உறவுகள்புதியவை

உறவுகளின் உன்னதமும்… பிரியமுமான உறவுகளும்

உறவுகளின் உன்னதமும்... பிரியமுமான உறவுகளும்

ஒரு குடம் தண்ணீர் ஊற்றி ஒரு பூ பூத்தது. யானை, யானை அம்பாரி யானை, அரசனாக அமரச் சொல்லும் யானை.

உனக்குக் கொஞ்சம், எனக்குக் கொஞ்சம், உவகையுடன் தின்னலாம். கை கோர்த்தே நாம் காலம் முழுதும் சஞ்சரிக்கலாம். உறவென்னும் பாறையில் உயிருள்ளவரை உலவலாம் இந்தப் பாடல்கள் நினைவிருக்கிறதா? சிறு வயதில் பள்ளி விடுமுறையில் தாத்தா, பாட்டி வீட்டுக்குச் சென்றவர்களுக்கு கிராமத்தில் இந்த விளையாட்டை விளையாடியது நினைவில் இன்னும் இருக்கலாம். ஐம்பது வயதை கடந்த அனைவரிடமும் மாறாத வாசனையாய் இந்த உணர்வுகள் இருக்கும். அமைதி, பொறுமை, நிதானம் என்று வாழ்வில் ஒவ்வொன்றையும் திட்டமிட்டு வாழ்பவர்கள் நிச்சயம் தங்கள் பால்ய காலத்தை உறவுகளுடன் கழித்தவர்களாய்த்தான் இருப்பார்கள்.


ஏட்டுக் கல்வியை பல்கலைக்கழகங்கள் கொடுக்கலாம். ஆனால் வாழ்க்கைக் கல்வியை இந்த மாதிரி உறவுகள்தான் கற்றுக் கொடுக்கும். எல்லா உறவுகளும் அன்பின் நெருக்கமாய் இருப்பதில்லை. அதிலும் போட்டி, பொறாமை, கோபம் என்று எல்லாம் இருக்கும். ஆனாலும் விட்டுக்கொடுத்து அன்பும் பாசமுமாய் வாழ்ந்தால் எவ்வளவு ஆனந்தமாய் இருக்கும் என்று உணர்த்த முடியும்.

பள்ளி விடுமுறை விட்டதுமே ஊருக்குப் போகும் குஷி ஆரம்பித்து விடும். கிராமம் என்றால் உற்சாகத்துக்கு கேட்கவே வேண்டாம். பொழுது போவது தெரியாது. நீரை வாரி இறைக்கும் பம்புசெட், நீச்சல் கற்றுக்கொடுக்கும் கிணறு, தணலில் சுட்டுச் சாப்பிடும் கம்பு, கேழ்வரகு, சோளம், இளநீர், நுங்கு என்று இயற்கையான தின்பண்டங்கள், தாத்தா தென்னை ஓலையில் செய்து கொடுக்கும் கிளி, குருவி, சைக்கிள் ஓட்ட கற்றுத்தரும் மாமா, வெள்ளி, சனியில் தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பாட்டி விடும் அத்தை, சித்திகள் என்று அனைவரும் அன்பை கற்றுக்கொடுத்தார்கள். அன்பைவிட அக்கறையே அதிகம் இருக்கும் அவர்கள் செயலில்.

பங்கிட்டு வாழ கற்றுக்கொடுக்கும் பல்லாங்குழி, விட்டுக்கொடுத்து வாழ் எனச் சொல்லும் கிட்டி, கிளித்தட்டு, அத்துடன் கும்மி. இன்று பல ஆங்கில டாக்டர்கள் இரு கையையும் தட்டுங்கள் அது இதயத்திற்கு இதமானது என்கிறார்கள். வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும் என்கிறார்கள். இன்று பல இடங்களில் கை தட்ட பயிற்சி, சிரிக்க ஒரு கிளப் என்று நடக்கிறது.


வீட்டில் நாலு உறவுகள் அவர்களின் குழந்தைகள் சேர்ந்து இருக்கும்போது அங்கு தெறிக்கும் சிரிப்பலைகள் மூலம் தீர்க்காத நோய்களும் உண்டா? இரவில் மீந்துப்போன குழம்பு வகைகளைச் சுட வைத்து பாட்டி சாதம் பிசைந்து போடுவாள். அதில் உள்ள ருசி எந்த ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் கிடைக்கிறது.? இருப்பதை பங்கிட்டுச் சாப்பிடும் வழக்கத்தையும் அல்லவா அது கற்றுத் தருகிறது. அனைவரும் ஒரே இடத்தில் பேதமின்றி படுத்திருக்க, பாட்டியும், தாத்தாவும் சொன்ன இதிகாசங்கள், நல்ல பண்புகளையும், பழக்க வழக்கங்களையும் கற்றுத் தந்தது. தாத்தாவின் கை பிடித்து நடக்கும்போது எதிர்ப்படுபவரிடம் அவர் பேசுவதும், நடந்து கொள்வதும் நமக்குப் பாடமானது. வீட்டுக்கு வந்தவர்களை பாட்டி வரவேற்கும் முறையைப் பார்த்து மரியாதை என்பதைக் கற்றுக்கொண்டோம். நேசிப்பையும், உணவில் ஆரோக்கியத்தையும், அன்பையும், பணிவையும், நல்ல பண்புகளையும் அவர்கள் வாழ்ந்து காட்டுவதன் மூலம் கற்றுத் தந்தார்கள்.

