ஆரோக்கியம்புதியவை

உங்களுக்கு தெரியுமா உணவை கையால் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

இந்தியாவில் உணவை கையால் சாப்பிடுவது தான் பாரம்பரிய வழக்கம். இந்தியாவில் மட்டுமின்றி, ஆப்ரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் ஆசியா பகுதிகளிலும் கையால் சாப்பிடுவது தான் வழக்கம். இந்த பகுதிகளில் பலர் ஸ்பூன், போர்க் மற்றும் கத்தி பயன்படுத்தி உணவை அருந்தமாட்டார்கள். ஆனால் தற்போதைய காலத்தில் நாகரீகம் என்ற பெயரில், நமது பாரம்பரிய பழக்கங்கள் பல மறைந்து கொண்டிருக்கின்றன. ஆனால் நம் முன்னோர்கள் இப்படி கையால் உணவை அருந்தியதற்கு பின்னணியில் பல நன்மைகள் அடங்கியுள்ளன.

ஆம், நாம் உணவை கையால் உண்பதால் ஏராளமான நன்மைகள் நமக்கு கிடைக்கும். உண்ணுதல் என்பது உணர்வுபூர்வமான மற்றும் கவனமுள்ள செயல்முறையாகும். அதாவது உணவை உண்ணும் போது நாம் அனைத்து உணர்வுகளையும் பயன்படுத்தி சாப்பிடுகிறோம். அதாவது பார்வை, வாசனை, கேட்பது, சுவை மற்றும் தொடுதல் போன்ற அனைத்தையும் இன்னும் நிறைவேற்ற முடியும்.

ஒருவர் உணவை கையால் சாப்பிடும் போது, உணவு, உடல், மனம் மற்றும் ஆன்மா என அனைத்தையும் ஒன்றிணைக்கிறது. மேலும் இது சாப்பாட்டு இங்கிதத்தை மென்மையாக்குகிறது. இந்த காரணத்தினால் தான், பல மேற்கத்திய நாடுகளில் கைகளில் உணவை சாப்பிட ஊக்குவிக்கிறார்கள். சிலர் கைகளில் சாப்பிடுவது அசுத்தமானதாகவும், அறுவெறுக்கத்தக்கதாகவும் நினைக்கிறார்கள். ஆனால் கையால் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை தெரிந்தால், இனிமேல் அப்படி நினைக்கமாட்டார்கள்.

உணர்வு அனுபவம் உண்ணுதல் என்பது உணர்வு மற்றும் பேரார்வத்தைத் தூண்டும் ஒரு உணர்வுபூர்வமான அனுபவமாகும். ஆயுர்வேதத்தின் படி, கையில் உள்ள ஒவ்வொரு விரலிலும் ஐந்து கூறுகள் இருக்கிறதாம். அதில் பெருவிரல் – ஆகாயம், ஆள்காட்டி விரல் – காற்று, நடுவிரல் – நெருப்பு, மோதிர விரல் – தண்ணீர், சுண்டு விரல் – நிலம் ஆகும். கையால் உணவை சந்தோஷமாக சாப்பிடும் போது, இந்த ஐந்து கூறுகளும் தூண்டப்பட்டு, நீங்கள் சாப்பிட வேண்டிய உணவை உற்சாகத்துடன் சாப்பிட உதவுகிறது. ஒருவரது உடலில் இந்த ஐந்து கூறுகளும் சமநிலையில் இருந்தால், உடல் ஆரோக்கியமாக இருக்கும். இந்த ஐந்து கூறுகளும் ஒருவரது சுறுசுறுப்பை அதிகரிக்கும். அதாவது கையால் உணவை உட்கொள்ளும் போது, உணவின் சுவை, தோற்றம் மற்றும் மணம் போன்றவை மேம்பட்டு இருக்கும்.

