உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் பழக்கங்கள்
சிலர் விடாமல் எந்நேரமும் செல்போனை குடைந்து கொண்டே இருப்பார்கள். கண் சோர்ந்து தானே மூடும் வரை இந்த வேலையைச் செய்வார்கள். இப்பழக்கம் உடையவர்கள், இது மிகவும் ஆபத்தானது என்பதனை உணர்ந்து தானே முயற்சி செய்து வெளிவர வேண்டும். சிறிது நேரம் நல்ல புத்தகம் படியுங்கள். வெளியில் சென்று விளையாடுங்கள். செல்போனை அவசியத்திற்கு மட்டுமே பயன்படுத்துங்கள். மணிக்கணக்கில் போனில் பேசுவதும் உடலுக்கு அநேகத்தீமைகளை அளிக்கும்.
இதன் விளைவுகள் இவர்களை மிகவும் சோம்பேறிகளாகவும், உடல் நலம் அற்றவர்களாகவும் முன்பின் தெரியாதவர்களை செல்போன் மூலம் நண்பர் என்ற பெயரில் பழகி வாழ்க்கையைத் தொலைத்தவர்களாகவும் ஆக்கி விடுகிறது. என்பது சமீபத்திய ஆய்வின் கூற்று. எனவே இன்றே உங்களை சரி செய்து கொள்ளுங்கள்.
முதல் நாள் இரவு சரியான தூக்கம் இல்லையா? படுக்கையில் புரண்டு படுத்து, பழைய வாழ்க்கை சம்பவங்களை யோசித்து வருந்தி பின்பு வெகு நேரம் சென்று தூங்குவர். சமீபத்திய ஆய்வுகள் இத்தகையோர் மறுநாள் அதிக இனிப்புகளை சாப்பிடுவதாகக் கூறுகின்றது. மேலும் இவர்களுக்கு உடல் வீக்கம் ஏற்படுகின்றது. காலப் போக்கில் இவர்களுக்கு எடை கூடுதல், சர்க்கரை நோய் பாதிப்பு ஆகியவை ஏற்படுகின்றன.
அமைதியான, ஆழ்ந்த துக்கம் உடல் ஆரோக்கியத்திற்கு மிக அவசியமான ஒன்று. இரவு படுக்கப்போகும் முன் ஈ மெயில் பார்ப்பது, டி.வி. பார்ப்பது போன்றவை உடலில் ஸ்ட்ரெஸ் பாதிப்பினை ஏற்படுத்துகின்றது. இதற்கு பதிலாக நல்ல புத்தகத்தினை சிறிது நேரம் படித்தால் அமைதியான தூக்கம் ஏற்படும் என்கின்றனர் ஆய்வாளர்கள். அதுவும் மெழுகுவர்த்தி ஒளி சிறந்தது என்கின்றனர். இவற்றினை கடை பிடிப்போமே.