தேங்காய் எண்ணெய் மசாஜ் தீர்க்கும் சரும பிரச்சனைகள்
உடல் சுகாதாரத்திற்காக பயன்படுத்தப்படும் பொருட்களிலும், மேக்கப் எனப்படும் அழகு சாதனப்பொருட்களிலும் ரசாயன கலவைகள் உள்ளன. இவை சருமத்தின் மூலம் ரத்தத்தில் கலக்கின்றன என்பது ஆய்வின் கூற்று. இவை அனைத்து சுகாதார பொருட்களுக்கும் அலங்காரப் பொருட்களுக்கும் கண்டிப்பாய் பொருந்தாது. அநேக தரமான பொருட்கள் நம்மிடையே உள்ளன. இங்கு குறிப்பிடப்படுவது எல்லாம் தரமில்லாத பொருட்களால் ஏற்படும் பாதிப்பினைப் பற்றியே.
இத்தரமில்லாத பொருட்களால் ஏற்படும் பாதிப்பினைத் தவிர்க்க இயற்கையே நமக்கு பல நல்ல பொருட்களை அளித்துள்ளது. அதில் ஒன்றுதான் தேங்காய் எண்ணெய். தேங்காய் எண்ணெயினை சமையலில் உபயோகப்படுத்துங்கள் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
உதடுகள் வெடிப்பு, வறண்டு விடுதல் இவற்றிற்கு விலை அதிகமான பொருட்கள் வாங்கி உபயோகிக்க வேண்டும் என்பதில்லை. ஒரு சொட்டு தேங்காய் எண்ணெயுடன் ஒரு சொட்டு நீர் கலந்து தடவி வந்தாலே போதும்.
வெயிலில் சென்று சருமம் வாடி வதங்கினால் சிறிது தேங்காய் எண்ணெய் தடவுங்கள். வெயில் எரிச்சல் அடங்கும். கொலஜன் நன்கு உருவாகி சருமத்தினை இளமையாக வைக்கும்.
தேங்காய் எண்ணெக்கு கிருமி, பூஞ்சை பாதிப்பு தவிர்ப்பு ஆகிய குணங்கள் இயற்கையிலேயே இருப்பதால் தான் இதனை உடலில் தடவி குளிக்கச் சொல்கிறார்கள்.
தலை வறண்டு இருந்தால் அதிக சரும பாதிப்புகள் ஏற்படலாம். தலைக்கு தேங்காய் எண்ணெய் கொண்டு பராமரிப்பது பரிந்துரைக்கப்படுகின்றது. இமை, நகம் இவற்றினை வறட்சியில் இருந்து பாதுகாக்க தேங்காய் எண்ணெய் பயன்படுத்த வேண்டும்.
வெளியில் செல்லும்போது மேக்கப் பயன்படுத்தும் பழக்கம் உள்ளவர்கள் சிறிது பஞ்சில் தேங்காய் எண்ணெய் தொட்டு முகம் முழுவதும் தடவி மேக்அப்பினை எடுத்து விடலாம். பின்னர் முகத்தினை நீர் ஊற்றி சுத்தம் செய்து கொள்ளலாம். இது மிகச் சிறந்த சரும பாதுகாப்பாக அமையும்.
சில சொட்டு தேங்காய் எண்ணெய், சில சொட்டு நீர் கலந்து குளித்த பின் உடலில் தடவலாம். அதிக காரணமான பொருட்களை உபயோகிக்காமல், சரும, முடி ஆரோக்கியத்திற்காக அதிக செலவு செய்யாமல் எளிதாய் பல நன்மைகளைத் தரும் தேங்காய் எண்ணெயினை இனி பயன்பாட்டில் கொண்டு வருவோமாக.