உறவுகள்புதியவை

குடும்பம் என்னும் அன்புச்சோலை

குடும்பம் என்னும் அன்புச்சோலை

புகார்க் கூடங்களாக ஏன் குடும்பங்கள் மாறிவருகின்றன? என்னை யாரும் புரிந்துகொள்வதில்லை என்று எல்லோரும் ஏன் பேசத் தொடங்கிவிட்டோம்? வாழ்வு பாடாய்ப் படுத்துவதாக ஏன் நினைக்கத் தொடங்கியுள்ளோம்?


சிலருக்கு இருக்கப் பிடிக்காமல் ஏன் வெறுக்கப் பிடிக்கிறது? உப்பு விற்கப்போனால் மழைபெய்கிறது, மாவு விற்கப்போனால் காற்றடிக்கிறது. சாண் ஏறினால் முழம் சறுக்கிறது. ஒவ்வொரு இல்லத்திலும் ஒவ்வொரு உள்ளத்திலும் நூற்றுக்கணக்கான புகார்ப் பட்டியல்கள். என்ன ஆயிற்று நம் இந்தியக் குடும்பங்களுக்கு?

‘வீடு சிறையாக மாறிவிட்டது. வறட்டு கவுரவமும் தேவையில்லாப் பிடிவாதமும் எங்களை வெறுப்பில் ஆழ்த்துகின்றன’ என்கிற இளைய சமுதாயத்தின் குரல் ஒருபுறம். பொறுப்பு வெறுப்பாய் மாறி மகனை, மகளை, மனைவியைக், கணவனைத், தந்தையைக் கொலை செய்யும் அளவுகூடக் கொண்டுபோய் விடுகிறது.

எதையும் விட்டுக் கொடுப்பதற்கு யாரும் தயாரில்லை. ஐவகை நிலமும் அறிந்தவன் பால்கனிச் செடியைப் பார்த்துக்கொண்டிருப்பது எவ்வளவு கொடுமையானதோ அதைப்போல் நல்ல குடும்ப அமைப்பு நம் கண் முன்சிதைந்து கொண்டிருப்பதைக் காண முடிகிறது.

வீட்டுக்குள் நுழைந்தாலே ஆளாளுக்குப் பிரச்சினைகளைக் கொண்டு வந்து கொட்டுகிறார்கள், வீட்டுக்குள் நுழையவே பிடிக்கவில்லை என்று இரவு பத்து மணிக்கு மேல் வீட்டுக்குள் நுழையும் குடும்பத் தலைவர்களைக் குடும்பங்கள் உருவாக்கிக் கொண்டிருக்கின்றனவா?

இருவரும் வேலைக்குச் சென்றுவிட்ட நிலையில் தனிமையின் துயர் அறுக்க இணையதளங்களிலும் சமூகஊடகங்களிலும் தங்களைத் தொலைத்துக் கொண்டிருக்கும் சின்னஞ்சிறு பறவைகளை இந்தக் குடும்பங்கள் எப்படி ஆற்றுப்படுத்தப் போகின்றன? உருகத் துடிக்கிற பனியைப் பருகத் துடிக் கிற இளைய உதடுகள் இது குறித்து என்ன சொல்லப் போகின்றன?

பொறுப்பாயிருக்கிற வரை வெறுப்பாயிருக்காது எதன்மீதும்! அந்தப் பொறுப்பை யார் யாருக்கு உணர்த்துவது? நாம் அசருகிற போதெல்லாம், ‘விடுறா இதெல்லாம் வாழ்க்கையில சகஜம். பிரச்சினையைத் தூக்கிப் போட்டுட்டு ஆத்தாளுக்கு பதினோறு ரூபாய் முடிஞ்சி வச்சிட்டு அடுத்தவேலை பாருடா’ என்று சொன்ன அந்த சுமைதாங்கி மனிதர்களை அன்னை இல்லங்களில் கொண்டு விட்டுவந்த இடரை இப்போது அனுபவிக்கிறோம்.


கால்நூற்றாண்டு உறவுகளை எல்லாம் திருமணம் என்கிற பந்தத்தின் பொருட்டு விட்டுவிலகி வந்து தன்னையே நம்பி வாழும் மனைவிக்கு மனது என்ற ஒன்று இருக்கிறது, அவள் நலன் நாடல் என் கடமை என்று கணவன் ஏன் நினைப்பதில்லை?

உலகம் செலுத்தும் பேரன்பில் ஓரன்பாவது நமக்குக் கிடைக்கத் தானே செய்யும்! நாம் மட்டும் ஏன் அந்த அன்பை மற்றவர்களுக்குத் தர மறுக்கிறோம்.

நாடகங்களில் காட்டுமளவு வெகு கொடூரமாக இன்னும் மாறவில்லை குடும்பவாழ்வு. கனவுகளுக்கும் யதார்த்தத்திற்கும் உள்ள இடைவெளியைச் சரியாகப் புரிந்துகொள்கிறவர்கள் வெற்றி வந்தால் அளவுக்கதிகமாய் ஆடாமலும் தோல்வி வந்தால் துவண்டுபோகாமலும் வெகுஇயல்பாய் இருக்கிறார்கள்.

என்னதான் நம் வாழ்வின் வினாடிகள் வெளியில் ஆட்டமும் ஓட்டமுமாய் கழிந்தாலும் ஆன்மா ஆனந்தமயமாவதும் அமைதியடைவதும் இல்லத்தில்தான். இல்லத்தில் உள்ளது நம் உள்ளத்தின் நிம்மதி. அந்த இல்லத்தைச் சொர்க்கமாக்குவதும் நரகமாக்குவதும் நாம்தான்.

அலுவலகத்தில் மேலாளர் என்ன சொன்னாலும் பொறுமையுடன் யோசித்து அமைதியாய் பேசும் நாம் வீட்டில் எரிந்துவிழுகிறோம். ஒன்றுமில்லாத சின்ன விசயத்திற்கெல்லாம் கோபப்படுகிறோம். வெளியே போய்விட்டு வீட்டிற்குள் நுழையும்போது எப்படிச் செருப்பை வெளியே கழற்றிப் போட்டுவிட்டு வருகிறோமோ அதேபோல் வெளியில் உள்ள பிரச்சினைகளைக் குடும்பத்திற்குள் கொண்டுவராமல் இருப்பதே குடும்பஅமைதிக்கு வழிவகுக்கும்.

சொற்களால் பிரிந்த குடும்பங்கள் ஆயிரம்! கனத்த சொற்களால் தான் நம் கருத்துகளை எடுத்துச் சொல்லவேண்டும் என்பதில்லை. மென்மையாக ஆனால் அழுத்தமாக நாம் சொல்லவேண்டியதைச் சொல்லலாம்.


மீட்டித்தான் ஆகவேண்டும் இந்த வாழ்வெனும் வீணையை, வாழ்ந்து காட்டித்தான் ஆகவேண்டும் நம்மை வெறுப்போருக்கு மத்தியிலும். தொட்டிக்குள் வாழ்ந்தாலும் சலிப்பில்லாமல் நீந்துகிற மீன்களைப் போல் நம் இயக்கம் நம்மை உயிர்ப்போடு வைத்திருக்கும். மூலவருக்கு முன் மனமுருகி பிரார்த்திக்கும்போது யாரேனும் மணியசைத்து அது நடக்கும் என்று குறியீடாக உணர்த்திவிடுகிற மாதிரி சுற்றிநடக்கும் சம்பவங்கள் நம்மை பாதிக்கத்தான் செய்கின்றன.

குழந்தைகளுக்குச் சிறுவயதிலிருந்தே வாழ்வின் நுட்பங்களைக் கற்றுத்தந்து, வெளியிடங்களுக்கு அழைத்துச் சென்று எப்படி இயங்குகிறது எப்படி ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்வது? எப்படி முடிவெடுப்பது? வெளிஉலகத்தில் எப்படி நாம் நம்மை நிலைப்படுத்திக்கொள்வது? என்று உணர்த்தியிருந்தால் அவர்கள் முகத்தில் எப்போதும் மகிழ்ச்சி நிலைகொண்டிருக்கும்.

அப்பா அன்பு அப்போது புரியாது, அம்மா தியாகம் தான் அம்மாவாக மாறும்போதுதான் தெரியும். பாட்டியின் பொக்கை வாய்ச் சிரிப்புக்கும் அவள் சொல்லும் ஆயிரமாயிரம் கதைகளுக்கும் எதை நாம் ஒப்பீடாகச் சொல்லமுடியும்? தன் தங்கைக்குத் தலைச்சன் பிள்ளை பிறந்திருக்கிறது என்று ஆசையோடு சேனை வைக்க ஓடிவரும் அன்பு வடிவமான தாய்மாமனுக்கு ஈடாக வேறுயாரைச் சொல்ல முடியும்? உறவுகளை மதிக்கக் கற்றுத் தாருங்கள்.


உறவுகளின் உன்னதத்தைச் சிறுவயதிலிருந்தே குழந்தைகளுக்குப் புரியவையுங்கள். பெரியவர்களின் சொற்படி நடப்பது பாதுகாப்பானது என்று சொல்லி வளருங்கள்.

வெறுப்பில் இல்லை வாழ்வின் வெற்றி, நிறைவின் இருப்பில்தான் உள்ளது என்று குழந்தைகளுக்கு உணர்த்துங்கள். வாழ்வெனப்படுவது வலியோடும் வலிமையோடும் வாழ்ந்து காட்டுவது என்று புரிய வையுங்கள். குடும்பம் முழுமையான வாழ்தலுக்கான அன்பின் பயிற்சிக்கூடம். அதில் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒன்றைக் கற்றுக்கொண்டே இருக்கிறோம், ஏதாவது ஒன்றைப் பெற்றுக்கொண்டே இருக்கிறோம்.

அன்பிற் சிறந்த தவமில்லை என்றார் மகாகவி பாரதி. அன்பைத் தவிர குடும்பத்தில் வேறில்லை.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker