ஆரோக்கியம்புதியவைமருத்துவம்

பிரசவத்தை சிக்கலாக்கும் இரத்தசோகை – காத்துக்கொள்ளும் வழிமுறைகள்

பிரசவத்தை சிக்கலாக்கும் இரத்தசோகை - காத்துக்கொள்ளும் வழிமுறைகள்

ரத்தசோகை ‘அனீமியா‘ என்று அழைக்கப்படுகிறது. இந்த ரத்தசோகை குறைபாடுகளுக்கு ஆண்களை விட பெண்களே அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். அதற்கு முக்கிய காரணம் மாதவிலக்கு போன்ற காரணங்களால் அவர்களுக்கு ஏற்படும் ரத்தப்போக்கு.

பொதுவாக ரத்தசோகை பிரசவத்தை சிக்கலாக்கி உயிருக்கே கூட ஆபத்தை விளைவித்து விடுகிறது. இத்தகைய ரத்தசோகை ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? அதிலிருந்து தப்பித்துக்கொள்ளும் வழிமுறைகள் என்ன? என்பது குறித்து காண்போம். இதுகுறித்து திண்டுக்கல் அரசு மருத்துவமனை மகப்பேறு சிறப்பு மருத்துவர் திவ்யா கூறியதாவது:-

ரத்தசோகை

ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைவதே ரத்தசோகை எனப்படும். ரத்தத்தின் சிவப்பணுக்குள் இருக்கும் புரதம் தான் ஹீமோகுளோபின் ஆகும். இந்த ஹீமோகுளோபினில் இரும்புச்சத்து இருக்கும். இத்தகைய சிவப்பணுக்கள் தான் ரத்தத்தில் பிராணவாயுவை உடல் முழுவதும் எடுத்து செல்கிறது. பொதுவாக சிவப்பணுக்கள் 110 முதல் 120 நாட்கள் வரை உயிர் வாழும். அதன்பிறகு அது சிதைந்து விடும். ரத்தசோகை என்பது பெண்களை பொறுத்தவரை ஒரு பொதுவான பிரச்சினையாக உள்ளது.

பெண் குழந்தைகளுக்கு, சிறு வயது முதல் உடல் வளர்ச்சிக்கு தேவையான சத்தான உணவுகள் இன்றி அவர்கள் வளர்கின்றனர் என்பதே அதற்கு காரணம் ஆகும். இதனால் அவர்களின் உடல் வளர்ச்சி மாறுபாட்டின்போது தேவையான அளவுக்கு சக்தி இல்லாமல் போகிறது. அதனால் உடல் ஆரோக்கியம் குறைந்து விடுகிறது. அதுமட்டுமின்றி வயதுக்கு வந்தவுடன் மேலும் பல பாதிப்புகளுக்கு அவர்கள் ஆளாகின்றனர்.


அறிகுறிகள்

இத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் ரத்தசோகையால், சோர்வு உண்டாகும். மாதவிலக்கு சமயத்தில் ஏற்படும் உதிரப்போக்கால் எலும்புகள் பலமிழக்கும். அப்போது பித்தம் அதிகரிப்பதால் ரத்தம் சீர்கெடும். இதனால் தலைவலி, தலைசுற்றல், மயக்கம், வாந்தி வரும். இதுதவிர கர்ப்பப்பை வீக்கம், ஒழுங்கற்ற ரத்தப்போக்கு, வெள்ளைப்படுதல் உண்டாகும்.

சிறிது உணவு சாப்பிட்டாலும் வயிறு நிறைந்ததை போன்ற உணர்வு, செரிமானமின்மை, உடல் வெளுத்து போகுதல், கை, கால்களில் நகம் உடைந்து போகுதல், வீக்கம், முடி கொட்டுதல், வாயின் ஓரத்தில் புண் உண்டாகுதல் போன்ற அறிகுறிகள் இருக்கும். இதுதவிர முகவீக்கம், கண், நாக்கு வெளுத்து காணப்படுதல், மூச்சு விடுவதில் சிரமம், இதயம் வேகமாக அல்லது தாறுமாறாக துடிப்பது, குளிர்ச்சியான சூழலை தாங்க முடியாத நிலை, நாக்கு உலர்ந்து போவதால் சுவையுணர்வு பாதிக்கப்படுவது, அதிகம் வியர்ப்பது போன்ற அறிகுறிகளும் இருக்கும்.

காரணங்கள்

பெண்கள் கர்ப்பம் ஆகுவதற்கு முன்பு அதிக ரத்தப்போக்கு ஏற்படுதல், பிரசவத்தின் போது இரும்புச்சத்து குறைவாக உள்ள பெண்களுக்கு ரத்தசோகை அதிகமாக ஏற்படும். இளவயதில் திருமணம் ஆவதால் இந்த குறைபாடு வர வாய்ப்புள்ளது. இதுதவிர வலுவற்ற அல்லது பாதிக்கப்பட்ட எலும்பு மஜ்ஜையினாலும் ரத்தசோகை உண்டாகும்.

வயிற்றில் உண்டாகும் புண், கட்டி, வீக்கம், புற்றுநோய் இவற்றால் உள்ளே ஏற்படும் ரத்தகசிவாலும் ரத்தசோகை ஏற்படலாம். இதுதவிர ஒரு சில நோய்கள் காரணமாக சீக்கிரமாக சிவப்பணுக்கள் சிதைவதாலும், அப்போது எலும்பு மஜ்ஜைகள் அதிக ரத்த செல்களை உருவாக்கும் நிலைக்கு தள்ளப்படுவதாலும் உண்டாகலாம். மேலும் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு, நோய் தொற்றுகளை போக்கும் சில மருந்துகள், நச்சு பொருட்களாலும் ரத்தசோகை உண்டாகும். இதுதவிர இன்னும் சில காரணங்கள் உள்ளன.
பிரசவத்தின் போது…

கர்ப்ப காலத்தில் பெண்களின் ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கை 10.5 கிராம் என்ற அளவில் இருப்பது நல்லது. அதற்காக 5 அல்லது 6-வது மாதத்தில் இரும்புச்சத்து மாத்திரை சாப்பிடுவதும், அதிக ரத்தசோகையாக இருந்தால் ரத்தம் ஏற்றிக்கொள்வதும் நல்லது. அதேபோல் 7 அல்லது 8-வது மாதத்தில் ரத்த ஊசி போட்டுக்கொள்வதும், 8 அல்லது 9-வது மாதத்தில் ரத்தம் ஏற்றிக்கொள்வது பிரசவத்தை சிக்கலின்றி எளிதாக்கும்.

பொதுவாக பிரசவத்தின்போது ரத்தப்போக்கு 500 மில்லி லிட்டர் வரை இருக்கலாம். அதுவே அறுவை சிகிச்சை என்றால் 1 லிட்டர் வரையிலும் ரத்தப்போக்கு இருக்கலாம். ரத்தசோகையால் பாதிக்கப்பட்ட பெண்ணாக இருந்தால் அதிக ரத்தப்போக்கு ஏற்படும். அதனை அவர்களால் தாங்கி கொள்ள இயலாது. மேலும் 5 அல்லது 6 குழந்தை பெற்றவர்கள் கண்டிப்பாக ரத்தசோகையால் பாதிக்கப்பட்டவர்களாக இருப்பார்கள்.

இரும்புச்சத்து மாத்திரை

குடலில் இருக்கும் நாக்கு பூச்சிகள் உணவில் உள்ள சத்துக்களை எடுத்துக்கொள்ளும். அதனால் சத்து குறைபாடு உண்டாகும். இதனை தவிர்ப்பதற்காக பூச்சி மாத்திரை சாப்பிட வேண்டும். பெண்கள் வயதுக்கு வந்தவுடன், அதாவது 11 முதல் 12 வயதில் உள்ளவர்களுக்கும், ஒரு சிலருக்கு 20 வயது வரை கூட ரத்தப்போக்கு அதிகமாக இருக்க வாய்ப்புண்டு. அந்த சமயத்தில் அவர்கள் இரும்புச்சத்து மாத்திரைகளை டாக்டரின் ஆலோசனைப்படி சாப்பிட வேண்டும்.

பொதுவாக ஆண்களுக்கு ரத்தத்தில் 15 கிராம் என்ற அளவிலும், பெண்களுக்கு 12 கிராம் என்ற அளவிலும் சிவப்பணுக்களின் எண்ணிக்கை இருப்பது நல்லது. இது ஆரோக்கியமான வாழ்வை தரும். சாதாரணமாக ரத்த பரிசோதனையிலேயே ரத்தசோகையை கண்டுபிடித்து விடலாம்.


உணவு முறைகள்

இரும்புச்சத்து அதிகம் உள்ள உணவுகளை உண்பது எப்போதும் நல்லது. கீரைகள், பீன்ஸ், பருப்பு வகைகள், உலர் திராட்சை, அத்திப்பழம், பலாப்பழம், சப்போட்டா, ஆப்பிள், நெல்லிக்காய் ஆகியவற்றை தினமும் சாப்பிடுவது நல்லது. இதனால் ரத்தம் விருத்தியடைந்து ரத்தசோகை நீங்கும். முளை கட்டிய பயறு, முந்திரி, பாதாம், பிஸ்தா பருப்புகள், உளுந்தங்களி சாப்பிடுவதும் நன்மை தரும்.

ரத்தசோகை ஏற்பட்டால் வைட்டமின்-12 குறைபாடும் உண்டாகும். அது நரம்புகளின் செயல்பாட்டை பாதிக்கும். பொதுவாக ரத்தசோகையில், சாதாரணமானவை, தீவிரமானவை உள்பட பல வகைகள் உண்டு. ரத்தசோகை என்பது ஒரு நோயல்ல. அது ஒரு குறைபாடு என்பதை தெரிந்து கொள்ளுங்கள். ஆரம்பநிலையிலேயே ரத்தசோகையை கண்டறிந்து விட்டால் எளிதில் அதிலிருந்து தப்பித்து கொள்ளலாம்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker