எண்ணெய் தேய்க்கும்போது நாம் என்ன தவறு செய்கிறோம்? எப்படி தேய்க்க வேண்டும்?… தெரிஞ்சிக்கோங்க
நாம் குழந்தையாக இருக்கும்போது நமது அன்னை நமக்கு தினமும் தலையில் எண்ணெய் தடவி விடுவதை வழக்கமாக கொண்டிருப்பார். பள்ளி செல்லும்போது வரை அவரது கட்டுப்பாட்டில் இருக்கும் நாம் தலைக்கு தவறாமல் எண்ணெய் தடவி தலைமுடியை அழகாக பராமரித்து வந்திருப்போம்.
எண்ணெய் தடவுவதால் உண்டாகும் நன்மைகளைப் பற்றி நமது அன்னை நமக்கு சொல்லிக் கொடுத்து இருப்பார். ஆனால் அடுத்த சில வருடங்களில் நாம் அதனை மறந்து நமது விருப்பத்திற்கு ஏற்ப தலையில் எண்ணெய் தடவாமல் ஸ்டைல் என்று தலையை காய வைத்து பின்பு முடி உதிர்வு, முடி பிளவு போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்ள நேர்கிறது.
தலைமுடிக்கு எண்ணெய்
உண்மையில் தலை முடிக்கு எண்ணெய் தடவுவதால் உங்கள் உச்சந்தலைக்கு மிகவும் நன்மை கிடைக்கிறது. தலையில் எண்ணெய் தடவுவதால் அது உச்சந்தலையில் ஊடுருவி வேர்கால்களுக்கு புத்துணர்ச்சி கொடுக்கிறது. மேலும் உச்சந்தலையின் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. தேங்காய் எண்ணெய் அல்லது இதர அத்தியாவசிய எண்ணெய்யை தலைக்கு தடவுவதால் தலை முடிக்கு தேவையான புத்துணர்ச்சி கிடைக்கிறது. இதனால் கூந்தல் ஆரோக்கியமாக, அழகாக, வலிமையாக நீளமாக, பளபளப்பாக மாறுகிறது. இதனை வேண்டாம் என்று சொல்பவர் யாரவது உண்டா?
பராமரிப்பு
தலை முடி பராமரிப்பு பற்றி பேசும்போது, அதில் செய்ய வேண்டுபவை மற்றும் செய்யக் கூடாதவை என்று சில செயல்கள் உண்டு. அதனை நினைவில் கொள்வது மிகவும் அவசியம். ஆகவே தலை முடி பராமரிப்பில் கவனம் செலுத்த நினைப்பவர்கள் இந்த பதிவை படித்து செய்ய வேண்டுபவை மற்றும் செய்யக் கூடாதவை என்னென்ன என்பதை அறிந்து கொள்ளலாம்.
தலை முடிக்கு எண்ணெய் தடவும்போது செய்ய வேண்டுபவை மற்றும் செய்யக் கூடாதவை
செய்ய வேண்டுபவை:
உச்சந்தலையில் கவனம் செலுத்துங்கள்
தலை முடி பராமரிப்பில் ஒரு கட்டாய விதி இது தான். உங்கல் உச்சந்தலையில் அதிக கவனம் செலுத்துங்கள். ஏன் என்று கேட்டால், தலை முடியின் வேர்க்கால்கள் முடி வளர்ச்சிக்கு மிகவும் முக்கியம். தலை முடியின் வேர்க்கால்கள் வலிமையாக இருப்பதால் தலை முடி தொடர்பான தொந்தரவுகள் குறைவாக இருக்கும் என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம்.
ஆகவே உச்சந்தலைக்கு போதிய புத்துணர்ச்சி தர வேண்டியது அவசியம். தேங்காய் எண்ணெய் மூலம் தலைக்கு மசாஜ் செய்வதால் உங்கள் முடியின் வேர்க்கால்கள் வலிமையடைகிறது.
தலையில் எண்ணெய் மூலம் மசாஜ் செய்வதால் அது உச்சந்தலையில் ஆழ்ந்து ஊடுருவி புத்துணர்ச்சி அளிக்கிறது.
மசாஜ்
தலை முடியை மசாஜ் செய்வதை உங்கள் விருப்பம் போல் எப்போதாவது செய்யாதீர்கள். இதனை கட்டாய வேலையாக செய்யுங்கள். உங்கள் தலை முடி பராமரிப்பில் மசாஜ் மிகவும் முக்கியம் மற்றும் அவசியம். சூடான எண்ணெய் மசாஜ் செய்வதால் தலை முடி ஆழத்தில் இருந்து புத்துணர்ச்சி பெற்று வலிமை அடைகிறது. மேலும், மசாஜ் செய்யும்போது நினைவில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயம், முதலில் வேர்கால்களில் இருந்து மசாஜ் செய்வதைத் தொன்டங்கி முடியின் நுனி வரை செல்ல வேண்டும்.
தலை முடி மசாஜ் செய்வதற்கு முன்னர் உங்கள் தலை முடியின் வகையை தெரிந்து கொள்வது அவசியம். உங்கள் தலை முடி எண்ணெய் பசையுடையதாக இருந்தால் வாரத்திற்கு ஒரு முறை மசாஜ் செய்யலாம். அதுவே வறண்ட தலை முடி மற்றும் உச்சந்தலை இருந்தால் ஒரு வாரத்திற்கு மூன்று முறை இதனை செய்வதால் விரைவில் நல்ல தீர்வுகள் கிடைக்கும்.
கடைசியாகவும் பயன்படுத்தலாம் தலை முடியில் எண்ணெய் தடவி மசாஜ் செய்தபின் ஷாம்பூ மற்றும் கண்டிஷனர் கொண்டு தலை முடியை அலசுவது பொதுவாக நடைமுறையில் உள்ள பழக்கம். ஆனால் தலை முடிக்கு எண்ணெய் தடவுவதை ஒரு ஸ்டைலாகவும் செய்யலாம். ஆனால் இதற்கு உபயோகப்படுத்தும் எண்ணெய் வழக்கமாக பயன்படுத்தும் எண்ணெய்யை விட சற்று வித்தியாசமானது. தலை முடியை ஸ்டைல் செய்யப் பயன்படுத்தும் எண்ணெய் பிசுபிசுப்பு இல்லாததாக இருப்பதால் எண்ணெய் வழியும் பிரச்சனை இருக்காது. உண்மையில் எண்ணெய் தடவி தலை முடியை அலங்கரிப்பதால் தலை முடி பார்ப்பதற்கு பளபளப்பாக இருக்கும்.
செய்யக்கூடாதவை
எண்ணெய் தடவுவதை நிறுத்தக் கூடாது இதனை நினைவில் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். எந்த நேரத்திலும் தலைக்கு எண்ணெய் தடவாமல் இருக்கக் கூடாது. வெளியில் இருக்கும் தூசு, அழுக்கு மற்றும் மாசு போன்றவை உங்கள் கூந்தலில் தினமும் படிய நேரலாம். இதனால் கூந்தல் வறண்டு சோர்வாக காணப்படும். ஆகவே நாள் முழுவதும் வறண்டு காணப்படும் கூந்தலுக்கு புத்துணர்ச்சி அளிக்க அந்த நாளின் இறுதியில் சூடான எண்ணெய் மசாஜ் செய்வதன் மூலம் உங்கள் கூந்தலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கிறது.
அதிக எண்ணெய் தடவ வேண்டாம்
“அளவுக்கு மீறினால் அமிர்தமும் விஷம்” என்பதை அனைவரும் அறிவோம். இது கூந்தல் மற்றும் சருமத்திற்கும் பொருந்தும். உச்சந்தலை மற்றும் கூந்தலுக்கு எண்ணெய் மிகவும் அவசியம் என்ற போதிலும் அதிகமாக எண்ணெய்யை பயன்படுத்துவது சரியா? மிக அதிகமாக எண்ணெய்யை தலை முடிக்கு தடவுவதால் என்ன நடக்கும் என்பது பற்றி யாருக்காவது தெரியுமா? தலையில் அதிகமாக எண்ணெய் தடவுவதால் அந்த எண்ணெய் முழுக்க தலை முடியில் அதாவது பின்னலில் இறங்கி பாரத்தைக் கொடுக்கும். இரண்டாவதாக, உங்கள் கூந்தல் மிகவும் எண்ணெய் பிசுபிசுப்புடன் காணப்படும்.
எப்படி தேய்க்க வேண்டும்? தலையில் எண்ணெய் தடவ சரியான வழி என்னவென்றால், கை நிறைய எண்ணெய் எடுத்து உங்கள் உச்சந்தலையில் முழுவதும் தடவி பின்பு மீதம் கையில் படிந்திருக்கும் எண்ணெய்யை உங்கள் முடியின் நீளத்திற்கு தடவ வேண்டும்.