ஆரோக்கியம்புதியவை
பிராணாயாமம் – உடலில் ஏற்படுத்தும் மாற்றங்கள்
மூச்சு ஒரு கருவி மட்டுமே. சுவாசத்தை பயன்படுத்தாமலேயே சக்தியை நாம் கட்டுப்படுத்த முடியும். சக்திநிலையின் மீது கொண்டுவரும் கட்டுப்பாட்டிற்கும் மூச்சிற்கும் சம்பந்தம் இல்லை. ஆரம்பக் கட்டத்தில் சுவாசத்தை ஒரு கருவியாக நாம் பயன்படுத்துகிறோம். அதனால், பிராணாயாமம் என்பது காலையிலும் மாலையிலும் மட்டும் செய்யும் மூச்சுப் பயிற்சி மட்டுமல்ல. நீங்கள் தொடர்ந்து இந்தப் பயிற்சி செய்துவரும்போது நாள் முழுவதுமே உங்கள் சுவாசம் வித்தியாசமாக இருப்பதை உணர முடியும்.பிராணாயாமம் செய்யத் துவங்கியவுடன் சிலருக்கு எடை குறையும் வேறு சிலருக்கோ எடை கூடும். இதை நீங்கள் கவனித்திருக்க முடியும்.உங்கள் ஜீரண சக்தி மந்தமாக இருந்தால் உணவை உடலாக மாற்றக்கூடிய திறன் குறைப்பாட்டுடன் உள்ளது என்று அர்த்தம். பிராணாயாமப் பயிற்சி துவங்கியவுடன் ஜீரண சக்தி அதிகரிப்பதை உணரலாம். இதனால் உணவை சதையாக மாற்றும் உங்கள் திறனும் அதிகரிக்கலாம். உணவினை வெறுமனே கழிவாக வெளியேற்றும் தேவை குறைந்து போகலாம். இதனால் உங்கள் உடல் எடை கூடலாம். அதுவே உங்கள் ஜீரண மண்டலம் நன்றாக செயல்படும்போது நீங்கள் பிராணாயாமம் செய்யத் துவங்கினால் தாங்கள் உண்ணும் உணவு வேறொரு சூட்சும சக்தியாக உருமாற்றம் அடையும். இப்போது நீங்கள் உடல் எடையை இழக்கத் துவங்குவீர்கள். எத்தனை உணவு உண்டாலும் உடல் எடை குறைவதை கவனிக்க முடியும்.
சாதாரண பலன்கள் தொடங்கி, நாடிகளைச் சுத்தம் செய்தல், மனதை ஆரோக்கியமாக மாற்றுதல் என்று மிக அரிய சக்திகளை பிராணாயாமம் மூலம் பெறமுடியும். தியானத்திற்கும் வாழ்வின் தெளிவான பார்வைக்கும் பிராணாயாமம் காரணமாக இருக்க முடியும்.
பிராணாயாமத்தைச் சரியாக எப்படிச் செய்வது? ஒரு மூக்கை முழுவதுமாக மூடிக்கொண்டு, மற்றொரு மூக்கு வழியாக மூச்சை உள்ளே இழுப்பதோ அல்லது வெளியே விடுவதோ செய்ய வேண்டும். அப்போது அந்த மூக்கு பாதி மூடியிருக்க வேண்டும். அப்போதுதான் உள்மூச்சு-வெளிமூச்சின் அளவு நன்கு நீளும்; மூச்சு மென்மையாகவும் சீராகவும் இருக்கும். இதில் உள்மூச்சையோ-வெளிமூச்சையோ அல்லது இரண்டையுமோ நீட்டச் செய்யலாம். இரு மூச்சு களுக்கு இடையில் இருக்கும் இடைவெளியைக் கூட்டலாம்.