தாய்மை-குழந்தை பராமரிப்புபுதியவை

குழந்தை வளர்ப்பில் பாகுபாடு எதற்கு?

குழந்தை வளர்ப்பில் பாகுபாடு எதற்கு?

தொழில்நுட்ப முன்னேற்றம் அசுர வளர்ச்சி அடைந்து வரும் இந்த காலத்தில் அதற்கு இணையாக அதிகரித்து வரும் சமூகக் குற்றங்களை பார்க்கும்போது நம் நெஞ்சம் பதைபதைக்கிறது.

எதிர்காலம் எப்படி இருக்குமோ? என்ற கேள்வி நம்மை அச்சுறுத்துகிறது. குறிப்பாக, பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளும் கொலைகளும் பல பெற்றோர்களை நிம்மதியிழக்க செய்திருக்கிறது.


எங்கே இருக்கிறது இந்த தவறுகளின் தொடக்கப்புள்ளி? என்று யோசித்துப் பார்த்தால் விடை ஒன்று தான். அது குழந்தை வளர்ப்பு முறை. பிறக்கும் போதே யாரும் குற்றவாளிகளாக பிறப்பதில்லை. சிறு வயது அனுபவங்களே ஒரு மனிதனை செதுக்குகின்றன. நற்பண்புகளுடன் வளர்க்கப்படும் பிள்ளைகள் சமூகத்தில் உயர்நிலையை அடைவதை நாம் கண்கூடாக பார்த்து வருகிறோம்.

குழந்தை வளர்ப்பு என்றவுடன் உணவு, உடை, இருப்பிடம் போன்ற அவர்களுக்கான அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வது மட்டுமில்லை. நமது பாசத்தை காட்டுவதற்காக வாங்கிக் குவிக்கப்படும் பொம்மைகளும் பரிசுப்பொருட்களும் இல்லை. அறமும், ஒழுக்கமும் கற்பிக்கும் உயரிய பொறுப்பு அது.

நமது சமுதாயத்தில் பெண் பிள்ளைகளை வளர்ப்பதிலும் ஆண் பிள்ளைகளை வளர்ப்பதிலும் காலம் காலமாக ஒரு வேறுபாடு இருந்து வருகிறது. குறிப்பாக பருவ வயதில், அவர்களுக்கு உடல் ரீதியாக மாற்றம் ஏற்படும் போது பெண் பிள்ளைகளை நாம் பேணுவதை போல ஆண் பிள்ளைகளை பேணத் தவறுகிறோம்.

ஊட்டச்சத்து மிக்க உணவு வகைகளை வயது வந்த பெண் பிள்ளைகளுக்கு தருகிறோம். சமுதாயத்தில் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும், எப்படி உடையணிய வேண்டும் என்பது போன்ற அறிவுரைகளை அவர்களுக்கு அவ்வப்போது சொல்லிக்கொண்டே இருக்கிறோம். ஆனால் ஆண் பிள்ளைகள் அதே வயதில் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்பட்டு தடுமாறுகிற மனநிலையில் இருக்கும்போது நாம் அவர்களை கண்டுகொள்வதே இல்லை.

தனிமையில் தள்ளப்படும் இந்த பிள்ளைகள் முறைப்பதும், கோபப்படுவதும் என்று தந்தைக்கு எதிராக திரும்புவதும் இந்த காலக்கட்டத்தில் தான். நண்பர்களுடன் சேர்ந்து சிகரெட் மற்றும் மது பழக்கங்களை இன்றைய சிறுவர்கள் வெகுவிரைவாகவே கற்றுக் கொள்கின்றனர்.


பிள்ளைகளிடம் தென்படும் இந்த திடீர் மாற்றத்தை அலட்சியம் செய்தல் கூடாது. ‘அடித்து வளர்க்காத பிள்ளையும் ஒடித்து வளர்க்காத முருங்கையும் எதற்கும் உதவாது’ என்ற பழமொழியெல்லாம் இந்தக் கால பிள்ளைகளிடத்தில் எடுபடாது. அவர்கள் செய்யும் தவறுகளுக்காக அடிக்க ஆரம்பித்தால் இன்னமும் மூர்க்கமாகவும் முரட்டுத்தனமாகவும் மாறுவார்கள்.

