ஆரோக்கியம்புதியவைமருத்துவம்

மனஅழுத்தத்தில் இருந்து விடுபட வழிகள்

மனஅழுத்தத்தில் இருந்து விடுபட வழிகள்

ஆண்களை விட பெண்கள் மன அழுத்த பாதிப்புக்கு அதிகம் ஆளாகிறார்கள். குடும்பத்தை நிர்வகிப்பதில் ஆண்களைவிட பெண்களுக்கு பொறுப்புக்கள் அதிகம். வீட்டு வேலை, குழந்தை வளர்ப்பு, வரவு செலவு, குடும்ப எதிர்காலம் என குடும்ப சுமைகள் அவர்கள் மனதை பாரமாக்கிவிடுகிறது. நாளுக்கு நாள் பொறுப்புகள் அதிகமாவதை உணரும்போது உடல் நலத்தை கவனத்தில் கொள்ளாமல் விட்டுவிடுகிறார்கள்.


அது நோய் பாதிப்புகளுக்கு வழிவகுத்துவிடும். பெண்கள் உடல் நலனில் சிறிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தினாலும் அது ஒட்டுமொத்த குடும்ப உறுப்பினர்களையும் பாதிப்புக்குள்ளாக செய்துவிடும். அன்றாட வீட்டு வேலைகளில் தொடங்கி பல விஷயங்களில் பெண்களின் பங்களிப்பு அவசியமானதாக இருக்கிறது. குடும்ப நிர்வாகம் முடங்கி போய்விடும் சூழல் ஏற்படும்போது அது பெண்கள் மனநலத்தையும் பாதிக்கிறது. எளிதில் உணர்ச்சிவசப்படுவதும் மன அழுத்த பிரச்சினை தலைதூக்குவதற்கு காரணமாகிவிடுகிறது.

மன அழுத்தத்தில் இருந்து விடுபட வழிகள்:

* மன அழுத்தத்திற்கும், உடலுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. மனக்கவலை அடையும்போது உடலில் உள்ள தசைகள் இறுக தொடங்கும். சிறிது நேரத்திலேயே உடல் சோர்வு அடைந்து விடும். அதற்கு இடம் கொடுக்காமல் மனதையும், உடலையும் ஒருங்கிணைக்க வேண்டும்.

* மன அழுத்தத்திற்கு ஆளாகும்போது உடலில் ஒருவித பதற்றம் தோன்றக்கூடும். அந்த சமயத்தில் ஐந்து முறை ஆழமாக மூச்சை இழுத்துவிட வேண்டும். அப்படி மூச்சை சீராக இழுத்துக்கொண்டே மனதுக்கு பிடித்தமான வார்த்தைகளை உச்சரித்து வரலாம். அல்லது மனதை சந்தோஷப்படுத்தும் பழைய நினைவுகளை அசைபோடலாம். அது உடலையும், மனதையும் இயல்பு நிலைக்கு கொண்டு வர வழிவகுக்கும்.


* மன அழுத்தம் அதிகமாகும்போது ஆத்திரத்தில் தவறான முடிவுகள் எடுக்கத் தோன்றும். ஆதலால் மனம் நிம்மதி இழந்து தவிக்கும்போது முடிவெடுப்பதை தள்ளிப்போடுங்கள்.

* மனம் இயல்பு நிலைக்கு திரும்பும் வரை நிதானத்தையும், பொறுமையையும் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம்.

* மன அழுத்தம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக வெளிப்படும். சிலருக்கு மனம் படபடக்கும், ஒருசிலருக்கு சீரற்ற தன்மையில் சுவாசம் வெளிப்படும். ஒருசிலருக்கு தலைவலி, தோள்பட்டை வலி ஏற்படக்கூடும். அத்தகைய அறிகுறிகள் தென்படும்போதே மன அழுத்த பாதிப்புக்கு இடம்கொடுக்காமல் அதிலிருந்து மீண்டு வர முயற்சிக்க வேண்டும்.

* எத்தகைய மன பதற்றத்தையும் போக்கி மனதை சாந்தப்படுத்தும் சக்தி இசைக்கு உண்டு. பிடித்தமான பாடல்களை கேட்கலாம். இனிமையான இசை எகிறும் இதய துடிப்பை இயல்பு நிலைக்கு கொண்டு வர வழிவகுக்கும்.

* தியானத்திற்கு மன அழுத்தத்தை விரட்டி அடிக்கும் ஆற்றல் உண்டு. மனதை ஒருமுகப்படுத்தும் வண்ணம் இறை வழிபாட்டிலும் கவனம் பதிக்கலாம்.


* வஜ்ராசனம் போன்ற யோகாசனங்களையும் செய்யலாம். அது மனதையும், உடலையும் ஒரு நிலைப்படுத்தும்.

* யோகாசனங்களில் கவனம் பதிக்க முடியவில்லை என்றால் நேராக நிமிர்ந்து பின்னர் குனிந்து அமரலாம். அவ்வாறு சிலதடவை செய்யும்போது ரத்த ஓட்டம் சீரடையும். அது மனதையும் இலகுவாக்கும்.

* மன பாரத்தை இறக்கி வைக்க நடைப்பயிற்சியும் மேற்கொள்ளலாம். கொஞ்ச தூரம் நடைப் பயிற்சி மேற்கொள்ளும்போது கண்கள் கவனத்தை திசைதிருப்பும். பார்க்கும் விஷயங்களில் கவனத்தை பதிய செய்யும்போது மன பாரம் குறையும்.

* உணவு விஷயத்திலும் கவனம் செலுத்த வேண்டும். மன அழுத்தம் நீடிக்கும் சமயத்தில் காபி பருகுவதை தவிர்க்க வேண்டும். பழச்சாறுகள், தண்ணீர் பருகலாம். நொறுக்கு தீனிகளை தவிர்ப்பதும் நல்லது.


* போதிய தூக்கம் இல்லாமல் அவதிப்படுவதும் மன அழுத்தம் தோன்ற காரணமாகிவிடும். ஆழ்ந்த தூக்கத்திற்கு மனதை ஆட்படுத்த பழகிக்கொள்ள வேண்டும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker