ஆரோக்கியம்புதியவைமருத்துவம்

பெண்களின் உடல் உறுப்புகளை பாதிக்கும் செருப்புகள்

பெண்களின் உடல் உறுப்புகளை பாதிக்கும் செருப்புகள்

நவீன பேஷன் உலகத்தோடு தங்களை இணைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இந்தக்கால பெண்களுக்கு அதிகமாகவே இருக்கிறது. உடுத்தும் உடை முதல்- அணியும் அணிகலன் வரை அனைத்தும் மற்றவர்களை கவரவேண்டும் என்றும் எதிர்பார்க்கிறார்கள். அந்த வகையில் பெண்களிடம் அதிக வரவேற்பை பெற்றிருப்பவை, குதிகால் செருப்புகள். அவை பெண்களின் நடைக்கும், உடைக்கும் பொருத்தமான தேர்வாக அமைகிறது. அவைகளை அணிவதை அலங்காரத்துடன் கூடிய அந்தஸ்து சார்ந்த விஷயமாக பெண்கள் நினைக்கிறார்கள். அதனால் உடலுக்கு ஏற்படும் பின் விளைவுகளைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை.






‘நான்கு பேர் மத்தியில் அழகாக, கம்பீரமாக தோற்றமளிக்க வேண்டும். தன்னை அனைவரும் நவீன பெண்ணாக ஏற்றுக்கொள்ள வேண்டும்’ என்பது தற்கால பெண்களின் சிந்தனையாக இருக்கிறது. ஹைஹீல்ஸ் அணிவதால் மூட்டுவலி, இடுப்பு வலி, குதிகால் வலி போன்றவை ஏற்படும். தொடர்ந்து அணிவதால் உடல் உறுப்புகளின் ஒவ்வொரு இணைப்புக்கும் பாதிப்பு நேருகிறது என்பது சமீபத்திய ஆய்வுத் தகவலாக உள்ளது.இந்தியாவில் 68 சதவீதம் பெண்கள் ஹைஹீல்ஸ் செருப்புகளை விரும்பி அணிகிறார்கள். இது கால்களுக்குப் பாதுகாப்பானதல்ல. அதனை அணிந்து சரியாக நடக்க பழகாவிட்டால் எந்த நேரத்திலும் சறுக்கி விழ நேரிடும். அப்படி உடலின் சமநிலை தவறி கீழே விழும்போது கணுக்கால் எலும்பு முறிவு ஏற்படும் அபாயமும் இருக்கிறது. இது போன்ற சிக்கலான இடத்தில் ஏற்படும் எலும்பு முறிவுக்கு சிகிச்சை பெறுவதும் கடினமானது.

எலும்பு இணைப்புகளில் வீக்கம் ஏற்பட்டு வலி, வேதனையை உண்டாக்கும். நரம்புகள் சுளுக்கி, வலி வீக்கம் தோன்றும். இடுப்பின் அருகே நரம்புகள் ஒன்றோடொன்று சுற்றிக்கொண்டு வலியை ஏற்படுத்தும். சில நேரங்களில் மூச்சுவிடக்கூட சிரமமாக இருக்கும். அதிலும் 12 முதல் 18 வயதுள்ள பெண்களுக்கு பாதிப்பு அதிகமாக இருக்கும் என்கிறார்கள் டாக்டர்கள்.






மூட்டுகள்தான் நமது உடலைத் தாங்குகின்றன. அது சமநிலையை இழக்கும் போது இடம் மாறி பிறழ்ந்து போகும். அத்தகைய சிக்கல் நேர்ந்தால் மூட்டுமாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள நேரிடும். ஹைஹீல்ஸ் அணியும் பெண்களில் 90 சதவீதம் பேர் முதுகுவலி, இடுப்புவலி, மூட்டு வலி போன்ற பிரச்சினைகளில் இருந்து தப்பிக்க முடியாது. ஏனெனில் உயரமான காலணி அணிவதால் உடல் எடை முன்னுக்கு தள்ளப்படுகிறது. இதனால் உடல் சமநிலை மாறுகிறது. உடலுக்கு தேவையற்ற அழுத்தமும் ஏற்படுகிறது.






ஹைஹீல்ஸ் செருப்புகளின் வடிவமைப்பு முறையால் நடையில் மாற்றம் ஏற்பட்டு, குதிகால்கள் இயற்கைக்கு மாறாக முன்னுக்கு தள்ளப்படுகிறது. அதனால் உடலை சமநிலைப்படுத்திக்கொள்வதற்கு எலும்புகள் மிகுந்த சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. பூமியில் சமநிலையில் நடந்து பழகிய கால்கள் ஹைஹீல்ஸ் ரூபத்தில் திடீரென்று சரக்கஸ் செய்வது போல் நடைபயில்வது சிரமமானது. காலணியின் உயரத்திற் கேற்ப உடலுக்கு தொந்தரவுகள் ஏற்படும். பெண்களுக்கு கர்ப்பப்பை பாதிப்புகளும் ஏற்படும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker