ஃபேஷன்அழகு..அழகு..டிரென்டிங்புதியவை

பெண்களை கூடுதல் அழகாக்குவது மூக்குத்தி

பெண்களை கூடுதல் அழகாக்குவது மூக்குத்தி
‘பெண்களை கூடுதல் அழகாக்குவது மூக்குத்தி’ என்பது அனைவரின் கருத்தாகவும் இருக்கிறது. பெண்களின் முகத்தில் லேசான குறைபாடுகள் இருந்தாலும் அதை மறைத்து கூடுதல் ஈர்ப்பு சக்தியை தருவது மூக்குத்தியின் சிறப்பாகும். நெற்றிக்கு பொட்டு, கண்களுக்கு மை, உதடுகளுக்கு லிப்ஸ்டிக்.. போன்று முகத்தில் ஒவ்வொரு உறுப்பையும் அழகு செய்யும் பெண்கள் அந்த வரிசையில் மூக்குக்கு மூக்குத்தி சூடிக்கொள்கிறார்கள்.

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாரம்பரிய திருமண ஆபரணங்களில் குறிப்பிடத்தக்கதாக மூக்குத்தி இருக்கிறது. மூக்குத்தியின் வரலாறு மிகவும் பழமையானது. ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வேதங்களிலும் மூக்குத்திக்கு சிறப்பிடம் தரப்பட்டிருக்கிறது. இடது பக்கம் மூக்கு குத்தினால் அந்த பெண்களுக்கு மாதவிலக்கு கால வலியும், பிரசவ வலியும் குறையும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

பெற்றோர், தாய்மாமன், கணவர் ஆகியோரிடமிருந்து மட்டுமே பெண்கள் மூக்குத்தி வாங்க வேண்டும் என்ற நிபந்தனை முன்காலத்தில் இருந்தது. வேறுயாரிடமாவது இருந்து மூக்குத்தியை பெற்றால் அது குற்றமாகவும் கருதப்பட்டது.

மூக்கு குத்துவதிலும் பெண்கள் கவனிக்கவேண்டிய விஷயங்கள் இருக்கின்றன. அனுபவம் வாய்ந்தவர்களிடமே மூக்கு குத்தவேண்டும். நாடி நரம்புகள் பாதிக்காத அளவுக்கு குத்துவது அவசியம். டாக்டர்களும் மூக்கு குத்திவிடுவதுண்டு. பியூட்டி பார்லர்களில் சென்று ‘ஷூட்’ செய்யும் பெண்கள், முதலிலே அவர்களுக்கு அதில் இருக்கும் அனுபவத்தைபற்றி தெரிந்துகொள்ளவேண்டும்.

தங்கத்திலான மூக்குத்தியே சிறந்தது. வேறு உலோகங்களில் செய்யப்பட்ட மூக்குத்திகள் பெரும்பாலானவர்களுக்கு அலர்ஜியை ஏற்படுத்தும். மூக்குத்தி அணிந்ததும் அந்த பகுதியில் ஏதாவது அலர்ஜி ஏற்பட்டால் டாக்டரை சந்தித்து ஆலோசனை பெற வேண்டும்.

மூக்கு குத்தியதும் பெரும்பாலானவர்கள் அவ்வப்போது அந்த பகுதியை தொட்டுப்பார்ப்பார்கள். தொடுவது தவறு. தொட்டால் அந்த காயம் ஆற தாமதமாகும். காயம் முழுவதும் ஆறுவதற்கு முன்பு மூக்குத்தியை கழற்றக்கூடாது. கழற்றினால் அந்த துவாரம் விரைந்து மூடிவிடும்.

மூக்குத்தி அணிபவர்கள் குளித்துவிட்டு தலை துவட்டும்போதும், கூந்தலை சீவும்போதும் கவனம் கொள்ளவேண்டும். துணியோ, முடியோ மூக்குத்தியில் சிக்கிக்கொள்ளும். அது வலி நிறைந்த அவஸ்தையாகிவிடும். மூக்குத்தி அணிந்த காயம் ஆறும்வரை மல்லாந்து படுத்து தூங்கவேண்டும். இல்லாவிட்டால் தலையணை விரிப்பு போன்றவைகளில் மூக்குத்தி பட்டு வலிதோன்றும்.

மூக்குத்தி பற்றி நினைக்கும்போது பிரபல பின்னணி பாடகி உஷா உதூப் நினைவுக்கு வருவார். அவர் மேடை நிகழ்ச்சிகளில் பாடும்போது பெரிய மூக்குத்தி அணிந்திருப்பார். “நான் மூக்குத்தி அணிந்து நாற்பது ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டன. என் மகள் அஞ்சலி வயிற்றில் இருக்கும்போது நானே ஆசைப்பட்டு குத்திக்கொண்டேன். எனது குடும்பத்தில் நான் மட்டும் மூக்கு குத்தியிருக்கிறேன். தமிழ்நாட்டில் பிரபலமான 8 கற்களை கொண்ட முக்கோண வடிவிலான ‘போஸரி’ மூக்குத்தியும் வைர மூக்குத்தியும் எனக்கு ரொம்ப பிடிக்கும்’ என்கிறார்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker