உலக நடப்புகள்புதியவை

மகளுக்கு தேவை பணமல்ல.. நல்ல வழிகாட்டுதல்..

மகளுக்கு தேவை பணமல்ல.. நல்ல வழிகாட்டுதல்..

பெற்றோரின் முக்கியமான கடமைகள் எவை? என்று கேட்டால், உடனே பல பெற்றோர்கள் ‘குடும்பத்துக்கு தேவையான பணத்தை சம்பாதிப்பது, குடும்பத்தை சரியான முறையில் நிர்வகிப்பது, குழந்தைகளை நன்றாக படிக்கவைப்பது..’ என்று சொல்வார்கள். இவை எல்லாம் கடமைகள்தான். அவைகளைவிட முக்கிய கடமைகளில் ஒன்று, காலத்துக்கு ஏற்ற விஷயங்களை கவனமாக பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுத்து அவர்களது மனதில் பதியவைப்பது!

காலத்திற்கு ஏற்ற விஷயங்கள் என்பவை எவை?

தற்போது சிறுமிகளும், டீன்ஏஜ் பெண்களும் பாலியல் தொடர்புடைய சிக்கல்களில் எளிதாக மாட்டிக்கொள்கிறார்கள். செல்போன், இன்டர்நெட் போன்றவை அதற்கு காரணமாக இருக்கின்றன. பெற்றோர் கவனமாக இருந்து, பிள்ளைகளுக்கு விழிப்புணர்வு ஊட்டும் கடமையை செய்தால் அவர்கள் அது தொடர்புடைய சிக்கல்களில் மாட்டிக்கொள்வதை தவிர்க்கலாம்.

இதை சிறுமிகளுக்கும், டீன்ஏஜ் பெண்களுக்கும் சொல்லிக்கொடுப்பது எளிது. பாலியல்ரீதியாக பெண்கள் பாதிக்கப்படும் சம்பவங்கள் இப்போது அடிக்கடி நடக்கின்றன. அப்படி ஒரு சம்பவம் நடக்கும்போது அந்த சம்பவம் எப்படி நடந்தது, ஏன் நடந்தது என்று அம்மாக்கள் மகள்களுக்கு சொல்லிக்கொடுக்கவேண்டும். அப்படி ஒரு சம்பவம் நடந்தால் எப்படி அதில் இருந்து தப்பிக்கவேண்டும் என்றும் வழிகாட்டவேண்டும். இதை பற்றி பேசும்போது குடும்பத்தில் உள்ள அனைவருமே அதில் கலந்துகொள்ளவேண்டும். தங்கள் கருத்துக்களையும் பக்குவமாக எடுத்துரைக்கவேண்டும்.


பெண்கள் இப்போது எல்லா இடங்களுக்கும் தனியாக செல்லவேண்டியதிருக்கிறது. அங்கே அவர்கள் அறிமுகமற்ற நபர்களை சந்திக்கவேண்டிய சூழ்நிலை உருவாகிறது. அறிமுகமற்ற ஆண் களோடு பேசும்போது எப்படி எல்லாம் முன்னெச்சரிக்கையாக நடந்துகொள்ளவேண்டும் என்பதை மகள்களுக்கு கற்றுக்கொடுங்கள். அப்படிப்பட்டவர்களிடம் தங்களை பற்றிய தனிப்பட்ட தகவல்களை எந்த அளவுக்கு பகிர்ந்துகொள்ளலாம். செல்போன் எண்ணை கொடுக்கலாமா? கூடாதா? என்பதையும் அவர்களுக்கு சொல்லித்தரவேண்டும்.

செல்போன், இன்டர்நெட் போன்றவை மூலம்தான் சிக்கலுக்குரிய பந்தங்கள் உருவாகின்றன. அதனால் மகள் எதற்காக செல்போன், இன்டர்நெட் போன்றவைகளை பயன்படுத்துகிறாள் என்பதை பெற்றோர் கண்காணிக்கவேண்டும். அதற்காக அம்மா, மகளிடம் தோண்டித்துருவி துப்பறிய வேண்டியதில்லை. அவளது நண்பர்கள் யார், அவர்களது நடவடிக்கைகள் எப்படி இருக்கின்றன என்பதை எல்லாம் அம்மா அறிந்திருக்கவேண்டும். எப்போதும் அவர்கள் நட்பில் ஒரு கண்வைத்திருப்பது நல்லது.

பள்ளி இறுதிக்காலத்திலே இப்போது காதல் பூத்துவிடுகிறது. அது ஹார்மோன் செய்யும் விந்தையால் ஏற்படு்ம் இனக்கவர்ச்சிதான். நட்பின் புனிதத்தை எடுத்துக்கூறி, எல்லோரிடமும் ஒரே மாதிரி நட்பு பாராட்ட கற்றுக்கொடுங்கள். நட்பில் ஆண், பெண் என்ற பேதம் இல்லை. எல்லாவற்றுக்கும் ஒரு எல்லை இருப்பதை உணர்த்துங்கள். நட்பு எல்லைதாண்டி காதலாகிவிடாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.

ஒருவேளை காதல் தொடர்பு ஏதாவது இருப்பதாக அறிந்தால், நிலைகுலைந்து போகாதீர்கள். மகளை அடக்குதல், அடித்தல், முடக்கிப்போடுதல் போன்றவை எதிர்விளைவுகளையும், பழிவாங்கும் உணர்வுகளையும் தோற்றுவித்துவிடும். அதனால் காதலின் நிஜங்களை புரியவைத்து மனதளவில் மாற்றத்தை உருவாக்கவேண்டும். சரியான பருவத்தில் ஏற்படும், சரியான காதலுக்கு தான் ஒருபோதும் எதிரியல்ல என்பதை புரியவைத்து, பிரச்சினையை சுமுகமாக தீர்க்க முன்வரவேண்டும்.


காதலில் சிக்கும் பெரும்பாலான பெண்கள் பயந்துவிடுகிறார்கள். அதற்கு இரண்டு விதமான காரணங்கள் இருக்கமுடியும். ஒன்று, காதலர் ‘எமோஷனல் பிளாக்மெயில்’ செய்து அவளை மிரட்டலாம். அவள் தன்னை காதலிக்காவிட்டால் தற்கொலை செய்துகொள்வேன் என்பது போலெல்லாம் பேசி அவள் மனதில் கலவரத்தை ஏற்படுத்தலாம். இரண்டு, அவள் சம்பந்தப்பட்ட போட்டோக்கள் எதையாவது உருவாக்கிவைத்துக்கொண்டு மிரட்டிக் கொண்டிருக்கலாம். இப்படிப்பட்ட மிரட்டலுக்கு உள்ளாகி ஏற்கனவே மிரண்டு போயிருக்கும் பெண்ணை பெற்றோரும் தங்கள் பங்குக்கு மிரட்டினால் அவள் மனதளவில் நொறுங்கிப்போய்விடுவாள்.

அதனால் பெற்றோர் அவள் நம்பிக்கையை பெற்று, பக்குவமாக பேசி உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும். அவள் உண்மையை சொன்ன பிறகு, ‘நடந்தது நடந்துவிட்டது. நீ எதற்கும் கவலைப் படாதே. எது வந்தாலும் நாங்கள் பார்த்துக்கொள்வோம்’ என்று நம்பிக்கையூட்டவேண்டும். நம்பிக்கைதான் இந்த பிரச்சினையை தீர்க்கும். மாறாக மகளிடம் அவநம்பிக்கையை உருவாக்கிவிட்டால் பிரச்சினை பெரிதாகிவிடும் என்பதை பெற்றோர் உணர்ந்து கொள்ளவேண்டும்.

இப்போது டீன்ஏஜ் பெண்கள் உடை உடுத்தும் விஷயத்தில் அதிக சுதந்திரத்தை எதிர்பார்க்கிறார்கள். அவர்களிடம் மாடர்ன் டிரஸ் அணியும் ஆர்வம் அதிகரிக்கும். ஆனால் அது அவள் உடலுக்கு பொருத்தமாக இருக்கிறதா என்பதைப் பார்த்து சரியான முறையில் அணியச் செய்யவேண்டும். உடல் உறுப்புகளை பாதுகாப்பதில் உடையின் பங்கு என்ன என்பதை மகள்களுக்கு புரியவைக்கவேண்டும். உங்கள் மகள் எப்போதும் உங்களுக்கு மகளாகத்தான் தெரிவாள். நீங்கள் அவளை எப்போதும் ஒரே மாதிரிதான் பார்ப்பீர்கள். ஆனால் வயதுக்கு தக்கபடி அவள் உடலில் மாற்றங்கள் உருவாகிக்கொண்டே இருக்கும். அவள் உடல் வளர்ந்துகொண்டே இருக்கும். அப்போது சமூகத்தின் பார்வை மாறிக்கொண்டே இருக்கும். அந்த பார்வையின் அர்த்தங்களை அவளுக்கு புரியவைத்து, அவளை எப்போதும் ஜாக்கிரதையாக இருக்கும்படி கூறுங்கள்.

உங்கள் மகளுக்கு எல்லா நேரமும் தைரியத்தையும், சமயோசிதத்தையும் ஊட்டிக்கொண்டே இருங்கள். ‘முடியாது’, ‘கூடாது’ ‘அதெல்லாம் நடக்காது’ என்று சொல்லும் தைரியம் எந்த பெண் களிடம் எல்லாம் இருக்கிறதோ அவர்கள் எதிரிகளின் எந்த வலையிலும் எளிதாக சிக்குவதில்லை. ‘முடியாது’ என்று சொல்ல தைரியம் இல்லாத பெண்களே பெரும்பாலும் பிரச்சினைகளில் சிக்குகிறார்கள்.

ஆண் ஒருவர் அனாவசியமாக பெண்ணின் உடலைத் தொடுதல், உடலை வர்ணித்தல், அனாவசிய அழைப்பு விடுத்தல் போன்ற எதிலாவது ஈடுபட்டால் அந்த நிமிடத்திலே விழிப்படைந்து கோபத்தையும், ஆக்ரோஷத்தையும் காட்டத் தெரியவேண்டும். ‘இந்த மாதிரி வேலைகளை எல்லாம் என்னிடம் வைத்துக்கொள்ளாதே’ என்று தைரியமாக சொல்லவேண்டும். அவ்வாறு தைரியமாக சொன்னால், ‘இந்தப் பெண்ணிடம் தன் எதிர்பார்ப்பு எதுவும் நடக்காது’ என்று அவன் ஒதுங்கி விடுவான்.



படித்துக்கொண்டிருக்கும் மகள் காதல் வசப்பட்டால், அவள் அவனை ‘உலகிலே மகா யோக்கியன்’ என்பாள். அதை அப்படியே தாய் நம்பிவிடக்கூடாது. ஒருவேளை அந்த பையன் வசதிபடைத்தவனாக இருப்பான். அதனால் மகளின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என்று நம்பி, அந்த காதலை ஒருபோதும் ஊக்குவிக்கக்கூடாது. ‘இப்போது நீ படிக்கவேண்டும். அதுமட்டுமே உன்வேலை. காதலை எல்லாம் உடனே ஒதுக்கிவிடு’ என்று கூறி, படிப்பின் முக்கியத்துவத்தையும், எதிர்காலத்தையும் நினைவுபடுத்துங்கள். எதை வேண்டுமானாலும் என் அம்மாவிடம் என்னால் பேச முடியும் என்ற நம்பிக்கையை மகளுக்கு கொடுங்கள். அப்படி ஒரு நம்பிக்கை அவளுக்கு ஏற்பட்டுவிட்டால், எந்த விஷயத்தையும் அவள் மனதில் வைக்கமாட்டாள். எல்லாவற்றையும் மனந்திறந்து பேசத் தொடங்கிவிடுவாள்.

டீன்ஏஜில் ஒரு பெண் செக்ஸ் பற்றி எதை எல்லாம் தெரிந்துகொள்ள வேண்டுமோ அதை எல்லாம் அவள் தன் தாய் மூலம் தெரிந்துகொள்வது நல்லது. தவறான புத்தகங்கள், தோழிகள், படங்கள் மூலம் அவள் தெரிந்துகொள்ள விரும்புவது நல்லதாக இருக்காது. அதனால் பாலியல் விஷயங்கள் பற்றி உங்கள் மகளிடம் பேசுங்கள். எல்லாவற்றையும் நாசுக்காக அவளுக்கு உணர்த்துங்கள். நீங்கள் உழைத்துக் களைத்து உங்கள் மகள்களுக்கு பொன், பொருள் சேர்த்து வைப்பது முக்கியமல்ல. அவர்கள் வாழ சரியான முறையில் வழிகாட்ட வேண்டியதே மிக அவசியம்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker