சர்க்கரை நோய் இருப்பதற்கான அறிகுறிகள் தெரியுமா?
பெரும்பாலான மக்களை பரவலாக அவதிக்குள்ளாக்கும் நோயாக அறியப்படும் சர்க்கரை நோய், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அசாதாரணமான நிலைக்கு உயரச் செய்யும். வாழ்நாள் முழுவதும் தொடரக்கூடிய இந்நோய் இதர பல உடற்கேடுகளையும் உண்டாக்கக் கூடியதாகும்.
சர்க்கரை நோயை நிவர்த்தி செய்யக்கூடிய ஒரே வழி, சீக்கிரமே இதனை கண்டுபிடித்து, தக்க தடுப்பு முறைகளை மேற்கொள்வது மட்டுமே. அவ்வாறு கண்டுபிடிக்க வேண்டுமெனில், உடல் நிலையில் ஏற்படும் மாற்றங்களை கூர்ந்து கவனித்தல் மிகவும் அவசியம்.
ஏனெனில் இத்தகைய மாற்றங்களே சர்க்கரை நோய்க்கான அறிகுறிகள் ஆகும். இவ்வாறு உடலில் சர்க்கரை நோய்க்கான அறிகுறிகள் ஏதேனும் தென்படுகிறதா என்று கூர்ந்து கவனித்து வருவதன் மூலம் சர்க்கரை நோய் இருப்பதை சீக்கிரமே அறிந்து கொள்ளலாம்.
அவ்வாறு அறிந்து கொண்ட பின், தகுந்த மருத்துவ சிகிச்சை மேற்கொள்வதன் மூலம் இந்நோய் உண்டாக்கக்கூடிய விபரீத விளைவுகளை தவிர்க்கலாம். இப்போது சர்க்கரை நோயின் பல்வேறு அறிகுறிகளைப் பற்றி தெரிந்து கொள்வோமா!!!
* சிறுநீர் கழிக்க வேண்டும் என்பது போன்ற உணர்வு அடிக்கடி உங்களுக்கு ஏற்படுமாயின், உங்களுக்கு சர்க்கரை நோய் இருக்கக்கூடும். சர்க்கரை அளவுகளில் ஏற்படக்கூடிய உயர்வு, இரத்த ஓட்டத்தில் காணப்படும் திரவங்களின் அளவை உயர்த்தக்கூடியதான ஓஸ்மொலாலிட்டியை அதிகரிக்கும். இது சிறுநீரகத்திற்கு அதிக அழுத்தம் கொடுத்து, அதிக அளவிலான சிறுநீரை உருவாக்கும் படி செய்யும். இதனாலேயே சர்க்கரை நோயாளிக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற எண்ணம் தலை தூக்குகிறது.
* அதிக அளவிலான குளுக்கோஸ், சர்க்கரை நோயாளியின் இரத்தம் மற்றும் திசுக்களில் இருந்து திரவத்தை வெளியேற்றுவதினால், அது அவரின் கண் பார்வையை மங்கச் செய்யும். மேலும் இது கண்களின் கூர்ந்து நோக்கும் திறனை பாதிக்கும். சர்க்கரை வியாதிக்கு சரியான மருத்துவ கவனிப்பு இல்லாமல் போகும் பட்சத்தில், அது கண் பார்வை குறைவை உண்டாக்கும். ஏன் சில சமயங்களில் கண் பார்வையை கூட பறித்து விடும்.
* இது டைப்-1 சர்க்கரை நோயின் மிகப் பொதுவான அறிகுறியாகும். உயிரணுக்களுக்கு தேவையான குளுக்கோஸ் கிடைக்காததனால், உடல் தனக்கு தேவையான சக்தியை கொழுப்பு நிறைந்த திசுக்களை உடைத்து எடுத்துக் கொள்ள தலைப்படும். இதனால் தான் எடை குறைவு ஏற்படுகிறது.
* சர்க்கரை நோயாளியின் உடல், சர்க்கரையை உபயோகித்து தனக்குத் தேவைப்படும் சக்தியைப் பெற்றுக் கொள்ள இயலாது. இதனால், அந்நோயாளி உடற்சோர்வு, அசதி போன்ற தொல்லைகளுக்கு ஆளாக நேரிடும். உயிரணுக்களால், இரத்த ஓட்டத்தில் இருக்கக்கூடிய குளுக்கோஸை, இன்சுலினின் உதவியின்றி உறிஞ்ச இயலாது. அதனால் அவற்றின் ஆற்றல் குறைந்து காணப்படும்.
* இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதனால், நரம்பு மண்டலம் குறிப்பிடத்தக்க அளவிலான பாதிப்புக்கு ஆளாகும். சர்க்கரை நோய் நீண்ட காலம் வரையில் கண்டுபிடிக்கப்படாமலே இருக்கும் பட்சத்தில், அது கைகளில் அடிக்கடி சிலிர்ப்பது போன்ற உணர்வைக் கொடுக்கும் அல்லது உணர்வுகள் ஏதுமின்றி மரத்துப் போகச் செய்யும்.