உறவுகள்புதியவை

பெண்கள் அதிகம் விரும்புவது நட்பு என்னும் உறவை

பெண்கள் அதிகம் விரும்புவது நட்பு என்னும் உறவை

ஒவ்வொரு நண்பர்களும் புதிய உலகத்தின் வாயிற் கதவுகள். நட்பு என்பது ஒரு கொண்டாட்டம். இன்பத்தில் மட்டுமல்ல துளையிடும் வலிகளைப் பகிர்ந்து கொள்வதற்கும், நட்பு அவசியமாகிறது. வாழ்க்கை ஓட்டத்தைப் பூவனமாக்குவதும் நட்பு.

இத்தகு நட்பு இறுக்கமாக இல்லாமல் ஒருவர் தளர்ந்து கொடுப்பதாலேயே கிடைக்கிறது. ஒருவரை வாசித்து நட்பு பெறுவது கடினம். நாம் காட்டும் ஈடுபாட்டால் மட்டுமே நட்பு மலர்கிறது.



நட்பில் பல பரிமாணங்கள் உண்டு இருவருக்கிடையே ஏற்படும் நட்பு, இருபாலருக்கு இடையே ஏற்படும் நட்பு, இரு குழுக்களிடையே ஏற்படும் நட்பு அல்லது பல குழுக்களிடையே ஏற்படும் நட்பு, இரண்டு நாடுகளுக்கு இடையே ஏற்படும் நட்பு, பிற உயிர்களிடத்து ஏற்படும் நட்பென நட்பின் தன்மை மிக உன்னதமானதாகும். நட்பு வயது, மொழி, இனம் அறியாது.

ஒருவருடைய சிந்தனைகளையும் குணங்களையும் பட்டை தீட்ட அவரை நன்கு உணர்ந்த ஒரு நண்பர் தேவைப்படுகின்றார். மகிழ்வை, துக்கத்தைப் பகிர மற்ற உறவுகளைவிட மனித மனம் நாடுவது நட்பெனும் உறவைதான். இலக்கியங்கள் வழியும், வரலாறு வழியும் நட்பின் உன்னதப் பதிவுகளை நாம் அடையாளம் காண முடிகின்றது.



வள்ளுவப் பெருந்தகை நட்பு, நட்பாராய்தல், தீ நட்பு, கூடாநட்பு என்ற நிலையில் நட்பினை நன்கு விளக்கி உள்ளார். ஒத்த உணர்ச்சிதான் நட்பு ஏற்படுவதற்கு வேண்டிய உரிமையைக் கொடுக்கும். நட்புக்கு இலக்கணமாக, சான்றாக வாழ்ந்தவர்கள் பலர் உண்டு.

மிகுந்த தமிழ் ஞானமும், புலமையும் கொண்ட அவ்வைக்கு, தமிழ் பற்றாலும், அவரின் புலமையின் பால் ஈர்க்கப்பட்ட நட்பினாலும் அரிய வகை நெல்லிக் கனியைக் அதியமான் கொடுத்தான். அவன் ஒரு அரசன். அதனை அவனே உண்டிருக்கலாம். அதை யாரும் தடுத்திட போவதில்லை. இருந்தும் தான் இல்லை என்றால், இந்நாட்டுக்கு மற்றொரு அரசன் கிடைப்பான். அவ்வை வாழ்ந்தால் தமிழ்வாழும். தமிழால் பின்வரும் சந்ததியினர் வாழ்வர் என்ற உயரிய நோக்கிலும், அவர்மீது கொண்ட நட்பின் தகைமையாலும் நெல்லிக்கனியை கொடுத்தான்.

அதியமானின் செயலும், அச்செயலைக் கண்ட அவ்வை ‘சிவபெருமான் போல் நீ நீடுழி காலம் வாழ்க’ என வாழ்த்திய தன்மையும் நினைக்கும் போதெல்லாம் இனிக்கும்.

இன்றைய காலச்சூழலில் ஆண், பெண் நட்பு போற்றத்தக்கதா? அது ஆரோக்கியமானதா? என்ற கேள்வி பலரிடம் உள்ளது. நம்பிக்கையின் அடிப்படையில் சுயநலமற்று துளிர்விட்டு தழைக்கும் போது ஆண், பெண் நட்பு ஆரோக்கியமானதே.

