சருமத்தை மிருதுவாக்கும் வெண்ணெய் மசாஜ்
கோடை காலத்தில் சருமம் வறட்சிக்குள்ளாவது தவிர்க்க முடியாதது. சில நேரங்களில் வறண்ட சருமத்தால் எரிச்சல் ஏற்படும். சரும அரிப்பு, ஒவ்வாமை பிரச்சினைகளும் தலைதூக்கும். சருமம் மிருதுவாகவும், பொலிவு குறையாமலும் காட்சியளிக்க வெண்ணெயை பயன்படுத்தி வரலாம்.
சிறிதளவு வெண்ணெயை முகத்தில் தடவி மசாஜ் செய்தால் முகம் வெண்ணெய் போலவே மிருதுவாக மாறும். உங்களுக்கு பிரகாசமான முகம் கிடைப்பதும் உறுதி.
2 ஸ்பூன் வெள்ளரிக்காய் சாறுடன் ஒரு டேபிள் ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து குழைத்து முகத்தில் பூசிக்கொள்ள வேண்டும். 10 நிமிடங்களுக்கு பிறகு குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். சருமம் பொலிவுடன் காட்சியளிக்கும்.
1 ஸ்பூன் ரோஸ் வாட்டருடன் ஒரு ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து பசைபோல் நன்றாக குழைத்து முகத்தில் பூச வேண்டும். அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். வாரம் இருமுறை இவ்வாறு செய்துவந்தால் சரும ஆரோக்கியம் மேம்படும்.