தாய்மை-குழந்தை பராமரிப்புபுதியவை
ஒற்றை குழந்தை வைத்திருக்கும் பெற்றோர்களுக்கான அட்வைஸ்
இந்தக் காலத்தில் நாம் நம் பிள்ளைகளை தெருவிலோ அல்லது அப்பார்ட்மென்ட் தரை தளத்திலோ விளையாட அனுமதிப்பதில்லை. அவர்கள் நாலு சுவர் எனும் வீட்டுக்குள்தான் அதிக நேரம் இருக்கிறார்கள்.
இரண்டு குழந்தைகள் இருக்கும் வீட்டில் ஒருவருக்கொருவர் அடித்துக்கொண்டும், இருப்பதைப் பிடுங்கிக் கொண்டு விளையாடுவார்கள். விளையாட ஆள் இல்லை என்றால், இரு குழந்தைகள் மட்டும் விளையாடுவார்கள். அதனால், ஒற்றைக் குழந்தை வைத்திருப்பவர்கள் மற்ற குழந்தைகளோடு அதிக நேரம் விளையாட, பேச, குதூகலிக்க விடுங்கள். அதே சமயம்… அதீத செல்லத்தைக் கொடுக்காதீர்கள்.
இரண்டு பேர்தான் சம்பாதிக்கிறோமே, பிள்ளை கேட்பதையெல்லாம் வாங்கிக்கொடுக்கலாம் என்கிற தவற்றை செய்யாதீர்கள். ‘நான் கேட்டதெல்லாம் கிடைக்கும்’ என்கிற எண்ணம் பிள்ளைகள் மனதில் வளராமல் பார்த்துக்கொள்ளுங்கள். இரண்டு பிள்ளைகள் இருந்தால்தான் விட்டுக் கொடுக்கிற மனப்பான்மையைக் குழந்தையிடம் வளர்க்க முடியும் என்பதில்லை.
அப்பாவுக்கும், அம்மாவுக்கும் இட்லியும், பூரியும் பிடிக்கும் என்பதை உங்கள் பிள்ளைகள் மனதில் பதிய வையுங்கள். உங்கள் குழந்தை அதிகம் தொடாத பொம்மைகளை, அவர்களிடம் கொடுத்த அப்பார்ட்மென்ட் செக்யூரிட்டி குழந்தைகளிடமோ அல்லது நடைமேடையில் குடும்பம் நடத்துபவர்களிடமோ தரச் சொல்லுங்கள். மெதுவாக அவர்கள் மனதில் விசேஷ தினங்களின்போது முதியோர் இல்லங்களுக்குச் சென்று வருவதைப் பழக்கமாக்குங்கள்.
அடுத்தவர்களுக்கு உதவ வேண்டும் என்கிற மனப்பான்மை, பெரியவர்களை மதிக்க வேண்டும், கஷ்டம் என்பது என்ன… என்பதை உணர வையுங்கள். வீட்டில் ரோஜாப் பூக்கள் வாங்கி ஒன்று உனக்கு, இன்னொன்று வீட்டில் வேலைப் பார்க்கிற அக்காவுக்கு என்று, அவர்கள் கையாலேயே அதை கொடுக்கச் சொல்லலாம்.
பண்டிகைகளுக்கு டிரெஸ் வாங்கும்போது உங்கள் அப்பார்ட்மென்ட் செக்யூரிட்டியின் குழந்தைக்கும் ஒரு ஃபிராக் வாங்கி, அதை உங்கள் மகள் கையாலேயே செக்யூரிட்டியிடம் கொடுக்கச் சொல்லலாம். சொந்தக்காரர்கள் வீட்டுக்குப் போகும்போது கட்டாயம் பிள்ளைகளையும் உடன் அழைத்துச் செல்லுங்கள். அந்த வீட்டில் இருக்கிற ஒற்றைக் குழந்தையுடன் உங்கள் பிள்ளை சேர்ந்து விளையாடுவதன் மூலம், ஒரு உடன்பிறவாத அக்காவோ, தங்கையோ கிடைக்கலாம்.