சுவாசக்குழாய் சம்பந்தமான நோய்களை குணமாக்கும் மத்ஸ்யாசனம்
பெயர் விளக்கம்: ‘மத்ஸ்ய’ என்றால் மீன் என்று பொருள். சற்று வளைந்த நிலையில் மீன் போன்று இந்த ஆசனம் தோற்றமளிப்பதால் இந்த ஆசனம் மத்ஸ்யாசனம் என்று அழைக்கப்படுகிறது.
செய்முறை: தரைவிரிப்பின் மேல் கால்களை நீட்டி அமரவும். கால்களை தொடையின் மேல் ஒன்றின் மேல் ஒன்றாக வைக்கவும். அப்படி செய்யும் போது இடது கால் மேல் வரும்படி இருக்கட்டும். இந்த நிலைக்கு பத்மாசனம் என்று பெயர். தொடைகளின் அடிப்பகுதியில் உள்ளங்கைகளை வைத்து ஒவ்வொரு முழங்கைகளாக தரையில் ஊன்றி தலையின் பின் பகுதியும், முதுகையும் தரைவிரிப்பின் மேல் வைத்து மல்லாந்து படுக்கவும்.
இந்த நிலையில் சாதாரண மூச்சுடன் சிறிது நேரம் இருக்கவும். மூச்சை வெளியே விட்டு தொடைகளின் அடிப்பகுதியை உள்ளங்கைகளால் பலமாக பிடித்து முழங்கைகளை தரையில் ஊன்றி உடல் எடையை கைகளில் தாங்கிக் கொண்டு முதுகை தரையிலிருந்து மேலே உயர்த்தவும். அதே சமயம் தலையை பின்னுக்கு வளைக்கவும்.
முதுகை நன்றாக வில் போல் வளைத்து தலையின் மையப் பகுதியை தரையில் பதிக்கவும். தலையை, சரியாக தரையில் பதித்த பிறகு கைகளை எடுத்து இரண்டு கால் விரல்களையும் இரண்டு கைவிரல்களால் பிடித்துக் கொள்ளவும். கண்களை மூடவும்.
இந்த ஆசன நிலையில் 30 வினாடி முதல் 1 நிமிடம் வரை மெதுவாகவும், ஆழமாகவும் மூச்சை இழுத்து விடவும், பிறகு மூச்சை வெளியே விட்டு உள்ளங்கைகளை தொடையின் அடியில் சேர்த்து வைத்து முதுகை கீழே இறக்கி தலையை நேராக வைத்துப் படுத்து கைகளால் உடல் எடையை தாங்கி உட்காரும் நிலைக்கு வரவும். பத்மாசனத்தைக் கலைத்து கால்களை நீட்டி வைக்கவும், பிறகு வலது கால் மேல் வரும்படி பத்மாசனம் செய்து மேற்கண்ட முறைப்படி மீண்டும் செய்யவும்.
இரண்டு கால்களையும் மாற்றிச் செய்யும் காலஅளவு சமமாக இருக்கட்டும். சர்வாங்காசனம் செய்த பிறகு இந்த ஆசனத்தை அவசியம் செய்ய வேண்டும். சர்வாங்காசனத்தில் நிலைத்திருந்த கால அளவில் மூன்றில் ஒரு பங்கு கால அளவு இந்த ஆசனத்தை செய்யவும். அதாவது சர்வாங்காசனம் 3 நிமிடம் செய்தால் மத்யாசனம் 1 நிமிடம் செய்யவும். அதையும் இரு கால்களையும் மாற்றி அரை அரை நிமிடமாக செய்யவும்.
கவனம் செலுத்த வேண்டிய இடம்: வயிறு, மார்பு, கழுத்து, முதுகு, அல்லது மூச்சின் மீதும், மணிபூர, அனாஹ அல்லது விசுத்திச் சக்கரத்தின் மீதும் கவனம் செலுத்தவும்.
பயிற்சி குறிப்பு: ஆரம்ப பயிற்சியில் உட்கார்ந்த நிலையில் பத்மாசனம் செய்து படுத்து மத்ஸ்யாசனம் செய்ய முடியாதவர்கள் மல்லாந்து படுத்த நிலையில் பத்மாசனம் செய்து மத்ஸ்யாசனம் செய்யலாம். பத்மாசனமே செய்ய முடியாதவர்கள் உட்கார்ந்து அருகில் வைத்தும் மத்ஸ்யாசனம் செய்யலாம். அல்லது கால்கள் இரண்டையும் நீட்டி வைத்தும் செய்யலாம்.
தடைக்குறிப்பு: இருதய நோய், வயிற்றுப்புண் குடற்பிதுக்கம் ஆனவர்கள் இந்த ஆசனத்தை செய்யக்கூடாது.