உடல் உஷ்ணத்தால் ஏற்படும் பாதிப்புகளும் – தீர்வும்
* உடற்சூடு அதிகரித்தால் நம்முடைய பித்தப்பை பாதிப்புக்குள்ளாகிறது. அதோடு கல்லீரலும் பாதிக்கப்படுகிறது. இதன் காரணமாக சில உஷ்ண நோய்கள் நம்மைத் தாக்குகிறது.

உடற்சூடு அதிகரிப்பதால் ஏற்படும் பாதிப்புகள்
மஞ்சள் காமாலை, மலச்சிக்கல், தூக்கமின்மை, வயிற்று எரிச்சல், சிறுநீரக எரிச்சல், கண் எரிச்சல், மூலநோய், மலக்குடல் எரிச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படும். உடற்சூட்டை பொறுத்தளவில் ஆணுக்கும் பெண்ணுக்கும் பெரிதாக வித்தியாசம் ஒன்றும் இல்லை. ஆனால், மாதவிலக்கு நாட்களின் போது பெண்களுக்கு உடல் சூடு அதிகரிக்காத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், மாதவிலக்கு நாட்களின் உடற்சூடு பெண்களுக்கு வெள்ளைப்படுதல் பிரச்சனையை உண்டுபண்ணும்.
புளிப்பு, உப்பு, காரம் உள்ள உணவுகளை அதிகளவில் உட்கொண்டால் நம்முடைய உடல் மிகுந்த உஷ்ணம் அடையும். மேலும் டீ, காஃபி, கோலா போன்ற கஃபைன் வகை பானங்கள், மீன், கருவாடு, கத்தரிக்காய், புளித்த தயிர், வினிகர், ஊறுகாய் போன்ற உணவுகளும் நம்முடைய உடற்சூட்டை அதிகரிக்கச் செய்யும். மதுப்பழக்கம், புகைப்பழக்கம் காரணமாகவும் உடலின் வெப்பநிலை அதிகமாகிறது.
உடற்சூடு பிரச்சனை வராமல் இருப்பதற்கு வெள்ளரிக்காய், முள்ளங்கி, வெண்பூசணி, இளநீர், புடலங்காய் போன்ற நீர்ச்சத்து நிறைந்துள்ள உணவுப்பொருட்களை அதிக அளவில் சேர்த்துக் கொள்வது நல்லது. கீரை வகைகளில் மணத்தக்காளி, பொன்னாங்கன்னி போன்ற உணவுகள் சிறந்தவை. அதேபோல வைட்டமின் சி அதிகம் நிறைந்த சிட்ரஸ் பழங்களான சாத்துக்குடி, ஆரஞ்சு போன்றவற்றை சாப்பிட்டு வருவதன் மூலமும் உடலின் வெப்பநிலை அதிகரிக்காமல் தடுக்கலாம்.