காய்கறிகள் மற்றும் பழங்கள் நீண்ட நாட்கள் ஃபிரஷ்ஷா இருக்கணுமா? இதோ சில டிப்ஸ்…
பச்சைக் காய்கறிகளை தகுந்த பாதுகாப்பு முறைகளைப் பின்பற்றி பத்திரமாக வைத்திருக்காவிட்டால், அவை விரைவில் அழுகிவிடும். பெரும்பாலும் பழங்கள் மற்றும் காய்கறிகளை சேமித்து வைத்திருக்கும் இடம் சரியாக இல்லையென்றால் அவை விரைவில் கெட்டுவிடும்.
ஆகவே பழங்கள் மற்றும் காய்கறிகளை சரியான முறையில் பத்திரப்படுத்தி வைக்க சில எளிய குறிப்புகளை இங்கு பார்க்கலாம். அதைப் படித்து பின்பற்றி பழங்கள் மற்றும் காய்கறிகளை நீண்ட நாட்கள் ஃபிரஷ்ஷாக வைத்துக் கொள்ளுங்கள்.
வெங்காயம்
வெங்காயத்தை குளிர்ச்சியான மற்றும் இருட்டான பகுதியில் பத்திரப்படுத்தி வைத்தால் அவை நீண்ட நாள் கெடாமல் இருக்கும். செய்தித் தாள்களால் அவற்றை சுற்றி வைத்தோ அல்லது சிறிய துளைகள் கொண்ட தாள் பைகளிலோ பத்திரப்படுத்தி வைத்திருக்கலாம். ஆனால் உருளைக் கிழங்கு மற்றும் வெங்காயம் ஆகியவற்றை கலந்து ஒரே இடத்தில் வைக்கக்கூடாது. ஏனெனில் உருளைக் கிழங்கிலிருந்து வெளிவரும் வாயுக்கள் மிக எளிதாக வெங்காயத்தை கெட்டுப்போக வைத்துவிடும்.
பெர்ரி பழங்கள்
பெர்ரி பழங்களை எப்போதுமே மூன்று மடங்கு தண்ணீரும் ஒரு மடங்கு வினிகரும் கலந்த நீரால் கழுவி வைக்க வேண்டும். அவை ஸ்ட்ராபெர்ரி அல்லது ப்ளூபெர்ரி அல்லது ராஸ்பெர்ரி பழங்களாக இருக்கலாம். ஆனால் அவற்றை முறையாக கழுவி வைத்தால் அந்த பழங்களில் இருக்கும் நச்சுப் பாக்டீரியாக்கள் அழிந்துவிடும். அதனால் நீண்ட நாட்கள் அந்த பழங்கள் கெடாமல் இருக்கும்.
ப்ராக்கோலி
ப்ராக்கோலியை முறையாக பத்திரப்படுத்தி வைத்தால் அவை ஒரு மாதம் வரை கெடாமல் இருக்கும். ப்ராக்கோலியை அலுமினியத் தகடால் நன்றாக சுற்றி குளிர்சாதனப் பெட்டியில் வைக்க வேண்டும். அவ்வாறு செய்தால் அது நான்கு வாரங்கள் வரை கெடாமல் அதே நேரத்தில் புதியதாகவும் இருக்கும்.
வாழைப்பழம்
பொதுவாக வாழைப்பழங்கள் மிக விரைவாக கருப்பாக மாறிவிடும். அவ்வாறு அவை கருப்பாக மாறாமல் இருக்க நெகிழித் (plastic) தாளைக் கொண்டு வாழைப்பழங்களின் காம்பு பகுதியை சுற்றி மூடிவைக்க வேண்டும். வாழைப்பழங்கள் பொதுவாக எத்திலீன் என்ற வாயுவை வெளியிடும். அந்த வாயு வாழைப்பழைத்தை விரைவில் பழுக்க வைத்துவிடும். இந்த எத்திலீன் வாயு வாழைப்பழக் காம்பிலிருந்தே சுரக்கிறது. ஆகவே வாழைப்பழக் காம்பை நெகிழித் தாளால் சுற்றி வைக்கும் போது, எத்திலீன் வாயு வெளியில் வராது. அதனால் வாழைப்பழங்கள் விரைவாக பழுக்காமல், அழுகாமல் இருக்கும்.
எலுமிச்சை பழம்
எலுமிச்சை பழங்களை நேரடியாக அலமாரியிலோ அல்லது குளிர்சாதனப் பெட்டியிலோ வைத்து பத்திரப்படுத்தினால், அவை விரைவில் கெட்டுவிடும். மாறாக ஒரு ஜிப் வைத்த பையில் அவற்றை போட்டு பின் அவற்றை மூடிய பின் குளிர்சாதனப் பெட்டியில் பத்திரப்படுத்தி வைக்க வேண்டும். அப்போது அவை நீண்ட நாள் கெடாமல் இருக்கும். மேலும் அவற்றிலிருந்து சாறு பிழிவதற்கு முன்பாக அவற்றை சிறிது நேரம் வெந்நீரில் இட்டு வைத்திருந்தால் நல்லது.
இஞ்சி
இஞ்சியை பத்திரப்படுத்தி வைக்க மிகவும் எளிய வழி என்னவென்றால், அதை துணி அல்லது தாள் பையால் சுற்றி குளிர்சாதனப் பெட்டியில் வைக்க வேண்டும். அதனால் காற்று மற்றும் ஈரப்பதம் ஆகியவை இஞ்சியை எளிதில் தாக்காது. மேலும் இஞ்சியை உரித்து அதை சிறு துண்டுகளாக வெட்டி அவற்றில் காற்று புகாத அளவிற்கு பதப்படுத்தி குளிர்சாதனப் பெட்டியில் வைக்க வேண்டும்.