்பத்திய இன்பத்தை பாதிக்காது. தம்பதியர் விரைவாக வந்து சிகிச்சை எடுத்துக் கொள்ளும்போது தாம்பத்தியம் கசப்பானதாக மாறுவதைத் தடுக்க முடியும். குறைந்த பட்சம் இரண்டு ஆண்டுகள் வரை குழந்தைக்காக காத்திருந்து விட்டு உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
8 மணி நேரத் தூக்கம் அவசியம். ஸ்ட்ரெஸ் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சத்தான உணவுகள், தொடர்ச்சியான உடற்பயிற்சி, பார்ட்னரோடு நன்றாகப் பேச வேண்டும். இருவரும் மகிழ்ச்சியான அன்பான சூழலை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். தாம்பத்தியமும் சிறக்கும், வாழ்க்கையும் இனிக்கும்!

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker