வலிப்பு நோயாளிகள் கவனத்துக்கு
மூளையில் உள்ள நரம்பு அணுக்களில் ஏற்படும் மின் அலை மாற்றங்களால், மூளையின் அனைத்து பாகங்களும் ஒரு முகமாக ஒரே நேரத்தில் இயங்குவதால் வலிப்பு நோய் வருகிறது, என்பது மருத்துவ நிபுணர்கள் கூறும் தகவல்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் வலிப்பு நோய் வர வாய்ப்பு உள்ளது. ஒரு சில வலிப்பு நோய்கள் பரம்பரையாகவும் வருகிறது என்கிறார்கள்.
வலிப்பு நோய் வந்தால் உடனடியாக சாவியை கையில் கொடுப்பது போல சினிமாவில் காட்டுகின்றனர். அதனைப் பார்த்து பொதுமக்களும் வலிப்பு நோய் வந்தவுடன், அவர்களின் கையில் சாவியை கொடுக்கின்றனர். ஆனால், வலிப்பு வந்த உடன், பாதிக்கப்பட்டவரை உடனடியாக இடது பக்கம் திரும்பி படுக்க வைக்க வேண்டும் என்றும், அவர் பற்களை கடித்துக்கொள்ளாமல் பார்த்துக்கொள்ள வேண்டும், அவரை மருத்துவமனைக்கு விரைவாக கொண்டு செல்ல வேண்டும் என்றும் மருத்துவர்கள் ஆலோசனை வழங்குகின்றனர்.
டாக்டர்கள் சொல்லும் மருந்து, மாத்திரைகளை வலிப்பு நோயாளிகள் தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும்.
வலிப்பு வரவில்லை என்று மருந்து, மாத்திரைகளை பாதியில் நிறுத்தி விடக்கூடாது. டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்து எப்போது நிறுத்தச் சொல்கிறார்களோ, அப்போதுதான் மருந்து, மாத்திரைகள் சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்.
அரசு மருத்துவமனைக்கு தினமும் வலிப்பு நோயாளிகள் சிகிச்சைக்கு வருகின்றனர். அவர்களில் பலர் புதிய நோயாளிகள். ஆரம்பத்தில் வலிப்பு நோயாளிகளுக்கு வாரத்திற்கு ஒரு முறை மாத்திரைகள் வழங்கப்பட்டன. நோயாளிகளின் நலனை கருத்தில் கொண்டு தற்போது மாதத்திற்கு ஒரு முறை என்று மொத்தமாக மாத்திரை வழங்கப்படுவதாக அரசு டாக்டர்கள் கூறுகிறார்கள்.
நோயின் தன்மையை பொறுத்து அதற்கேற்ப மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் வலிப்பு நோயாளிகள் வாகனம் ஓட்டுவது, நீச்சல் அடிப்பது மற்றும் உயரமான இடங்களில் நிற்பதை தவிர்க்க வேண்டும். முக்கியமாக வலிப்பு நோயாளிகள் கவலைப்படக்கூடாது. பதற்றம் அடையக்கூடாது என்றும் டாக்டர்கள் அறிவுறுத்துகிறார்கள்.