அடடே… ஒரு ஹேர் கண்டிஷனர் வெச்சு இவ்வளவு வேலைய செய்யலாமா?!
அனைவரது வீட்டிலும் சரும பராமரிப்பு பொருட்கள் மட்டுமின்றி, தலைமுடி பராமரிப்பு பொருட்களும் கட்டாயம் இருக்கும். குறிப்பாக தலைமுடியின் மென்மையை அதிகரிக்கும் ஹேர் கண்டிஷனர் நிச்சயம் இருக்கும். அனைவருமே நல்ல தரமான விலை அதிகமான ஹேர் கண்டிஷனர்களைத் தான் வாங்கிப் பயன்படுத்துவோம்.
ஆனால் நாம் வாங்கும் சில பொருட்களுக்கு நாம் பயன்படுத்தாத பிராண்டில் கண்டிஷனர்களை இலவசமாக வழங்குவார்கள். அப்படி இலவசமாக கிடைக்கும் கண்டிஷனர்களை தூக்கி எறியாமல் அதைக் கொண்டு, நம் வீட்டில் நாம் சந்திக்கும் பல பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம். என்ன புரியவில்லையா? ஹேர் கண்டிஷனர்களை நாம் பலவாறு பயன்படுத்தலாம்.
இக்கட்டுரையில் ஒரு ஹேர் கண்டிஷனரைக் கொண்டு எம்மாதிரியான பிரச்சனைகளுக்கு எல்லாம் தீர்வு காணலாம் என கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து, நீங்க அன்றாடம் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு ஹேர் கண்டிஷனரைக் கொண்டே தீர்வு காணுங்கள்.
பளபளப்பான ஷூ
நீங்கள் அணியும் ஷூக்களில் வெள்ளை நிற கோடுகள் அசிங்கமாக காணப்பட்டால், அதனை வீட்டில் உள்ள ஹேர் கண்டிஷனர்களைக் கொண்டே எளிதில் நீக்கலாம். எனவே வீட்டில் ஷூ பாலிஷ் செய்யும் க்ரீம்/நீர்மம் காலியாகிவிட்டால், ஹேர் கண்டிஷனர் கொண்டு பளபளபாக்குங்கள்.
சுருங்கிய துணி
உங்களது விருப்பமான உடையை வாஷிங் மிஷினில் போட்டு துவைத்த பின், அது சுருங்கி அசிங்கமாக காட்சியளிக்கிறதா? கவலைப்படாதீர்கள். ஒரு வாளி நீரில் 1 டேபிள் ஸ்பூன் கண்டிஷனர் சேர்த்து கலந்து, அதில் சுருங்கிய துணியைப் போட்டு சிறிது நேரம் ஊற வைத்து, பின் பிழிந்து காயப் போடுங்கள். இதனால் துணி சுருக்கம் போய்விடும்.
ஹேண்ட் வாஷ்
ஹேர் கண்டிஷனர் உங்களது தலைமுடியை மட்டும் தான் மென்மையாக்கும் என்றும் நினைக்காதீர்கள். கையால் துணியைத் துவைத்த பின், சிறிது கண்டிஷனரை கையில் விட்டு தேய்த்துக் கழுவுங்கள். இதனால் துணி சோப்பால் கைகள் வறட்சியடைவதைத் தடுத்து, கைகளைப் பட்டுப் போன்று மென்மையாக வைத்துக் கொள்ளலாம்.
கைவிரல் மோதிரம்
கைவிரலில் மோதிரம் சிக்கிக் கொண்டதா? அதைக் கழற்ற முடியாமல் அவஸ்தைப்படுகிறீர்களா? அப்படியானால் சோப்பை பயன்படுத்துவதற்கு பதிலாக கண்டிஷனரை மோதிரத்தைச் சுற்றி தடவிக் கொண்டு, பின் மென்மையாக கழற்றுங்கள். இதனால் மோதிரம் எளிதில் வெளியே வந்துவிடும்.
மேக்கப் ரிமூவர்
உங்களிடம் நல்ல தரமான மேக்கப் ரிமூவர் இல்லையா? வீட்டில் ஹேர் கண்டிஷனர் உள்ளதா? அப்படியானால் கவலையை விடுங்கள். ஹேர் கண்டிஷனரைக் கொண்டே மேக்கப்பை நீக்குங்கள். இதனால் மேக்கப் எளிதில் வந்துவிடும். மேலும் சருமமும் பாதிக்கப்படாமல் சுத்தமாகவும் பட்டுப் போன்றும் இருக்கும்.
மேக்கப் பிரஷ் க்ளீனர்
உங்கள் மேக்கப் பிரஷ் மிகவும் அழுக்காக உள்ளதா? அதை எளிய முறையில் சுத்தம் செய்ய வேண்டுமா? அப்படியென்றால், ஹேர் கண்டிஷனர் பயன்படுத்துங்கள். இதனால் மேக்கப் பிரஷ் பளிச்சென்று புதிது போல் காட்சியளிக்கும்.
கதவு சப்தம்
கதவுகளில் இருந்து சப்தம் வருகிறதா? இதற்கு நீங்கள் க்ரீஸ் பயன்படுத்துவீர்களா? க்ரீஸ் பயன்படுத்தி கதவுகளின் அழகைக் கெடுப்பதற்கு பதிலாக, குளியலறையில் உள்ள ஹேர் கண்டிஷனரை கதவுகளில் தடவுங்கள். இதனால் கதவுகளில் இருந்து வரும் சப்தங்கள் உடனே போய்விடும்.
அசிங்கமான விரல் நகங்கள்
உங்கள் விரல் நகங்களின் முனைகளில் அசிங்கமாக தோல் வெளியே தெரிகிறதா? அதைப் போக்கி உங்கள் விரல் நகங்களை அழகாக வைத்துக் கொள்வதற்கு அதை பிடுங்குவதற்கு முன்பு, ஹேர் கண்டிஷனரை விரல் நகங்களில் சிறிது நேரம் தேயுங்கள். இதனால் விரல் நகங்கள் அழகாக காட்சியளிக்கும்.
ஷேவிங் ஜெல்
உங்கள் வீட்டில் திடீரென்று ஷேவிங் ஜெல் தீர்ந்துவிட்டதா? அதை வாங்குவதற்கு நேரமில்லையா? அப்படியானால் வீட்டில் உள்ள ஹேர் கண்டிஷனரை ஷேவிங் ஜெல்லாக பயன்படுத்துங்கள். இதனால் சருமம் வறட்சியடைவது தடுக்கப்பட்டு, சருமம் பட்டுப் போன்று அழகாக இருக்கும்.
வறண்ட முடி
உங்கள் தலைமுடி அசிங்கமாக வறண்டு குருவிக்கூடு போன்று காணப்படுகிறதா? அப்படியானால் கண்டிஷனரை ஸ்கால்ப்பில் படாமல், தலைமுடியில் மட்டும் தடவி பின் நீரால் தலைமுடியை அலசுங்கள். இதனால் தலைமுடி நன்கு பட்டுப்போன்று மென்மையாகவும் அழகாகவும் காட்சியளிக்கும்.
பொலிவிழந்த முடி
தலைமுடி பொலிவிழந்து காணப்படுகிறதா? உங்கள் பொலிவிழந்த முடியின் தோற்றத்தை சிறப்பாக காட்ட, ஹேர் கண்டிஷனரைப் பயன்படுத்துங்கள். இதனால் உங்கள் தலைமுடி நல்ல தோற்றத்துடன் அழகாகவும், பொலிவான தோற்றத்திலும் காணப்படும்.
அடைப்புக்கள்
வீட்டு சமையலறையில் அழுக்கு நீர் செல்லும் குழாய்களில் அடைப்புக்கள் ஏற்பட்டிருந்தால், அந்த குழாய்களில் சிறிது ஹேர் கண்டிஷனரை விடுங்கள். பின் சிறிது நேரம் கழித்து நீரை ஊற்றுங்கள். இதனால் அடைப்புக்கள் நீங்கி, குழாய்களில் நீர் தடையின்றி வெளியேறும்.
துணி நறுமணம்
என்ன தான் துணி துவைத்தாலும், நீங்கள் துவைத்த துணி நல்ல நறுமணத்துடன் இல்லையா? அப்படியானால், துணி நல்ல மணத்துடன் இருக்க, நீரில் சிறிது ஹேர் கண்டிஷனரை ஊற்றி பின் அந்நீரில் துணியை ஒருமுறை அலசுங்கள். இதனால் நீங்கள் துவைத்த துணி நல்ல மணத்துடன் இருக்கும்.
துரு
வீட்டில் உள்ள இரும்பு பொருட்கள் துரு பிடித்து அசிங்கமாக காட்சியளிக்கிறதா? அதை நீக்கி பொருளை பளிச்சென்று காட்ட, ஹேர் கண்டிஷனர் கொண்டு துரு பிடித்த இரும்பு பொருட்களைத் துடையுங்கள். இதனால் துரு எளிதில் நீங்கி, பொருட்களும் பளிச்சென்று காணப்படும்.
சரும பராமரிப்பு
ஒரு வாளி முழுவதும் வெதுவெதுப்பான நீரை நிரப்பி, அதில் சிறிது ஹேர் கண்டிஷனரை சேர்த்து கலந்து, குளித்தால், வறண்டு அசிங்கமாக காணப்படும் சருமம், மென்மையாகவும், பட்டுப் போன்றும் அழகாக காட்சியளிக்கும். வேண்டுமானால் முயற்சித்துப் பாருங்கள்.
பாலிஷ்
மெட்டல் பொருட்களை பாலிஷ் செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் ஹேர் கண்டிஷனர் பயன்படுத்துங்கள். இதனால் மெட்டல் பொருட்கள் பளபளவென்று மின்னுவதோடு, புதிது போன்றும் காட்சியளிக்கும். முக்கியமாக ஹேர் கண்டிஷனர் பயன்படுத்திய பின், சுத்தமான துணியால் துடைத்துவிடுங்கள்.
பேண்ட் எயிடு
காயம் ஏற்பட்ட இடத்தில் ஒட்டியிருக்கும் பேண்ட் எயிடை எடுக்க முடியவில்லையா? அப்படியானல் பேண்ட் எயிடின் முனைகளில் சிறிது கண்டிஷனரைத் தடவுங்கள். இதனால் முனைகள் தளர்ந்து எளிதில் வெளியேற்றும் வகையில் வந்துவிடும். மேலும் வலி இல்லாமலும் இருக்கும்.
சிக்கிக் கொண்ட ஜிப்
உங்கள் வீட்டில் இருக்கும் பையின் ஜிப் அல்லது ஜீன்ஸ் பேண்டின் ஜிப் சிக்கிக் கொண்டால், அதை எளிதில் சரிசெய்ய எண்ணெய் அல்லது மெழுகிற்கு பதிலாக, ஹேர் கண்டிஷனரைப் பயன்படுத்துங்கள். இதனால் சிக்கிய ஜிப் எளிதில் வெளிவந்துவிடும்.