குழந்தையின் சேட்டையை பெற்றோர் அன்பாக சமாளிக்கும் முறை
இந்த வயதில் குழந்தைகளுக்கு அரவணைப்பு மிகவும் அவசியம். விளையாட்டாகவோ அல்லது உங்களை அறியாமலோ குழந்தையிடம் மிரட்டும் தொனியில் கத்துவது என்பது மிகவும் ஆபத்தானது. அந்த அதிர்வை குழந்தைகளால் ஏற்றுக் கொள்வது சிரமம் என்பதால் தூக்கத்தில் அதிர்ந்து எழுந்து அழும், இதனால் குழந்தையின் தூக்கம் பாதிக்கப்படும். இதனைத் தவிர்க்க மெலிதாக அவர்களை அணுகுவதே சிறந்தது. அதற்கு விரைவாக ரெஸ்பான்ஸ் கிடைப்பதை நீங்கள் கண்கூடாக உணரலாம்.
கோபத்தை அன்பால் அணுகுங்கள், ஓடி வந்து எதையாவது சிந்திவிட்டால், ஏன் ஓடி வந்தாய்? என்று கத்தி இனிமே வந்த கால ஒடச்சுருவேன் என்று மிரட்டாமல், கொட்டிருச்சு வாங்க க்ளீன் பண்ணலாம் என்று அழைத்து நீங்கள் சுத்தம் செய்யும் போது உடன் வைத்துக் கொள்ளுங்கள் உங்களுக்கு இரட்டிப்பு வேலை என்று நினைப்பதை குழந்தையிடம் பக்குவமாக உணர்த்துங்கள். மெதுவா வந்தா கொட்டியிருக்காதுல்ல இனிமே வீட்டுக்குள்ள ஓடிவரக்கூடாது என்று புரியவைத்திடுங்கள்.
குழந்தைகளிடத்தில் கத்துவது எந்த அளவிற்கு ஆபத்தோ அதேயளவு குழந்தைகளிடம் பேசாமல் இருப்பதோ அல்லது அவர்களை கண்டிக்காமல் இருப்பதோ தவறு. சிறு வயதில் அதிக செல்லத்துடன் அவர்களை அணுகினால் வளர்ந்த பின்பும், தவறுகள் செய்யும் போதும் அதே செல்லத்துடன் தன்னை அணுக வேண்டும் என்று விரும்புவர் அது பொய்க்கும் போது மனரீதியாக பெரிதும் பாதிக்கப்படுவர். அதனால் அன்பாக திருத்துங்கள்.கடிந்து, கத்தாமல் அரவணைத்து தவறை உணர்த்துங்கள்.