பெற்றோர் குழந்தைகளிடம் மனம்விட்டு பேச வேண்டும்
தற்கால குழந்தைகள் அதிக அறிவாற்றலுடன் திகழ்கின்றனர். அவர்களுக்கு செக்ஸ், மாதவிடாய், மனநிலை, மது, போதை உள்ளிட்டவை குறித்து தெளிவுபடுத்துவது அவசியம். ஒருவேளை நீங்கள் இதுகுறித்து குழந்தைகளுடன் பேசாவிட்டாலும், அவர்கள் இணையம் வாயிலாக அறிந்து கொள்ளத்தான் போகிறார்கள்.
உங்கள் குழந்தைகளின் வயதிற்கு ஏற்ப, செக்ஸ், மாதவிடாய், உடல் மீதான ஈர்ப்பு, நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் குறித்து கொஞ்சம், கொஞ்சமாக பேச ஆரம்பிக்க வேண்டும். இது குழந்தைகள் உடனான நட்புறவிற்கு மிகுந்த உதவியாக இருக்கும். இதன்மூலம் குழந்தைகளுக்கு உங்கள் மீது நம்பிக்கை பிறந்து, எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ளும் மனப்பான்மை உருவாகும்.
வயதிற்கேற்ப செக்ஸ் கல்வி அளிக்க வேண்டும். எல்லாவற்றையும் ஒரே தடவையில் கூற வேண்டாம். ஒவ்வொரு விஷயமாக கூறும் போது, அவர்கள் மெல்ல சிந்தித்து புரிந்து கொள்வார்கள். பருவமடைதலின் போது ஏற்படும் மாற்றத்தை, குழந்தைகளுக்கு தெளிவாக புரிய வைக்க வேண்டும். உடல் வளர்ச்சியின் ஒரு பகுதியே என்றும், இது ஒரு சராசரி நிகழ்வே என்றும் தெளிவாக விளக்க வேண்டும்.
ஆல்கஹால், புகைப்பிடித்தல் ஆகியவற்றில் இருந்து குழந்தைகளை எவ்வளவு மறைத்து வைத்தாலும், ஒரு கட்டத்தில் தானாகவே அறிந்து கொள்வார்கள். இதனை தவறாக புரிந்து கொண்டு, தீய பழக்கங்கள் ஏற்படாமல் இருக்க, நண்பரைப் போல அவர்களுக்கு வழிகாட்ட வேண்டும். இவற்றையெல்லாம் டீன் – ஏஜ் பருவத்தில் எடுத்துரைப்பது சிறந்தது.
உடல் சுரப்பிகளின் தூண்டுதலால், ஆர்வ மிகுதியால் எல்லாவற்றையும் முயற்சித்து பார்க்க தோன்றும். இதுபோன்ற சமயங்களில் தீய பழக்கங்களால் ஏற்படும் உடல் பாதிப்புகள் குறித்து விளக்க வேண்டும். இதுதொடர்பாக விழிப்புணர்வு செய்திகள், வீடியோக்கள் உள்ளிட்டவற்றை குழந்தைகளுக்கு காண்பித்து, அறிவுரை வழங்க வேண்டும்.
வாழ்க்கையில் தோன்றும் ஏற்ற, இறக்கங்கள் மற்றும் வெற்றி, தோல்விகள் ஆகியவற்றை பெற்றோர்களின் வளர்ப்பின் படியே, குழந்தைகள் கையாள்வார்கள். அதாவது, பள்ளி தேர்வில் குறைந்த மதிப்பெண்கள், நிராகரிப்பதால் ஏற்படும் மனச்சிதைவு உள்ளிட்டவை இதில் அடங்கும்.
தோல்வி என்பது, நீங்கள் சரியாகச் செயல்படவில்லை என்பதைக் குறிக்காது. இது ஒரு அனுபவம். சூழ்நிலையைப் புரிந்து கொண்டு, தேவையை நோக்கி நடைபோட வேண்டும் என்று புரிய வைக்க வேண்டும். தோல்வியடையும் சமயங்களில் குழந்தைகளை திட்டாமல், அடிக்காமல் சரியான உதாரணங்களுடன் நம்பிக்கை ஊட்ட வேண்டும்.