ஆனால் இன்று? இன்று இளைய சமுதாயத்தின் உலகம் அலைபேசியின் தொடுதிரையிலும், கணினியிலும் அடக்கிவிட்டது. வீட்டுக்கு யாராவது வந்தால் கூட வாங்க என்று கூப்பிடத்தோணாமல் வாட்ஸ் ஆப்பிலும், முகநூலிலும் மூழ்கிக்கிடக்கிறார்கள். காசு மட்டும் அல்லவே வாழ்க்கை. அடிப்படை பண்புகளை எந்த கல்வி நிறுவனம் கற்றுத் தருகிறது?


இன்று பெருகி நிற்கும் வன்முறை, பாலியல் கொடுமைகள், பயங்கரவாதம் இந்த அளவுக்கு அன்று இல்லையே? காசு சம்பாதிக்கும் எந்திரமாக்கி விட்டோம் குழந்தைகளை. விடுமுறை என்பது அவர்களுக்கு சென்டிரல் ஜெயிலில் இருந்து சப்-ஜெயிலுக்கு மாறும் நாள். ஒரு கூட்டுக் குடும்பத்தில் எல்லா உறவுகளிடமும் அனுசரித்துப் போகப் பழகியவனால் சமுதாயத்தில் எந்த இடத்திலும் கலந்து பழகி வெற்றிபெற முடியும்.

ஒரு கூட்டுக் குடும்பத்தில் ஐந்தாறு பெண் குழந்தைகளிடம் கலந்து பழகியவனால் மற்றொரு பெண்ணை தவறான எண்ணத்துடன் பார்க்கவோ, நடக்கவோ முடியாது. படித்து நல்ல வேலை கிடைத்து பையன் வெளிநாடு சென்றாலும் அவனின் வயதான பெற்றோர்களைக் கவனித்துக்கொள்ள கூட்டுக் குடும்பத்தில் உறவுகளின் அனுசரணை இருக்கும். அன்பும், பிரியமுமான குடும்பத்தில் வளர்ந்தவன் வெளிநாட்டுக்குத் தன்னை அடிமை சாசனம் எழுதித் தரமாட்டான். முதியோர் இல்லங்கள் தேவை இல்லாமல் போயிருக்கும். உறவுகளுடன் வாழ்ந்து அவர்களை மதிக்கவும், நேசிக்கவும் கற்றவன் ஆசிர்வதிக்கப்பட்டவன்.

தன் மகன்-மகள் டாக்டர், என்ஜினீயர் ஆக வேண்டும் என்று லட்சக்கணக்கில் செலவு செய்யும் பெற்றோர்கள் அவர்கள் ஒரு நல்ல மனிதனாக வாழ என்ன செலவு செய்கிறார்கள்? வாழ்க்கை, பல்கலைக்கழகங்களிலோ, கோடைக்கால பயிற்சி வகுப்பிலோ இல்லை. பாட்டி, தாத்தா வீட்டில், உறவுகளின் குழுவில் இருக்கிறது, நமது கலாசாரம், பாரம்பரியத்தைக் கடத்திக்கொண்டு வருகிறவர்கள் அவர்களே.


விடுமுறை தினங்களில் உறவுகளின் வீட்டுக்கு அழைத்துச் செல்லுங்கள். கிராமத்தில் நடக்கும் திருவிழாவிற்கு, பாட்டி, தாத்தா வீட்டுக்கு அனுப்புங்கள். நல்ல பழக்க வழக்கங்களை கற்றுத்தர வேண்டாம். அவர்களே கற்றுக்கொள்வார்கள்.

சுற்றத்தின் அழகு சூழ இருத்தல் என்கிறார் அவ்வையார். அன்பும், பிரியமுமான உறவுகள் அருகில் இருந்தாலே போதுமே. நாம் மற்றவர்கள் அப்படி இருக்க வேண்டும் என்று நினைப்பதை விட முதலில் நாம் நல்ல உறவுகளாக இருக்கலாம். நம் வீட்டில் அவர்கள் வருவதை அனுமதிக்கலாம். அன்பாய் விருந்தோம்பலாம். நாம் என்ன செய்கிறோமோ அதுதான் நமக்கு திரும்பக் கிடைக்கும். டாலர்களில் இல்லை வாழ்க்கை. பெற்றோர்கள் இருக்க வேண்டியது முதியோர் இல்லங்களில் இல்லை. குழந்தைகளுக்கு நாம் சேர்த்து வைக்க வேண்டியது செல்வத்தை அல்ல. அதைவிட உயர்வான நல்ல கல்வி. அன்பான சுற்றம், உறவுகள்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker