உடல்சூடு, வயிற்றுவலிக்கு நிவாரணம் தரும் வெந்தயம்
சிறுநீர் பெருக்கி, காமம்பெருக்கி, உரமாக்கி என பல செய்கைகளையும் கொண்டது. ‘வெச்சென்ற மேனி மிகவுங் குளிர்ச்சியதாம் அச்சமில்லை வெந்தயத்துக்காய்ஞ்‘ என வெந்தயம் சார்ந்த பாடல், அதன் குளிர்ச்சித்தன்மை குறித்தும், பித்தம் சார்ந்த நோய்களுக்கான பயன்பாடு குறித்தும் எடுத்துரைக்கிறது.
வெந்தயத்தை வறுத்து பொடியாக்கி, நீரில் ஊறவைத்து சாப்பிட்டால் வயிற்றுவலி, உடல்சூடு, வெள்ளைப்படுதல், கழிச்சல் போன்றவற்றுக்கு நிவாரணம் கிடைக்கும். உடல் மெலிந்தவர்கள், வெந்தயம் சேர்த்து தயாரித்த அடையை, கருணைக்கிழங்குடன் சாப்பிட்டால் உடல் பருமனாகும் என்கிறது, சித்தர் தேரையரின் பாடல்.
ஈரல் சார்ந்த நோய்களுக்கு வெந்தயம், பெருங்காயம், கறிமஞ்சள், கடுகு ஆகியவற்றை நெய்விட்டு வறுத்து பொடியாக்கி, சாதத்துடன் கலந்து சாப்பிடலாம். வெந்தயம், பெருங்காயம், துவரம்பருப்பு சேர்த்து மண்பானையில் தயாரித்த உணவை, சூடாகச் சாப்பிட்டால் உடல் எரிச்சல் குறையும்.
பிரசவித்த பெண்ணுக்கு பால்சுரப்பு அதிகரிக்க வெந்தய களி, வெந்தய கஞ்சி வைத்துக்கொடுக்கும் நடைமுறை கிராமங்களில் இன்றைக்கும் உள்ளது. வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடித்து, கோதுமை மாவும் கருப்பட்டியும் சேர்த்து தயாரிக்கும் இனிப்புக் களி‘ பால்சுரப்பை அதிகரிக்க செய்யும்.
ராஜஸ்தான் மாநிலத்தில் வெந்தயத்துடன் பாதாம்பருப்பு சேர்த்து செய்யப்படும் வெந்தய லட்டுகள்‘ பண்டிகைக்கால பலகாரமாக மட்டுமல்லாமல், பிரசவித்த பெண்ணுக்கு பால்பெருக்கும் உணவாகவும் இருக்கிறது.
நீரிழிவு கட்டுப்பாட்டில் வெந்தயத்தின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு ஆய்வுகள் நடைபெற்றுள்ளன. சாப்பிட்ட பின் அதிகரிக்கும் ரத்த சர்க்கரை அளவு மற்றும் மூன்று மாதங்களுக்கான ரத்த சர்க்கரை இருப்பைக் காட்டும் எச்பிஎ1சி‘ அளவீட்டைக் குறைக்கவும் வெந்தயம் உதவும். ரத்தத்தில் காணப்படும் சர்க்கரையை, செல்கள் பயன்படுத்தும்விதமாக நொதிகளை சுரக்கச் செய்து, குளூக்கோஸ் வளர்சிதை மாற்றத்தில் வெந்தயம் முக்கிய பங்கு வகிக்கிறது. இயற்கையின் பொக்கிஷமாகவே நீரிழிவாளர்கள் வெந்தயத்தைப் பார்க்கலாம்.
சிறுநீரக கற்கள் மற்றும் பித்தப்பை கற்களின் அளவை குறைக்கவும் வெந்தயம் பயன்படும். ரத்தத்தில் நுழைந்த கிருமிகளை அழிக்கும் வெள்ளை அணுக்களின் செயல்பாடுகளை வெந்தயம் துரிதப்படுத்தும். அமினோ அமிலங்கள் மற்றும் அதிக அளவு நார்ச்சத்து, இரும்புச்சத்து, தயாமின் என நுண்ணூட்டங்களுக்கும் வெந்தயத்தில் குறைவில்லை.