நேச்சுரல் சென்சார் போன்று செயல்படும் உணவை ஸ்பூன் அல்லது போர்க்கால் சாப்பிடும் போது, அந்த உணவானது நேரடியாக வாயினுள் செல்லும், மனமானது உணவின் வெப்பநிலை அல்லது அமைப்பு போன்றவற்றை உணராமல் இருக்கும். இதனால் சில சமயங்களில் உணவின் சூடு தெரியாமல் சாப்பிட்டு, நாக்கை புண்ணாக்கிக் கொள்ள நேரிடும். ஆனால் கையால் உணவை சாப்பிடும் போது, விரல்களின் நுனியில் உள்ள நரம்பு முனைகள் உணவின் வெப்பநிலையை உணர்ந்து, நம்மால் சாப்பிட முடியுமா என்பதை உணர்ந்து, நாக்கில் ஏற்படவிருக்கும் புண்ணைத் தடுக்கும். விரல்களில் உள்ள நரம்பு முனைகள் நாம் என்ன சாப்பிடுகிறோம் என்னும் சிக்னலை மூளைக்கு அனுப்பும். இதற்கு ஏற்ப மூளையானது செரிமான அமிலம் மற்றும் நொதிகளை வெளியிடத் தூண்டிவிட்டு, உணவின் முழு சுவையையும் அனுபவிக்க உதவும்.

செரிமானம் மேம்படும் பொதுவாக நமது உள்ளங்கை மற்றும் கை விரல்களில் நல்ல மற்றும் கெட்ட பாக்டீரியாக்கள் இருக்கும். கைகளைக் கழுவும் போது, கைகளில் உள்ள கெட்ட பாக்டீரியாக்கள் நீக்கப்பட்டுவிடும். நல்ல பாக்டீரியாக்கள், கிருமிகளால் வயிற்றில் ஏற்படவிருக்கும் பல பாதிப்புகளைத் தடுக்கும். ஆனால் உணவை ஸ்பூன் மற்றும் போர்க்கில் சாப்பிடும் போது, இந்த பாக்டீரியாக்கள் குடலை அடையாமல் போகும். மறுபக்கம், கையில் உணவை உட்கொள்ளும் போது, விரல்களில் இருந்து ப்ளோராவானது வாயின் வழியே உடலின் பல பகுதிகளுக்கு பயணம் செய்யும். இதன் விளைவாக குடல் ஆரோக்கியம் மேம்படும் மற்றும் வயிற்றில் உள்ள தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுக்கும்.

மேலும் உணவை கையால் தொடும் போது, அந்த உணவை செரிப்பதற்கு தேவையான செரிமான அமிலம் மற்றும் நொதிகளை சுரக்க சிக்னலை அனுப்பும். அதுவும் நாம் சாப்பிடும் உணவு வகைகளைப் பொறுத்து, உடலின் மெட்டபாலிசம் செயல்பட்டு, செரிமானம் சிறப்பாக நடைபெறச் செய்யும்

டைப்-2 சர்க்கரை நோயின் அபாயம் குறையும் ஸ்பூன் மற்றும் போர்க்கில் சாப்பிடும் போது, உணவானது எளிதாகவும், வேகமாகவும் வயிற்றினுள் செல்லும். ஆனால் இப்படி வேகமாக சாப்பிட்டால், அது உடலில் இரத்த சர்க்கரை அளவில் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தி, டைப்-2 சர்க்கரை நோயின் அபாயத்தை அதிகரிக்கும். 2012 இல் வெளிவந்த அறிக்கையில், ஸ்பூனால் வேகமாக உணவை உட்கொண்டோருக்கு, கையால் சாப்பிடுபவர்களை விட 2.5 மடங்கு அதிகமாக டைப்-2 சர்க்கரை நோயின் அபாயம் இருப்பதாக 2012 இல் ஐரோப்பியன் எண்டோகிரைனாலஜி அறிக்கையில் வெளிவந்தது. ஆகவே வேகமாக சாப்பிட்டால் சர்க்கரை நோயின் அபாயம் அதிகரிக்கும். ஆனால் கையால் சாப்பிடும் போது, இதன் அபாயத்தைக் குறைக்கலாம்.

ஏனெனில் உணவை கையால் சாப்பிடும் போது, கொஞ்ச உணவை எடுத்து மெதுவாக மென்று விழுங்குவோ. இதனால் செரிமானம் சிறப்பாக நடைபெறுவதோடு, கொஞ்சம் சாப்பிட்டாலே வயிறு நிறைந்துவிடும்.

மனநிறைவுடன் உண்ணுதல் ஊக்குவிக்கிறது கத்தி, ஸ்பூன், போர்க் போன்றவற்றைக் கொண்டு சாப்பிடுவது ஒரு வகையான மெக்கானிக்கல் செயல்முறையாகும். இப்படி சாப்பிடும் போது அதிக கவனத்தை செலுத்த வேண்டியிருக்காது. அதே சமயம் எவ்வளவு சாப்பிடுகிறோம் என்றும் கவனிக்கமாட்டோம். அதே சமயம் ஸ்பூனால் சாப்பிடும் போது, பல்வேறு செயல்களான டிவியைப் பார்ப்பது, மொபைலை பார்ப்பது அல்லது ஏதேனும் புத்தகத்தைப் படிப்பது என்று செய்வோம். உணவின் மீது கவனத்தை செலுத்தமாட்டோம். இதன் விளைவாக அதிகமாக உணவை உட்கொள்ள நேரிட்டு, உடல் பருமன் அதிகரிக்கும். அதுவே கையில் சாப்பிடும் போது, எவ்வளவு உணவை சாப்பிடுகிறோம், எவ்வளவு ருசியாக உள்ளது என்பதை நன்கு கவனித்து, அனுபவித்து சாப்பிடக்கூடும். மேலும் கையால் சாப்பிடும் போது, பல வேலைகளில் ஈடுபட முடியாது. இதன் விளைவாக உடல் பருமனும் அதிகரிக்காது.

அதிக சுகாதாரம் கையால் சாப்பிடுவது என்பது உணவை சுகாதாரமற்ற வழியில் கையாள்வது போன்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் உண்மையில் நீங்கள் நினைப்பதற்கு எதிர்மறையானது. உணவை உட்கொள்ளும் முன் கையை நீரில் கழுவிய பின் சாப்பிடுவதால், கையில் கிருமிகள் இருக்க வாய்ப்பில்லை. மேலும் நாம் ஒரு நாளைக்கு பலமுறை கைகளை நீரில் கழுவுவோம். ஆனால் நீங்கள் பயன்படுத்தும் ஸ்பூன், போர்க் மற்றும் இதர பொருட்கள் அடிக்கடி கழுவப்படுகிறதா என்பது நமக்கு சரியாக தெரியாது மற்றும் அது மிகவும் சுத்தமானவையாக தான் இருக்கும் என்று உறுதியாக கூறவும் முடியாது. எனவே ஸ்பூன், போர்க் சுத்தமாக இருக்கும் என்று நம்பும் நீங்கள், உங்கள் கைகள் சுத்தமாக இருக்கும் என்று நம்பமாட்டீர்களா என்ன?

நினைவில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள்! #1 கையால் சாப்பிடும் முன், மறக்காமல் கைகளைக் கழுவ வேண்டும். அதேப் போல் உணவை உட்கொண்ட பின்பும், கைகளைக் கழுவ வேண்டும். கைகளைக் கழுவாமல் சாப்பிட்டால், அந்த உணவை சுகாதாரமற்ற/ஆரோக்கியமற்ற உணவிற்கு இணையாகிவிடும்.

#2 சமையலில் சேர்க்கும் உணவுப் பொருட்களை மிதமான அளவில் துண்டுகளாக்கிக் கொண்டால், உணவை எளிதில் கையால் எடுத்து சாப்பிட முடியும்.

#3 கையால் உணவை சாப்பிடும் போது, வளைந்து கொண்டு உணவை உட்கொள்ளாதீர்கள். நேராக அமர்ந்து சாப்பிடுங்கள் மற்றும் மேஜைக்கு மேலே தூக்கிக் கொண்டு இருக்காமல், இணையாக இருக்குமாறு வைத்து சாப்பிடுங்கள்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker