காபியை அடிக்கடி குடிப்பவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள்
பலருக்கு ஒரு குறை இருக்கின்றது. அது என்னவெனில் அவர்களுக்கு காபி குடிக்காமல் இருக்க முடிவதில்லை என்ற குறைதான். காபி குடிக்கவில்லை என்றால் தலைவலி மண்டையை உடைத்து விடுகின்றது என்பார்கள். காபியை அடிக்கடி அன்றாடம் குடிப்பவர்களுக்கு இருதய படபடப்பு, தூக்கமின்மை இவையெல்லாம் ஏற்படும். கர்ப்பிணி பெண்கள் முடிந்தால் காபியினை தவிர்த்து விடுங்கள் என்றே அறிவுறுத்தப்படுகின்றது.
காபி, டீ, கோகோ இவைகளில் காபின் என்ற பொருள் உள்ளது. இது சக்தியினை தூண்டி விடும் பொருள். காபியினை நிதான அளவில் குடிப்பவர்களுக்கு நடுக்குவாதம் எனப்படும் parkinsons நோய் பாதிப்பு ஏற்படும் அபாயம் குறைவு என்றே ஆய்வுகள் கூறுகின்றன.
அதே போல் அளவான காபி அருந்துபவர்களுக்கு மறதி நோய் ஏற்படும் வாய்ப்பு மிகவும் குறைகின்றது என ஆய்வுகள் கூறுகின்றன. சில ஆய்வுகள் காபின் மூளை வீக்கத்தினைக் கூட தவிர்க்கின்றது என்று கூறியுள்ளன. வீக்கமே பல நோய்களுக்கு காரணம் எனப்படும் நிலையில் காபீனில் உள்ள அமினோ அமிலங்கள் வீக்கங்களை குறைக்க உதவுவதாகவே சமீபத்திய ஆய்வு கூட கூறுகின்றது.
நிதான அளவில் காபி குடிப்பவர்களுக்கு மனஉளைச்சல் குறைகின்றது. சர்க்கரை நோய் பாதிப்பு அபாயம் காபி எடுத்துக் கொள்ளும் ஆண்களுக்கு குறைகின்றது. ஆனால் சர்க்கரை நோய் பாதிப்பு அபாயம் காபி எடுத்துக் கொள்ளும் பெண்களுக்குக் கூடுகின்றது.
நிதான அளவு காபி இருதய பாதிப்பினால் ஏற்படும் இருதய அபாயத்தினைக் குறைக்கின்றது. சில குறிப்பிட்ட வகை புற்று நோய்களையும் 27 சதவீதம் வரை குறைக்கின்றது எனவும் ஆய்வுகள் கூறுகின்றன.
அப்படியென்றால் காபி நல்லதா? என்றால் நல்லது என்பதற்கு ஒரு அளவு கோல் இருக்கின்றது. இந்த, ஆய்வுகள் வெளி நாடுகளில் நடப்பவை. ‘சிக்கரி’ கலப்பு இல்லாதவை. காபி டிகாஷனும் அடர்த்தியாக இராது மெல்லியதாக இருக்கும். அவர்கள் குடிக்கும் காபியில் பால் கூட இராது. நம்ம ஊர் பழக்கம் அப்படி அல்ல.
அடர்த்தியான டிகாஷன், தண்ணி கலக்காத அடர்த்தியான பால். காபி பொடி சிக்கரி கலந்தது. பல இடங்களில் காபி பொடியில் கலப்படங்கள் வேறு உள்ளன.
டிகிரி காபி என்ற பெயரில் காபியினை கூழ் போல் ஒரு பெரிய டம்ளரில் குடிக்கின்றோம். அதுவும் ஒருமுறை அல்ல. அடிக்கடி குடிக்கின்றோம். இரவில் கூட காபி அருந்துபவர்கள் அநேகர் உண்டு. காலையிலும் வெறும் வயிற்றில் முதல் வேலையாக திராவகம் போல் இதனை ஊற்றுகின்றோம். அன்றாடம் சில முறை அல்லது பலமுறை ஊற்றுகின்றோம். அன்றாடம் சில முறை அல்லது பலமுறை இவ்வாறு செய்வதால் பின்பு தீமைகள் விளைகின்றன.
காபி குடித்துத்தான் வாழ வேண்டும் என்ற அவசியம் மனிதனுக்குக் கிடையாது. அப்படி குடிக்கும் பழக்கம் இருந்தால் தரமான பொடியினை பயன்படுத்துங்கள். பகல் 12 மணிக்கு மேல் குடிக்க வேண்டும். காலை உணவுக்குப் பிறகோ அல்லது 11 மணி அளவில் 2 மாரி பிஸ்கட்டுடனோ அருந்துங்கள். டிகிரி காபி உங்கள் வயிற்றை புண்ணாக்கி விடும் என்பதனை உணருங்கள்.