கூந்தல் உதிர்வுக்கான காரணமும் – செய்யக்கூடாதவையும்
நாம் சாப்பிடும் உணவுகளில் போதிய புரதச் சத்து இல்லாததால் முடி வளர்ச்சிக் குறைபாடு ஏற்படுகிறது. கர்ப்ப காலத்திலும் குழந்தைப்பேற்றுக்குப் பிறகும் பெண்களில் பலருக்கு முடி உதிர்வது என்பது இயல்பான ஒன்றாகும். இந்த முடி பிரச்னை ஹார்மோன் மாற்றங்களால் நிகழக்கூடியது. இது சிறிது காலத்துக்குப் பிறகு தானாகவே சரியாகிவிடும்.
இன்றைய பெண்களில் பலர் நீளமாக முடி வளர்க்க விரும்புவதில்லை. அப்படியே வளர்த்தாலும் ஹேர் கலரிங், `ஸ்ட்ரெய்ட்டனிங்’ செய்கிறார்கள். சிலர் ஹேர் டை பயன்படுத்துகிறார்கள். இதனாலும் முடி வளர்ச்சி பாதிக்கப்பட்டு முடி உதிரக்கூடும்.
சுற்றுச்சூழல் மாசுபாடு காரணமாகக்கூட இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படலாம். அதிகரித்துவிட்ட வாகனங்களின் புகையால் காற்று மாசுபட்டு முடி கொட்டக்கூடும். முதலில் தலையில் பொடுகு ஏற்பட்டு அதன்பிறகு முடி கொட்டத் தொடங்கும். மலச்சிக்கல் உள்ளவர்களுக்குத் தலையில் பொடுகு வர வாய்ப்பு உள்ளது. சூரியஒளியில் அதிக நேரம் நிற்பதால் அல்ட்ரா வயலட் கதிர்கள் தலையை நேரடியாகப் பாதிப்பதால் தலைமுடி உடைந்து முடி கொட்டத் தொடங்கும்.
இன்றைக்கு இருசக்கர வாகனங்கள் அதிகரித்துவிட்டன. ஹெல்மெட்டில் வியர்வை தேங்குவதால் கிருமிகளின் வளர்ச்சி அதிகரித்து அது தலைமுடியைப் பாதிக்கிறது. இதனால் சிலருக்கு அளவுக்கதிகமாக முடி கொட்டுகிறது. இதைத் தவிர்க்க ஹெல்மெட்டில் ஆன்டி பாக்டீரியல் சொல்யூஷன் பயன்படுத்தலாம். வாரம் ஒருமுறையோ 10 நாள்களுக்கு ஒருமுறையோ ஹெல்மெட்டை சூரியஒளி படும்படி வைத்துப் பயன்படுத்தினால் கிருமிகளின் வளர்ச்சியைத் தடுக்கலாம். அதேபோல் ஹெல்மெட்டை அவ்வப்போது சுத்தப்படுத்தி பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுக்கமுடியும்.
குளிக்கும் தண்ணீரில் உப்புத்தன்மை அதிகமிருந்தாலும் முடி கொட்ட வாய்ப்புள்ளது. தலைமுடியைப் பராமரிக்க உணவுப் பழக்கவழக்கங்களைச் சரியாகப் பின்பற்ற வேண்டும். உணவில் அதிகம் புரதம் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். பருப்பு வகைகள், சோயா, தேங்காய்ப்பால், கொண்டைக்கடலை, வேர்க்கடலை, பப்பாளி, பச்சைப் பட்டாணி போன்றவற்றில் புரதம் நிறைந்துள்ளது. அதேபோல் பேரீச்சம்பழம், உலர்ந்த திராட்சையில் இரும்புச் சத்து நிறைந்துள்ளது. இரவில் இரண்டு பேரீச்சம்பழம், 10 உலர்ந்த திராட்சையை நீரில் ஊறவைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதன்மூலம் போதிய இரும்புச்சத்து கிடைக்கும். அத்திப்பழம், பீட்ரூட், மாதுளை, சப்போட்டா போன்ற பழங்களிலும் இரும்புச் சத்து நிறைந்துள்ளது. எள் மிட்டாய், எள்ளுருண்டை சாப்பிடுவதன்மூலமும் போதிய இரும்புச் சத்து கிடைக்கும்.
வாரத்துக்கு இரண்டு முறை முருங்கைக்கீரை சாப்பிட வேண்டும். கால்சியம், இரும்புச் சத்து, வைட்டமின் ஏ, ஃபோலிக் ஆசிட் போன்ற சத்துகள் கிடைக்கும். துத்தநாகம், வைட்டமின் ஈ, ஒமேகா 3 சத்துகள் நிறைந்த பாதாம், பிஸ்தா, வால்நட் போன்றவற்றையும் சேர்த்துக்கொள்ளலாம். கேரட், கிர்ணி, மாம்பழம், சீனிக்கிழங்கு போன்றவற்றில் வைட்டமின் ஏ நிறைந்திருக்கிறது. அவற்றையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
முடி கொட்டுதலுக்கு மனஅழுத்தம் காரணமாக இருப்பதால் யோகா சிறந்த தீர்வு தரும். வாரம் ஒருமுறை தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளித்தால் உடல்சூடு குறையும். சூடு காரணமாக முடி கொட்டுவதைத் தடுக்கலாம்.