அழகு..அழகு..புதியவை

வீட்டிலேயே சரும பராமரிப்யை மேற்கொள்ளலாம்

வீட்டிலேயே சரும பராமரிப்யை மேற்கொள்ளலாம்

நம் சருமத்தின் இறந்த செல்களை நீக்குவதற்கு ஃபேஷியல் செய்து கொள்ளலாம். நமது தோலுக்கு தகுந்த மாதிரியான பொருட்களை தேர்ந்தெடுத்து பயன்படுத்த வேண்டும். மாதத்திற்கொரு முறையாவது இறந்த செல்களை நீக்க வேண்டும். பார்லருக்கும் செல்லலாம். ஆனால் நாம் பயன்படுத்தும் அழகு சாதனப் பொருட்கள் தரமானதாக இருக்கவேண்டும்.
அந்த விஷயத்தில் நாம் மிகக் கவனமாக இருக்க வேண்டும். பணத்துக்காகப் பார்த்தால் நம் சருமத்தின் அழகு பாதிக்கப்படும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அதற்காக அதிக பணம் செலவழிக்க வேண்டியதில்லை. ஆனால் நாம் வாங்கும் காஸ்மெட்டிக்ஸ் தரமானதாக இருக்கிறதா என்று பார்த்து வாங்க வேண்டியது அவசியம். வீட்டிலும் சருமப் பராமரிப்பு மேற்கொள்ளலாம்.

கிளன்சிங்


காய்ச்சாத பால் எடுத்து அதனுடன் கிளிசரின் பத்து சொட்டு, எலுமிச்சைச் சாறு ஐந்து சொட்டு கலந்து அதில் பஞ்சை நனைத்து முகம், கழுத்து மற்றும் கைகள் என அழுந்தித் துடைக்க வேண்டும். இது ஓர் எளிமையான சிறந்த கிளன்சிங் முறை.

ஸ்க்ரப்

நன்கு பழுத்த பப்பாளிப்பழம் அல்லது அன்னாசிப்பழம் அல்லது ஸ்ட்ராபெர்ரிப் பழத்தை மிக்ஸியில் விட்டு தண்ணீர் விடாமல் அரைத்து அதனுடன் இரண்டு சிட்டிகை பட்டைப் பொடி, கால் ஸ்பூன் சர்க்கரை கலந்து அந்தக் கலவையை முகம், கழுத்து, கை போன்ற இடங்களில் வட்டவட்டமாகத் தேய்க்க வேண்டும். இதனால் நம் உடம்பில் இருக்கும் இறந்த செல்கள் நீங்கும். இதற்காக தனியாக நேரம் ஒதுக்க வேண்டும் என்று கூட அவசியமில்லை. இதனை குளிப்பதற்கு முன்னால் நன்கு தேய்த்து சிறிது நேரம் ஊற விட்டுப் பின்னர் குளிக்கலாம். பப்பாளி, அன்னாசி மற்றும் ஸ்ட்ராபெர்ரி போன்ற பழங்களில் உள்ள என்ஸைம்கள் இறந்த செல்களை நீக்கும் தன்மை கொண்டவை. வாரம் இரண்டு முறை இந்த ஸ்க்ரப்பை செய்து கொள்ளலாம்.

ஃபேஸ் பேக்

முகப்பொலிவைக் கூட்டுவதற்காக முகம் மற்றும் கழுத்திற்கு வாரம் ஒரு முறை ஃபேஸ் பேக் போடலாம். வீட்டிலேயே எளிமையாக ஃபேஸ் பேக் தயாரிக்கலாம். அதற்கு முதலில் மேரிகோல்டு வாட்டர் தயாரிக்க வேண்டும்.


மேரி கோல்டு வாட்டர் தயாரிக்கும் முறை

மினரல் வாட்டர் – 1 லிட்டர்
கிளிசரின் – 30 மில்லி
சாமந்திப் பூ – இரண்டு கை கொள்ளும் அளவு.

மினரல் வாட்டரை நன்கு கொதிக்க விட்டு இறக்கி அதில் சாமந்திப் பூவையும் கிளிசரினையும் போட்டு 24 மணி நேரத்திற்கு மூடி வைத்துவிட வேண்டும். மறுநாள் அந்த நீரை வடிகட்டி கண்ணாடி பாட்டிலில் ஊற்றி குளிர்சாதனப் பெட்டியில் வைத்துவிட்டால் 15 நாட்களுக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம். இரவில் படுக்கும்போது அந்த நீரை பஞ்சில் தொட்டு முகம், கழுத்துபோன்ற பகுதிகளை அழுந்தி துடைக்கலாம். இந்த வாட்டர் சிறந்த டோனராக செயல்படும். அடைப்பட்டிருக்கும் முகத்துவாரங்கள் திறந்து எண்ணெய் பசை மற்றும் அழுக்கு ஆகியவற்றை நீக்கும்.


ஃபேஸ்பேக் தயாரிக்கும் முறை

அதி மதுரப்பொடி – அரை தேக்கரண்டி,
அரிசி மாவு – அரை தேக்கரண்டி, (ஜப்பானீஸ் டெக்னிக்),
சர்க்கரை – ஒரு சிட்டிகை,
லைம் ஆயில் (அரோமா ஆயில்) (Lime oil)  – 3 சொட்டுக்கள்,
ஜெர்ரேனியம் ஆயில் (அரோமா ஆயில்) ( Geranium oil) – 3 சொட்டுக்கள்.

இவை அனைத்தையும் மேரிகோல்டு வாட்டர் போட்டு கலந்து முகம், கழுத்துப் போன்ற பகுதிகளில் தேய்த்து 15 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். அதன் பிறகு கழுவ வேண்டும். இந் தஃபேஸ்பேக்கை பயன்படுத்த முகச்சுருக்கங்கள் குறையும். இப்படி எளிமையான முறையில் நம் அழகை பாதுகாக்கலாம்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker