குழந்தைகளின் இடக்கை பழக்கம் ஒரு குறைபாடா?
உலகில் 85 சதவீதம் பேர் வலது கை பழக்கம் உடையவர்கள். மீதம் இருப்பவர்கள் இடக்கை பழக்கம் கொண்டவர்கள்.
நமது மூளை வலது, இடது என இரு பகுதிகளைக் கொண்டது. நமது உடலின் வலது பாகம், உதாரணமாக வலது கை, வலது கால் போன்றவைகளின் இயக்கம் மூளையின் இடது பகுதியிலிருந்து இயக்கப்படுகிறது. அதே போல நமது உடலின் இடது பாகம் மூளையின் வலது பகுதியிலிருந்து இயக்கப்படுகிறது.
ஆனால், முன்பு குறிப்பிட்டபடி சுமார் பதினைந்து சதவீதத்தினருக்கு இது மாறுபட்டிருக்கும்.
இப்படி மூளையில் வலம், இடம் மாறுபாட்டிற்கு முக்கியக் காரணம் நமது மரபணுக்களில் உள்ள மாற்றமே. பெற்றோரில் ஒருவருக்கு இடதுகை பழக்கம் இருந்தால் குழந்தைகளில் அந்த மரபணு ஒருவேளை கடத்தப்பட்டால், அவர்களும் இடது கை பழக்கமுடையவர்களாக வருவார்கள்.
இது எந்த வகையிலும் குறைபாடு ஆகாது. மிக இயல்பானது.
நமது மூளையின் இடது பகுதியில் தர்க்க ரீதியான முடிவுகள், கணிதம், அறிவியல் போன்றவைகள் இயங்கும் வகையில் அமைந்துள்ளன. வலது பகுதியில் கலை, படைப்பு, கற்பனை, இசை, உள்ளுணர்வு இவைகள் உருவாகின்றன.
பெரும்பான்மையான 85 சதவீதத்தினருக்கு மொழியாற்றல், பேச்சு இவை மூளையின் இடது பகுதியிலிருந்து கட்டுப்படுத்தப்படுகின்றது. அதுமட்டுமின்றி நமது வலது கையின் செயல்பாடுகளை மூளையின் இடது பகுதி இயக்குகிறது. நாம் அறிந்த மொழியையும், சொல் வளங்களும், எழுத்துகளும் இப்பகுதியில் தான் பதிந்து உள்ளது.
நமது வலது கையின் செயல்பாடுகளுக்கான பகுதியும் இங்கு உள்ளதால், வலது கையில் எழுதுவது இயல்பாகவும் இலகுவாகவும் உண்டாகிறது. இடதுகை பழக்கம் உடையவர்களுக்கு இது மூளையில் அப்படியே நேர் எதிராக வலது பக்கமிருக்கும். ஆகவே அவர்கள் இடது கையை பயன்படுத்துவதுதான் சரியாக இருக்கும்.
தங்கள் குழந்தை இடது கை பயன்படுத்துபவர் என்று அறிந்தவுடன் அதிர்ச்சியடையும் சில பெற்றோர் வலது கையை பயன்படுத்தும்படி கட்டாயப்படுத்துவார்கள். ஏதாவது பொருளை எடுக்க வேண்டும் என்றால், குழந்தையின் இடது கைதான் முதலில் வரும். அதைப் பார்த்தவுடன் பதறி, வலது கையை பயன்படுத்த சொல்லிக் கொடுப்பார்கள்.
முதன் முதலாக எழுத கற்றுக் கொள்ளும்போது, குழந்தையை வலது கையால் எழுதுகோலை பயன்படுத்த வைப்பார்கள். இயற்கையாக இடது கையால் இலகுவாக செய்ய வேண்டிய ஒன்றை கடினத்துடன், குழப்பத்துடனும் பழக வேண்டி இருக்கும். சிரமப்பட்டாலும், கொஞ்ச நாளில் குழந்தை வலது கைக்கு பழகிவிடும். பெற்றோர் மகிழ்ச்சி அடைவர்.
நாம் இங்கு புரிந்துக் கொள்ளவேண்டியது, இதற்கு அந்த குழந்தை கொடுக்க வேண்டிய விலை அதிகம்.
அதாவது, இடது கையாளர்களை வலது கைக்கு மாற்றும்போது இன்னொரு சிக்கலும் உருவாகிறது. அவர்களின் இடது பகுதி மூளைக்கு அதிக அளவில் பாரம் ஏற்படுகிறது. மேலும், அவர்களது வலது பக்கத்து மூளையின் வேலை பளு கணிசமாக குறைகிறது. இதனால் மூளையின் வலது, இடது பகுதிகளின் செயல்பாடுகளில் சமநிலை பாதிக்கப்படுகிறது.
வலது பகுதி குறைவாக வேலைசெய்து பழகிக் கொள்வதால், அப்பகுதியிலுள்ள படைப்பு, கற்பனை போன்றவற்றுக்கு ஊற்றாக விளங்க வேண்டியவைகளும் மட்டுப்பட வாய்ப்பு உள்ளது.
பல ஆய்வுகள் கூறுவதுயாதெனில், இடது கை பழக்கம் உள்ளவர்கள், அதிக அளவில் வலது பக்க மூளையை பயன்படுத்துவதால், அவர்களிடம் படைப்பாற்றல் அதிகமாக காணப்படும் என்று கூறுகின்றனர். உலக புகழ்ப்பெற்ற அறிஞர்கள், அறிவியலாளர்கள், விளையாட்டு வீரர்கள், தலைவர்கள் என பல்லாயிரக் கணக்கானோர் இடதுகை பழக்கம் கொண்டவர்களுக்கு உதாரணமாக உள்ளனர்.
அமெரிக்க ஜனாதிபதிகள் ஜார்ஜ் புஷ், பில் கிளிண்டன், பராக் ஒபாமா தத்துவ அறிஞர் அரிஸ்டாட்டில், நமது நாட்டில் உலக புகழ் பெற்ற கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், அன்னை தெரசா, அமிதாப் பச்சன் போன்றவர்கள் இடது கை பழக்கமுடையவர்களே.
அதே நேரத்தில், இவ்வுலகில் மனிதனின் கண்டுபிடிப்புகள், உருவாக்கப்படும் பொருட்கள் எல்லாம் பெரும்பான்மை மக்களான வலது கை பழக்கமுள்ளவர்களுக்கு மட்டுமே உள்ளன. இடக்கையாளர்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதே இல்லை.
அன்றாடம் பயன்படுத்தும் பாட்டில், பெட்டி, கதவு கைப்பிடி, கத்தரிக்கோல் என வலது கைப்பழக்கம் உடையவர்களுக்கு வசதியாக உருவாக்கப்படுகிறது. இவற்றை இடது கைப்பழக்கம் உடையவர்கள் சிரமப்பட்டு பயன்படுத்த வேண்டியுள்ளது. அல்லது பயன்படுத்த முடியாமலே போய்விடுகிறது.
அதுமட்டுமின்றி நமது சமூகத்தில் உலவி வரும் எண்ணற்ற மூட நம்பிக்கைகளில் ஒன்று, ஒரு பொருளை இடது கையால் அளிப்பது தவறானது மற்றும் மரியாதை குறைவானது என்று கருதுவது. இடது கையாளர்களை இது எந்தெந்த வகையில் பாதிக்கும் என்று உணர வேண்டும்.
பல வீடுகளில் குழந்தை வளரும்போது இடது கையை பயன்படுத்தும்போது, தப்பு என்று சொல்லி வலது கைக்கு பழக்குவர். சில மேதாவிகள் இதனை மூளை குறைபாடு என்று கருதி அதை சரி செய்ய முயற்சிப்பது மோசமான ஒன்று.
ஏற்கனவே சொன்னது போல், இடது கைப் பழக்கம் என்பது குறைபாடு அல்ல. மனிதர்கள் எப்படி தோற்றம், அமைப்பு, நிறத்தில் வெவ்வேறு வகையினர் உள்ளனரோ அதுபோன்று இவர்களும் இன்னொரு வகையினர். அவர்களை அப்படியே ஏற்றுக் கொள்வது தான் சிறந்த பண்பாக இருக்க முடியும்.
மாறாக எங்களைப் போன்று நீயும் வலதுகைக்கு மாறவேண்டும் என்று கட்டாயப்படுத்துவது சமூக நீதிக்கு எதிரானது. மேலும் அது பெரும்பான்மையினரின் ஆதிக்க மனப்பான்மைக்கு வழிவகுப்பது போல் ஆகிவிடும்.
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதம் 13-ந்தேதி உலக இடக்கை பழக்கமுடையவர்கள் நாளாக நினைவு கூறப்படுகிறது. அதை வாய்ப்பாக கருதி, மக்களிடையே விழிப்புணர்வு உண்டாக்கவும், அவர்களும் நம்மை போன்றவர்கள் என்கிற மனப்பான்மையை வளர்க்கவும், இவ்வுலகத்தில் உருவாக்கப்படும் பொருட்களை அவர்களும் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கவும் வழிக்கோலுவோம்.