சுதந்திர போராட்ட வரலாற்றில் நீங்கா இடம் பெற்ற வீரமங்கை வேலுநாச்சியார், தனது கணவன் முத்துவடுகநாதர் ஆங்கிலப் படைத்தளபதிகள் ஸ்மித், பாஞ்சோர் ஆகியோரால் கொல்லப்பட்ட நிலையில், ஆங்கில அரசுக்கு எதிராக குறுநில மன்னர்களை ஒருங்கிணைத்து மைசூர் மன்னன் ஐதர் அலியுடன் நட்புறவு கொண்டு ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு சிவகங்கை சீமையை வெற்றி கொண்ட செய்தியை எதற்குள் அடக்குவது? இச்செயலை போற்றாமல் இருக்க முடியாது.



அரசியலில் கொள்கை ரீதியாக முரண் கொண்டவர்கள்கூட நட்பு ரீதியாக அன்புள்ளம் கொண்டு வாழ்ந்ததை அறியமுடிகிறது. இப்படியான நட்புகளை காணும் போது நட்பின் உண்மைத் தன்மையையும் உறுதிப்பாட்டையும் தெரிந்துகொள்ள முடிகிறது.

கிராமம், நகரம், நாடு தாண்டி உலகளாவிய நட்புறவை ஆரோக்கியத்துடன் பெற்றுத்தருவதில் விளையாட்டு முக்கியப் பங்கு வகிக்கிறது. ஒலிம்பிக் போன்ற விளையாட்டுகள் மூலம் நாடுகளுக்கு இடையே பலமான நட்புணர்வு கிடைக்கிறது என்பது உண்மை. தமிழன் அன்று தெற்காசிய நாடுகளோடு கொண்டு இருந்த வாணிப சிறப்பை யாவரும் அறிவோம். நட்புறவுக்கும் வாணிபம் முக்கியப் பங்கு வகிக்கின்றது.

இவற்றைப் போன்றே ஊர் திருவிழாக்கள் மூலமாகவும், இல்லங்களில் நடக்கும் இன்ப, துன்ப நிகழ்வுகளின் மூலமாகவும் நட்புறவு மிக அழகாக கிடைப்பதுடன் விடுபட்ட உறவுகளை புதுப்பித்துக் கொள்ளும் இடமாகவும் இவ்விடங்கள் திகழ்கின்றன.



மனிதர்களுக்கு இடையேயான நட்புறவைத் தாண்டிபிற உயிர்களையும் தன்னுயிர் போல் கருதி பறவைகள், விலங்குகள், செடி, கொடிகளிடம் மனிதன் ஏற்படுத்திக் கொள்ளும் நட்பினால் மனிதன் ஒருபடி நிலை உயர்ந்து மேன்மை அடைகிறான். இந்த நட்புணர்வால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுகின்றது. மற்ற உயிரினங்கள் மனிதர்களிடம் நம்பிக்கையையும், பாதுகாப்பையும் உறுதிப்படுத்திக் கொள்ளும் போது மனிதர்களிடம் நட்பாகின்றன.

மாவீரன் அலெக்சாண்டரை இந்திய துணை கண்டம் வரை போர்களுடனே சுமந்து வந்த பூசிப்பலா என்ற குதிரை அவருடைய பழக்கத்தாலும், செயலாலும் மிக சிறந்த நண்பனாக விளங்கியது. அந்த குதிரை 30 வயதில் இறக்கும் போது அலெக்சாண்டர் ஒரு நகரத்திற்கு பூசிப்பலா என்று பெயரிட்டு மகிழ்ந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

காலம் கடந்தும் நண்பனின் நினைவினை ஊட்டும் கடிதங்கள் பெட்டியில் கிடந்த காலம் மாறி, அலைபேசி உலகில் வாழ்ந்தாலும் சில அடிப்படை நிகழ்வுகளும், செய்திகளும் மாறுவதில்லை. அலைபேசியின் வழியும் போற்றத் தகுந்த வலுவான நட்பினை அடையாளம் கண்டு நட்புறவை ஏற்படுத்திக் கொள்வது அதனை பயன்படுத்தும் ஒவ்வொருவரின் கையில் உள்ளது.



தங்களது பிள்ளைகளை சீர்திருத்திட முடியாத சூழலில் பெற்றோர்கள் அவர்களின் நண்பர்களை அணுகி பிள்ளையை சீர்திருத்த முனையும் காட்சியை இன்றளவும் காண முடிகின்றது. நட்பு அத்தகைய வல்லமை பெற்றது. அதே நிலையில் மன ஒற்றுமை இல்லாதவர்களுடைய நட்பு தீராத துன்பத்தை தரும்.

எந்தவித எதிர்பார்ப்பும், சுயநலமும் இல்லாத கனிந்த நட்பு மிக சிறந்த நட்பாகும். இத்தகைய நட்பினை அடையாளம் கண்டு கரம் பிடித்து வாழ்வின் வெளிச்சத்தைப் பரிசாகப் பெறுவோம்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker