வாத நோயை குணமாக்கும் உத்தான் தனுராசனம்
பெயர் விளக்கம் : உத்தான் என்றால் மேல் நோக்கிய அல்லது இழுக்கப்பட்ட என்று பொருள் தனுர் என்றால் வில் என்று பொருள் மேல் நோக்கி நிறுத்தப்பட்ட வில் போல இந்த ஆசனம் இருப்பதால் இந்த ஆசனத்திற்கு உத்தான் தனுராசனம் என்று பெயர்.
செய்முறை : முதலில் தரைவிரிப்பின் மேல் நேராக நிமிர்ந்து நிற்கவும். பிறகு கால்களை 2 அடி அளவு அகற்றி வைக்கவும். தொடைகளின் பின்புறமாக உள்ளங்கைகளை வைத்து மூச்சை இழுக்கவும்.
மூச்சை வெளியே விட்டபடி கொஞ்சம் கொஞ்சமாக கைகளை கீழே இறக்கிக் கொண்டே போய் இரண்டு குதிகால்களின் பகுதியை கை விரல்களால் தொடவும்.
இந்த ஆசன நிலையில் முடிந்த அளவு இயல்பான மூச்சுடன் 20 முதல் 30 வினாடிகள் நிலைத்திருக்கவும். பிறகு மூச்சை உள்ளுக்கு இழுத்து உடலை நேராக்கி நேராக நிமிர்ந்து நிற்கவும். இந்த ஆசனத்தை 2-3 முறை பயிற்சி செய்யலாம்.
கவனம் செலுத்த வேண்டிய இடம் : முதுகை தளர்வாக வைத்துக் கொள்வது மற்றும் உடலை சமநிலைப் படுத்துவதின் மீதும் மணிபூர சக்கரத்தின் மீதும் கவனம் செலுத்தவும்.
தடைகுறிப்பு : வயிற்றில் புண் உள்ளவர்களும், உயர் ரத்த அழுத்த நோய் உள்ளவர்களும், முதுகெலும்பும் அதிக பாதிப்பு உள்ளவர்களும் இந்த ஆசனப் பயிற்சியை செய்யக் கூடாது.
பயன்கள் : முதுகு, கழுத்து, மார்பு, இடுப்பு வயிறு, தொடைகள், முழங்கால்கள், பாதம் முதலிய உறுப்புகள் பலமடையும். கழுத்து வலி, முதுகு வலி, மார்பு வலி, இடுப்பு வலி, முழங்கால் வலி நீங்கும். கூண் முதுகு நிமிரும். தொடைகளும், இடுப்பும் அழகான வடிவம் பெறும்.
மூளைக்கு அதிக ரத்தம் செல்வதால் நினைவாற்றல் மிகும். பிட்யூட்டரி, தைராய்டு மற்றும் தைமஸ் சுரப்பிகள் நன்றாக இயங்கும். மார்பு நன்றாக விரிவதால் நுரையீரல்கள் பலம் பெறும். நீரிழிவு மற்றும் சுவாச காச நோய்களுக்கு நன்மை அளிக்கும். உடலில் உள்ள நாடி நரம்புகள் அனைத்தும் தூண்டப்பட்டு புத்துயிர் பெறும். சோம்பல் நீங்கி சுறுசுறுப்பு உண்டாகும். இளமை மேலிடும். முதுகின் கீழ் பாகத்தில் உண்டாகும் வாத நோய் நீங்குவதற்கு இந்த ஆசனம் பெருமளவில் உதவுகிறது.