தாய்மை-குழந்தை பராமரிப்புபுதியவை

குழந்தைகளே காயம் இன்றி விளையாடுவோம்

குழந்தைகள் விளையாடும்போது கவனமாக இல்லாவிட்டால் காயம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். எனவே காயம் படாமல் விளையாடுவது பற்றி கொஞ்சம் பார்ப்போமா…

விடுமுறை விட்டாச்சு. குட்டீஸ் அனைவரும், ஜாலியாக விளையாடி பொழுது போக்கிக் கொண்டிருப்பீர்கள் அப்படித்தானே!. விளையாடும்போது கவனமாக இல்லாவிட்டால் காயம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். காயங்கள் மோசமான பாதிப்புகளையும், உயிர்ப்பலியையும் உருவாக்கும் ஆபத்து கொண்டவை. எனவே காயம் படாமல் விளையாடுவது பற்றி கொஞ்சம் பார்ப்போமா…

ஆண்டுதோறும் உலகம் முழுவதும் 40 கோடி குழந்தைகள் காயம் அடைகிறார்களாம். இதில் 7 லட்சத்து 50 ஆயிரம் குழந்தைகள் இறந்துவிடுவதாகவும் தெரியவருகிறது. விபத்துகளைப் போலவே விளையாட்டிலும் மோசமான காயங்கள் உண்டாகின்றன என்பதுதான் இங்கே கவனிக்கத் தக்கது.

12 மாதங்கள் முதல் 5 வயதுடைய குழந்தைகளே அதிகம் காயம் அடைகின்றன. அதுவும் பெரும்பாலான காயங்கள் வீட்டிற்குள்ளேயே அல்லது விளையாடும் இடங்களில் ஏற்படுகின்றன. இந்த வகை காயங்கள் தடுத்து நிறுத்தக்கூடியவை என்பது குறிப்பிடத்தக்கது.

குழந்தைப் பருவ மரணங்கள், ஊனங்கள் ஏற்பட பெரும்பாலும் காயங்களே காரணமாக இருந்திருக்கின்றன. கீழே விழுதல், தீக்காயங்கள், நீரில் மூழ்குதல் மற்றும் சாலை விபத்துக்கள் போன்றவை காயங்களை உண்டாக்குகின்றன.

காயங்கள் எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம். வீட்டிலோ, வெளியிலோ, விளையாடும்போதோ, பயணம் செய்யும்போதோ காயம் ஏற்பட வாய்ப்புண்டு. தனிமையில் இருக்கும்போது மட்டுமல்லாமல் பெற்றோருடன் இருக்கும்போதோ அல்லது குழுவாக விளையாடும்போதும் காயம் உண்டாகலாம். எனவே காயம் குறித்த எச்சரிக்கை அனைவருக்கும் தேவை.

நெருப்பு, சமைக்கும் அடுப்புகள், விளக்குகள், தீப்பெட்டிகள் மற்றும் மின்சார சாதனம், சூடான உணவுகள், கொதிக்கும் நீர் போன்றவை ஆபத்தானவை. காயங்களை உண்டாக்கக்கூடியவை. இவற்றில் விளையாடக்கூடாது என்று உங்கள் அம்மாவும் அப்பாவும் சொல்லியிருப்பார்கள். எனவே இவற்றில் விளையாடுவதை தவிர்க்க வேண்டும். கையாள நேர்ந்தால் கவனமாக செயல்பட வேண்டும்.

குழந்தைகளுக்கு விளையாட்டு என்றாலே குதூகலம்தான். அதுவும் உயர உயர ஏறி விளையாடுவது ரொம்ப பிடிக்கும். மாடிப் படிகள், ஏணி, கதவுகள், ஜன்னல்கள், கூரைகள் மற்றும் மரங்கள் ஆகியவற்றை பார்த்தாலே அதில் ஏறி விளையாட வேண்டும் என்ற ஆர்வம் உங்களுக்கு வந்துவிடுகிறதுதானே. அது இயற்கையான உணர்வுதான். ஆனால் அதில் உள்ள அபாயங்களை உங்கள் அறிவுக்கூர்மையால் உணர்ந்து கொண்டு விளையாடினால் காயங்கள் ஏற்படாது. ஏறும்போதும், இறங்கும்போதும் கவனமாக இருப்பதுடன், உறுதியாக பற்றிப்பிடித்து விளையாடுவது பாதுகாப்பை பலப்படுத்தும். அதிக உயரமானவற்றில் ஏறி விளையாடுவதை தவிர்க்க வேண்டும்.

கத்திகள், கத்தரிக்கோல்கள், கூர்மையான பொருட்கள் மற்றும் உடைந்த கண்ணாடித்துண்டுகளும் மோசமான காயங்களை உருவாக்கக்கூடியவையே. பெற்றோர் இவற்றை குழந்தைகளிடம் இருந்து தூரமாக வைக்கலாம். கூர் நுனி கொண்ட, வெட்டும் ஆபத்துடைய பொருட்களை கைகளில் எடுத்து விளையாடக்கூடாது.

தேவையில்லாமல் எதையும் வாயில் வைத்து கடித்து விளையாடக்கூடாது என்று அம்மா சொல்லியிருப்பார்கள். நாணயங்கள், பென்சில்கள், பிளாஸ்டிக் பந்துகள், கோலிகள், கிரையான்கள், பொம்மைகள் போன்ற பொருட்களை வாயில் வைத்து விளையாடக்கூடாது. அவை வாய்க்குள் சென்றால் வயிற்றுவலி உள்பட பல்வேறு தொந்தரவுகளை உண்டாக்கும். சில பொருட்கள் மூச்சுத்திணறலை ஏற்படுத்தி உயிருக்கு ஆபத்தை உண்டாக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள். எனவே சாப்பிடும் பொருட்களைத் தவிர மற்ற எதையும் வாயில் வைத்து விளையாடக்கூடாது. சோப்பு, எண்ணெய், மருந்து, சுத்தப்படுத்துவதற்காக வைத்துள்ள அமிலங்கள், தைலங்கள் போன்றவற்றையும் வாயில் வைக்கக்கூடாது.

வெயில் நேரத்தில் தண்ணீரில் விளையாடுவது மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால் தண்ணீரும் ஆபத்தானதுதான். நீச்சல் தெரியாமல் தண்ணீருக்குள் விளையாடக் கூடாது. நீந்தத் தெரிந்திருந்தாலும் ஆழமான பகுதிக்குச் செல்லக்கூடாது.

சாலையில் செல்லும்போதும் கவனம் தேவை. வாகனங்களும், கரடுமுரடான பாதைகளும் காயத்தை உண்டாக்கலாம். எனவே பெற்றோர் இல்லாமல் சாலையில் பயணிக்க வேண்டாம். அவசியம் ஏற்பட்டால் சாலையில் எப்படி பயணிக்க வேண்டும், எப்படி கடக்க வேண்டும் என்பதை பெற்றோரிடம் கேட்டு அறிந்து கொண்டு பயணிக்க வேண்டும்.

மின்சாரமும் மிக ஆபத்தானது. உடைந்த மின்சாதனங்களைத் தொடுதல், சுவிட்ச் போர்டுகளில் விளையாடுதல், குச்சிகள் அல்லது கத்தியை மின் இணைப்பில் சொருகி விளையாடுதல் போன்றவை கூடாது. இது மோசமான காயத்தையும், உயிர்ப்பலியையும் உண்டாக்கும் ஆபத்து உடையது.

செல்லப் பிராணிகளிடமும் அதிகமாக விளையாடக்கூடாது. நாய், பூனை உள்ளிட்ட அனைத்து வளர்ப்பு பிராணிகளும் கடித்தோ, பிராண்டியோ காயத்தை ஏற்படுத்தலாம். எனவே அவற்றிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பழக்கமில்லாத விலங்குகளிடமும் நெருங்கிச் செல்லக் கூடாது.

காயம் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்பதையும், முதலுதவி முறையையும் பெற்றோர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதற்கான உபகரணங்களையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். அதுதான் ஆபத்துகளை குறைக்க உதவும். இளம் சிறுவர்களை கவனமாக கண்காணிப்பதுடன், சுற்றுப்புறச் சூழலை பாதுகாப்பாக வைத்துக் கொண்டால், மோசமான காயங்கள் ஏற்படுவதை தடுக்கலாம்.

விபத்துகள் தவிர்த்த, விளையாட்டு சார்ந்த காயங்களை பெரும்பாலும் தவிர்த்துவிடலாம். ஆபத்தான பொருட்களை குழந்தைகளிடம் இருந்து தூரமாக வைப்பது பெற்றோரின் பொறுப்பு. பெரியவர்களின் சொல்கேட்டு, பொம்மைகள், விளையாட்டுப் பொருட்களுடன் காயமின்றி அமைதியாக விளையாடுவது குட்டீஸ் உங்களின் பொறுப்பு!



Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker