வாயு தொல்லை, கொழுப்பை குறைக்கும் பிரண்டை
அடிபட்ட வீக்கம், சுளுக்கு, பிடிப்பு, வலி போன்றவற்றுக்கு இது சிறந்த நிவாரணம் தரக்கூடியது. துவையல் செய்து சாப்பிடுவதன் மூலமே நல்ல நிவாரணம் கிடைக்கும். இதன் துவையல் உடல் சுறுசுறுப்பை அதிகரிக்கச் செய்யும்; ஞாபகசக்தியை பெருக்கும்; மூளை நரம்புகளை பலப்படுத்தும்; எலும்புகளுக்கு சக்தி தரும். ஈறுகளில் ஏற்படும் ரத்தக்கசிவை நிறுத்துவதுடன் வாய்வுப் பிடிப்பைப் போக்கும். வாரத்தில் இரண்டு நாள் வீதம் சாப்பிட்டு வந்தால் தேகம் வலுப்பெறும்; உடல் வனப்பும் பெறும்.
வாய்வு சம்பந்தமான நோய்கள் இருந்தால், வயிறு செரிமான சக்தியை இழந்துவிடும். அப்படிப்பட்ட சூழலில் இதைத் துவையல் செய்து சாப்பிட்டால் செரிமான சக்தியைத் தூண்டிவிடும். அஜீரணக் கோளாறுகளைப் போக்கும். மூலநோயால் அவதிப்படுபவர்களுக்கு இந்தத் துவையல் பலன் தரும். மூலத்தால் மலத்துவாரத்தில் அரிப்பு, மலத்துடன் ரத்தம் கசிதல் போன்ற சூழலில் இந்தத் துவையலைச் சாப்பிடலாம். மேலும் பிரண்டையை நெய்விட்டு வதக்கி, அரைத்து, ஒரு டீஸ்பூன் வீதம் காலையிலும் மாலையிலும் சாப்பிட்டுவந்தால், நல்ல பலன் கிடைக்கும்.
ரத்தக்குழாய்களில் கொழுப்பு படிவதால் ரத்த ஓட்டத்தின் வேகம் குறையும். இதனால் இதயத்துக்குத் தேவையான ரத்தம் செல்வது தடைப்பட்டு, இதய வால்வுகள் பாதிப்படையும். இந்த பாதிப்புக்கு உள்ளானோர், அடிக்கடி இந்தத் துவையலைச் சாப்பிட்டு வந்தால் ரத்த ஓட்டம் சீராகும்; இதயம் பலப்படும். பெண்களுக்கு மாதவிடாய்க் காலத்தில் ஏற்படும் முதுகுவலி, இடுப்புவலி போன்றவற்றுக்கும் இது நல்ல மருந்து.