இந்த பிரச்சினைக்கு ஒரே தீர்வு பிள்ளைகளிடத்தில் நட்போடு பழக வேண்டும். முகம் சற்று வாடியிருந்தால் கூட ‘என்னப்பா பிரச்சினை என்கிட்ட சொல்லு’ என்று ஆரம்பம் முதலே பெற்றோர் பிள்ளைகளிடம் அக்கறை காட்ட வேண்டும். சிறுவர்களாய் இருக்கும் போதே நீதிக் கதைகளை சொல்லி வளர்க்க வேண்டும்.

ஆன்மீகம், யோகா போன்ற பொறுமை மற்றும் சகிப்புத்தன்மை வளர்க்கும் விஷயங்களில் அவர்களை ஈடுபடச் செய்ய வேண்டும். பருவ வயது பிள்ளைகள் அடிக்கடி போனை எடுத்துக்கொண்டு தனியறைக்கு செல்லும்போது, அதன் தீமைகளை புரியும்படி சொல்லித் தடுக்க வேண்டும். அவர்களுக்கு விருப்பமான விளையாட்டு அல்லது தனித்திறனை வளர்க்கும் பயிற்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களின் சிதையும் கவனத்தை நல்வழியில் மடைமாற்றம் செய்ய வேண்டும்.

பிள்ளைகளுக்காக அதிகமாக பணம் செலவழிப்பதை விட அவர்களுடன் அதிகமான நேரம் செலவிட வேண்டும். கேட்பதை எல்லாம் உடனே வாங்கிக் கொடுப்பதும் சரியான வளர்ப்பு முறை அல்ல. உண்மையிலேயே அந்த பொருள் அவசியம் தானா? நமது பொருளாதார நிலைக்கு அது அவசியமானது தானா? என்பதை பிள்ளைகளுக்குப் புரிய வைக்கவேண்டியது நமது கடமை.

அடம்பிடிக்கும் போதும் பெரியவர்களை மதிக்காமல் நடக்கும் போதும் கண்டிக்காமல் செல்லம் கொடுப்பதும் பல பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய தவறாகும். அதிகமான கண்டிப்பு எவ்வளவு ஆபத்தானதோ அதே அளவு அதீதமான செல்லமும் பிள்ளைகளை கெடுத்து விடும்.

பிரச்சினை என்று வரும்போது, ‘நீ சரியாக பிள்ளையை வளர்க்கவில்லை’ என்று தாய்மார்களை ஆண்கள் சாடுவது நமது சமுதாயத்தில் மாறவேண்டிய விஷயங்களில் ஒன்று. வளர்ப்பு என்பது இருவருக்கும் சமமான பொறுப்பு என்பதை ஆண்களும் உணர வேண்டும்.

அமெரிக்காவில் பள்ளி சிறுவர்கள் அடிக்கடி துப்பாக்கி சூடுகளில் ஈடுபடுவதற்கு காரணம் அங்கே குடும்ப அமைப்பு சிதைந்து வருவது தான். இங்கேயும் இது போன்ற தவறுகள் நடக்கும் முன்னர் நாம் விழித்துக்கொள்ள வேண்டும்.


பிள்ளைகளுடன் உட்கார்ந்து அன்றைய நிகழ்வுகளைப் பற்றி பேசுவது, எதிர்கால திட்டங்கள் பற்றி கலந்துரையாடுவது என தோழமையோடு வளர்க்கப்படும் பிள்ளைகள் தவறு செய்வதற்கு வாய்ப்பே இல்லை. மனதில் உள்ளவற்றை வெளியில் சொல்ல முடியாமல் அழுத்தம் ஏற்பட்டு தான் அவர்கள் தவறு செய்யும் மனநிலைக்கு ஆளாகின்றனர்.

சமூக வலைத்தளங்களில் பொழுதை போக்கிக்கொண்டு, குழந்தைக்கு தொலைக்காட்சியை போட்டுவிட்டோ, டேப்லெட்டை கொடுத்துவிட்டோ மணிக்கணக்காக கார்ட்டூன் பார்க்கச்செய்யும் பழக்கம் இன்றைய இளம் தாய்மார்களிடம் அதிகரித்து வருகிறது.

குறிப்பாக குழந்தை அழும் சமயங்களில் அவர்களின் கையில் செல்போனை திணித்துவிட்டு, தங்களை நிம்மதி படுத்திக்கொள்கிறார்கள். இதனால் ஏற்படும் விபரீதத்தை அறிந்தும் அறியாதோராய் இருக்கிறார்கள். பாசத்தோடு தாலாட்டு பாடி பிள்ளைகளை தூங்க வைக்கும் தாய்மார்கள் அரிதாகிவிட்டார்கள்.

நவீன தாய்மார்களின் செயல்பாடுகளால் குழந்தைகளின் ஆரோக்கியமும் குறைந்து அறிவும் மட்டுப்படும். ஆரம்ப காலத்தில் கற்பிக்க வேண்டிய அடிப்படை ஒழுக்கங்களை அப்போது விட்டுவிட்டு காலம்கடந்து அவர்கள் தவறு செய்யும் போது கண்டித்துப் பயனில்லை.

பள்ளியில் முதல் மார்க் தான் வாங்க வேண்டும். கல்லூரியில் நான் சொல்கிற படிப்பு தான் படிக்கவேண்டும் என்பது போன்ற கட்டுப்பாடுகள் பிள்ளைகளை மனஅழுத்தத்தில் கொண்டு போய்விடும். அவர்களுடைய ஆர்வத்தையும் விருப்பத்தையும் மனதில் கொண்டே இவ்விஷயத்தில் செயல்பட வேண்டும்.


காதல் அல்லது தேர்வில் தோல்வி என்று தற்கொலையில் மாணவர்கள் ஈடுபடுவதும் அதிகரித்து வருகிறது. தோல்விகளை எப்படி எதிர்கொள்வது என்று கற்றுக்கொடுக்கப்பட்ட பிள்ளைகள் அவற்றை சுலபமாக கடந்துவிடுகிறார்கள்.பிள்ளை வளர்ப்பு என்பது சிறு வயதோடு முடிந்து விடுவதன்று. கல்லூரி முடித்து திருமணமாகும் வரை அவர்களின் மேல் பெற்றோர் கண்வைத்துக் கொண்டே இருக்க வேண்டும். ‘எது வந்தாலும் சமாளித்துக் கொள்ளலாம், நாங்கள் உனக்கு எப்போதும் பக்கபலமாக இருப்போம்’ என்ற நம்பிக்கையூட்டும் வார்த்தைகளை பிள்ளைகளிடம் சொல்லி வந்தால் எவ்வளவு பெரிய தடையையும் அவர்கள் அழகாக சமாளித்து வெற்றி பெறுவார்கள்.

பெண்குழந்தைகளிடம் கட்டுப்பாடுகளை மட்டுமே விதிக்காமல், அவர்களை தைரியத்தோடும் தன்னம்பிக்கையோடும் வளர்க்க வேண்டும். ஆண் பிள்ளைகளுக்கு பெண்களை தோழியாகவும் சகோதரியாகவும் பாவிக்கும் எண்ணத்தை சிறுவயது முதலே சொல்லி கொடுக்க வேண்டும்.

எதிர்கால சமுதாயத்துக்கு நம் வீட்டிலிருந்து ஒரு குற்றவாளியை தந்துவிடக் கூடாது என்பதை ஒவ்வொரு பெற்றோரும் நினைவில் இருத்திக்கொள்ள வேண்டும்.

ஆசானாய், தோழனாய் அன்பு காட்டும் பெற்றோர் அமைந்துவிட்டால் அருமையான பிள்ளைகளும் வளமையான எதிர்காலமும் உருவாகும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker